எனக்கு நெருங்கியவன் யார்? மனிதத் தன்மையில் நெருங்கியவன் யார்?

பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவு நாள் ஆய்வு உரையில் தமிழர் தலைவர்

சென்னை, ஜூன் 8 ‘‘பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் இங்கே வந்து, ‘‘ஹலோ'' என்று சொல்லி, என்னுடைய கையைப் பிடித்துக் குலுக்குகிறான். ஆனால், என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கின்றவனோ, என்னுடைய பார்வை படக்கூடாது; நான் அவன் அருகில் சென்றால், தீட்டுப்பட்டுவிடும்; காரணம், நான் கீழ்ஜாதி, அவன் மேல்ஜாதி என்று நினைத்துக்கொண்டு, என்னைப் பார்த்தவுடன் ஓடு கிறான். அவன் பக்கத்து வீட்டுக்காரன். உண்மையில் எனக்கு நெருங்கியவன் யார்? மனிதத் தன்மையில் நெருங்கியவன் யார்? என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-2

கடந்த 25.5.2021 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு  ஆய்வு பொழிவு -  ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் இரண்டாவது சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

அவ் ஆய்வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இங்கேதான் பெரியாருடைய வெற்றி இருக்கிறது. எத்தனை பேர் என்பது முக்கியமல்ல; எத்தனை லட்சங் கள் என்பது முக்கியமல்ல; அது சில நூறு பேராகக்கூட இருக்கலாம்; விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு இருக்கலாம். ஆனால், அவர்கள் உயிர்த் தோழர்கள் என்று சொல்கிறார்; அதுதான் மிகவும் முக்கியம்.

பெரியாருடைய வெற்றியே, அவருக்கு உயிர்த் தோழர்கள் உண்டு என்பதால்தான்.

அவருக்காக எல்லாவற்றையும் கொடுப்பார்கள். இன்றைக்கும் இந்த இயக்கத்திற்கு இருக்கின்ற பெருமை - இளைஞர்கள் அந்த அளவிற்குப் பக்குவ மாக இருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய அள விற்கு உண்மை.

திராவிடம் ஆயிரங்காலத்துப் பயிராக இருக்கிறது!

அவருடைய விளைச்சல் இன்று திராவிடம் ஆயிரங்காலத்துப் பயிராக இருக்கிறது, இன்றைக்கும் எதிரிகளால் எத்தனையோ விஷமங்களுக்கு ஆளாகி னாலும், இந்த இயக்கத்தை அசைக்க முடியவில்லை என்று சொன்னால், அதை அசைக்க முடியாது இருப்பதற்கு இதுதான் காரணம் நண்பர்களே!

எனவே,

கருத்து ஒருமித்தவர்களே அவரது உயிர்த் தோழர்கள். கருத்து வேறுபாடு உடையவர்கள் மற்றவர் களேயாவார்கள்.

என்று சொன்னார் தந்தை பெரியார்.

சென்ற சொற்பொழிவில் இதோடுதான் முடித்தோம். இப்பொழுது இரண்டு செய்திகளைச் சொல்லவேண்டும். துண்டு துண்டாகச் சொல்கிறேன். நிறைவாகச் சொல்ல வேண்டும் என்றால், பல நாள்கள் ஆகும். அவ்வளவு செய்திகள் ஏராளமாக இருக்கின்றன.

இன்னொரு செய்தி, திராவிட இயக்கம் - நீதிக்கட்சி தொடங்கி, இன்றைய திராவிட முன்னேற்றக் கழகம் வரையில் - தேசியத்தார்கள் மாறிவிட்டார்கள்.

ஏனென்றால், தேசிய அமைப்பே இன்றைக்கு பார்ப்பனரல்லாதார் கைகளில், தலைமையில் பெரும் பாலும் வரக்கூடிய அளவிற்கு அதனுடைய நிலைமை இருக்கிறது.

ஆனால், அன்றைக்கு அப்படியல்ல. ஆகவே, ‘‘தேசியம்'' என்ற பெயராலே பார்ப்பனர்கள், பார்ப்பனர் அரசாங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், வெள்ளைக்காரர்கள் அதுவரை இருக்கட்டும்; அதி காரத்தை கொடுத்தால், எங்களிடம் கொடுக்கட்டும்; பார்ப்பனர்கள் கைகளில் ஒப்படைக்கக் கூடாது" என்று தந்தை பெரியார் கