மனித சமூகத்திற்காக - சமத்துவத்திற்காக உருவானதுதான் சுயமரியாதை இயக்கம்!

பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவு நாள் ஆய்வு உரையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை,ஜூன்10   மனித சமூகத்திற்காக இருக்கக் கூடிய, சமத்துவத்திற்காக உருவானதுதான் சுயமரியாதை இயக்கம். எல்லோருக்கும் எல்லாம் - அனை வருக்கும் அனைத்தும் - என்பதுதான் இந்த இயக்கம்.  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-2

கடந்த 25.5.2021 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு  ஆய்வு பொழிவு -  ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் இரண்டாவது சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

அவ் ஆய்வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

'எனது அறிக்கையின் விளக்கம்'

இந்தத் தலையங்கம் 'எனது அறிக்கையின் விளக்கம்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. அதில் .வெரா. கூறியதில் முக்கியமானது... ‘‘இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும், பெரும் பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்ப தையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்" (ஈவெரா. அவர்களின் நேர்மைக்கும், தைரியத்துடன் பொறுப் பேற்கும் தலைமைத் தன்மைக்கும் உதாரண மாகும் இது).

மேலும் அந்தத் தலையங்கத்தில் ஈவெரா. எழுதியுள்ளதாவது. 'சர்க்காரின் கடுமையான அடக்கு முறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்துக்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொறுப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண் டிய அவசியத்திற்கு உள்ளானேன்.

'அப்படிப் பேசியதில் எனக்கும் ரஷ்யாவுக்கும் பணப் போக்குவரத்தோ பிரசார சம்பந்தமோ ஏதும் இல்லை என்று விளக்க வேண்டி இருந்ததோடு, சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பு இயக்கமல்ல வென்றும், சர்க்காரோடு ஒத்துழையா இயக்கமல்ல வென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும் மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு, அதன் ஆரம்ப கால முதல் நாளது வரை பல சமயங்களில் வெளியிடப்படும் பல மாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம் தீர்மானங்கள் முதலாகியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான் இருந்து வருகின்றதென்றும் விளக்கிக் காட்டினேன்.

'மற்றும் சட்ட விரோதமாக அல்லது ராஜத் துவேஷம் உண்டு பண்ணுவதற்காகப் பதிப்பிக்கப்பட்டதென்றோ, பேசப்பட்டதென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்குப் பதில் சொல்ல கடமைப் பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண்டேன்.

'இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்பந்தப் பட்ட விஷயங்கள் எனக்கு காட்டப்பட்டன.

'அதைக் கண்ட பிறகு அது ராஜத்துவேஷமான விஷயம் என்று சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும் அது எப்படியும் ராஜத்துவேஷமான விஷயம் என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன். உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விட்டேன். அதிகாரிகளும் அந்தப்படியே ஒப்புக் கொண்டார்கள்.

'ஆகவே இந்தச் சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக்குள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.

'நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமூகத் துறையில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல. ஆனால் சிறிது காலம் சென்ற பின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்றும் கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம், என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங்கொண்டு இயக்கத்தை அடக்க, அடக்குமுறைப் பிரயோகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று உணருகிறேன்.

இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன். ஆனால் ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமாதானக் கொள் கையைப் பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட் சேபணை இல்லை என்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மத கண்டனங்கள் செய்து கொள் ளலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

'சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சி களும் நிலைமைகளும் இருந்ததால், நான் இந்த சமாதானத்துக்கு வர வேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்ன வானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்லவேண்டும்.''

எங்கேயாவது ஓரிடத்தில் பதிவு செய்திருக்கலாம்!

இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கின்ற இந்நூலை எதற்காக எடுத்துச் சொன்னேன் என்றால், தந்தை பெரியாருடைய சிறப்புகளை மட்டும் எடுத்துச் சொல் வதற்காக மட்டும் இதை சொல்லவில்லை நான்; இவ்வளவு எழுதி, பாராட்டியிருக்கின்ற இடத்தில், எங்கேயாவது ஓரிடத்தில், ஒரு சிறு குறிப்பில், சிங்கார வேலருக்குத்தான் அழைப்பு வந்தது; அவருக்குப் பதிலாக பெரியாரைப் போகச் சொன்னார் என்று பதிவு செய்திருக்கலாம்.

அதுமட்டுமல்ல நண்பர்களே, நாகை முருகேசன் அவர்கள் பெரும்பாலும் பெரியார் திடலில்தான் இருப்பார். அவருக்கு விழாக்களை நடத்தினோம்; அதை தா.பாண்டியன் அவர்களே பாராட்டியிருக்கிறார். எங்கள் இயக்கம் நடத்தவதற்கு முன், நீங்கள் முந்திக் கொண்டு நடத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னார்.

நாகை முருகேசன் அவர்கள், அவ்வப்பொழுது அறிக்கைகளை அச்சடித்து கொடுத்துக் கொண்டே இருப்பார் கடைசி வரைக்கும்.

எந்த இடத்திலும் இதுபோன்ற ஒரு குறிப்புகளும் இல்லை. செவி வழிச் செய்தியாக அவர்கள் கேட்ட பொழுது, அதனை பதிவு செய்துவிட்டார்கள்.

உண்மைகள் தவறான திரிபுவாதத்திற்கு ஆளாகக் கூடாது!

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இரண்டு, மூன்று தவறான கருத்துகளைப் பரப்பக் கூடாது - சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி என்பதற்காகவும், அதேநேரத்தில், உண்மைகள் தவறான திரிபுவாதத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான்.

சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் என்பது எவ்வளவு பெரிய பொய். 1933 இல் போடப்பட்ட சுயமரியாதை இயக்கத் தீர்மானம்.

யாருக்கு சுதந்திரம்?

அதற்கு முன், ஹோம் ரூல் என்பதை எதிர்த்ததி னுடைய நோக்கம் என்ன? சுதந்திரம் என்பது சமத்துவத்திற்கு விரோதமான சுதந்திரம் என்று சொன்னால், யாருக்கு சுதந்திரம்? ‘மேட் ஓவர்' வாங்கினவனுக்குத்தான் சுதந்திரம்.

என்கிற கருத்துகளின் தெளிவிற்காகத்தான், மிக முக்கியமாக இந்தக் கருத்துகளை இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அப்படித் தெரிந்துகொண்டால்தான், சோஷியல் மீடியா, இணைய தளத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படும்பொழுது, பதிலடி கொடுப்பதற்கு, ஆதாரங் களை இதிலே இருந்து எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

மற்றபடி, சுயமரியாதை இயக்கம் எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்திருக்கிறது என்பதற்கு, தந்தை பெரியார் அவர்கள் எழுதியிருக்கின்ற ஒரு செய்தி யைச் சுட்டிக்காட்டி, இன்றைய உரையை நிறைவு செய்கிறேன்.

‘‘சுயமரியாதை இயக்கம் எதற்காக வரவேண் டும்? மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற் காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது.

சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றியமைக்க ஏற்படுத்தப்பட்டது.

சுயமரியாதை இயக்கம் உலகளாவிய இயக்கம் - மானுடம் தழுவிய இயக்கம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,

உலகத்தைப் பார்,

முன்னேறு,

மானிடப் பரப்பைப் பார்,

வானமும் வசப்படும்' என்றெல்லாம் சொல்லுகிறார் என்றால்,  மானுடப் பார்வைதான். அந்த இயக்கத்தின் லட்சியப் பார்வை.

ஒரு நாட்டில் உள்ளவர், மருந்தை கண்டுபிடித்தார் என்றால், அந்த நாட்டுக்கு மட்டும் அந்த மருந்து என்பதல்ல. நோய்க்குத் தகுந்தவாறு அந்த மருந்துகள் பயன்படுத்தப்படும். அதுபோன்றதுதான் சுயமரியாதை இயக்கமாகும்.

ஆகவே, ‘‘இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்படுவதே ஒழிய, சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்கு அநேக தொல்லைகளை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்'' என்றெல்லாம் கருத்து களைச் சொல்லிவிட்டு,

இன்னொன்றையும் அழகாகச் சொல்கிறார்.

இந்த இரண்டு விளக்கங்களையும், இளைஞர்கள் அழகாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சமூக வலைதளங்களில்கூட எடுத்துப் பயன்படுத்தலாம்.

தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்,

‘‘தோழர்களே, சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி ஏற்படவும், எல்லா மக்களையும் சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி, ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும்.

சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்க ளையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும். மற்றும் பல கொள்கைகளை அது கொண்டிருந்தாலும் மற்றபடி அது நம் எதிரிகள் சொல்லுவது போல் மதங்களையும், கடவுள்களையும் எதிர்ப்பதற்கு என்றே ஏற்பட்டதல்ல.

சுயமரியாதை இயக்கம் சிறிதும் பின் வாங்காது!

நமது நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி இல்லாமல் போனதற்கும் ஒற்றுமையும், சமத்துவமும் இல்லாமல் போனதற்கும் ஏற்பட்டுள்ள தடைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்லுவதிலும், அவைகளை ஒழிக்க முயற்சிப்பதிலும் உண்மையிலேயே சுயமரியாதை இயக்கம் சிறிதும் ஒளிமறை வில்லாமல் பாடுபடுகிறது.

இந்தக் காரியங்கள் செய்வதில் கடவுள்களோ, மதங்களோ வேறு எவைகளானாலும் சரி, அத்தொண் டிற்குத் தடையாயிருந்தால் அவற்றையும் ஒழிப்பதில் சுயமரியாதை இயக்கம் சிறிதும் பின் வாங்காது.''

கடவுள் மறுப்பு, மத மறுப்பு என்பதெல்லாம் எங்கே வருகிறது? சமத்துவத்திற்கு எதிரான ஒரு நிலையை இவர்கள் உண்டாக்குகிறார்கள். எனவேதான், எது, எது தடையாக இருக்கிறதோ - நம் இலட்சியம் சமத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்பொழுது, சகோதரத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்பொழுது, அந்தத் தடைகளை நாம் அகற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சின்ன உதாரணம் சொல்லுகிறார், இளைஞர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக இதோடு என்னுரையை நான் முடித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு எல்லோருக்கும் மிகத் தெளிவாகி விட்டது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அன்றைக்கு இராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்கவில்லை என்றால், இன்றைக்கு நம்மாட்கள் இவ்வளவு பேர் படித்திருக்க முடியுமா? டாக்டர்கள், என்ஜினியர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், நீதிபதிகள் எல்லாம் வந்திருக்க முடியுமா?

இதை நன்றாக எண்ணிப்பார்க்கவேண்டும். அன் றைக்கு இருந்த கஷ்டம் என்னவென்று தெரிய வேண்டும்.

அய்யா ஓர் உதாரணம் சொல்கிறார், 1938 இல் பேசிய உரையாகும்.

பழைய உரைகளை எடுத்து ஆதாரமாகச் சொல்கிறேன். சுயமரியாதை இயக்கம் தொடக்கக் காலத்தில், மக்கள் மத்தியில் எவ்வளவு ஆவேசமாக, இந்தக் கொள்கைகளுடைய அடிப்படை என்ன என்பதைப் பற்றி சொல்லும்பொழுது தந்தை பெரியார் சொல்கிறார்,

1.3.1938 இல் காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் பேசுகிறார்,

‘‘தாய்மார்களே, தோழர்களே, சூத்திரர்களுக்கும், பார்ப்பனரல்லாத மக்களுக்கும், சண்டாளர்களுக்கும் இதன் அருமையும், பெருமையும் தெரியாது. ஏனெனில், இப்படிப்பட்டவர்கள் மனிதத் தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு, அறிவைப் பெற்றவர்களும், கர்ப்பம் தரித்தவர்களும் ஆவார்கள்!

ஆதலால், அவர்கள் பிறக்கும் முன்பு, அறிவு பெறும் முன்பு அவர்கள் சமூகத்திற்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்று அவர்களுக்குத் தெரியாது.

ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன்.

‘‘சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர்.  அவரை அக்காலத்தில் 12 ரூ 15 ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில்கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான்.  அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து ‘‘ராவால ராவால தேவடா'' வரவேணும்  வரவேணும் சாமி என்று இரு கை கூப்பி (தூக்கி) கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார்.  அப்பார்ப்பன பில்கலெக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு ‘‘ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆஇண்டினி சூசே தானிக்கு'' ஏண்டா வெங்கிட்ட நாயுடு, அந்த வீட்டைப் பார்க்கப் போகலாமா?'' என்று கூப்பிடுவான்.  என் தகப்பனார் ‘‘! ஹா'' என்று சொல்லி வஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார்.  சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம், எல்லாம் ஒரு சாக்கில் கட்டி ஒரு பையனிடம் கொடுத்து, சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா என்று சொல்லி வழியனுப்புவார் - இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.

இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து ‘‘அடாபுடா'' என்று பேசுவான்.  இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும்.  இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். 

மனித சமூகத்திற்காக - சமத்துவத்திற்காக உருவானதுதான் சுயமரியாதை இயக்கம்!

சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு பார்ப்பனர்கள் நிலையும், மத உணர்ச்சியும் எப்படி இருந்தன? இப் பொழுது எவ்வளவு மாற்றம் அடைந்தன என்பவர் களுக்குத்தான் இது நன்றாகத் தெரியும்'' என்று தெளிவாகச் சொன்னார்.

ஆகவே, நண்பர்களே, மனித சமூகத்திற்காக இருக்கக்கூடிய, சமத்துவத்திற்காக உருவானதுதான் சுயமரியாதை இயக்கம்.

எல்லோருக்கும் எல்லாம் - அனைவருக்கும் அனைத்தும் - இதுதான் இந்த இயக்கம்.

இந்த இயக்கம், இதனுடைய தத்துவங்கள் - இயக்கத்தை நடத்துவதில் நாம் மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டங்கள் - அது இளைய தலைமுறையினருக்கும், இன்று இயக்கம் நடத்தக் கூடியவர்களுக்கும் தந்தை பெரியார் பாடமெடுக்கிறார் என்ற அளவில் இருக்கும்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

Comments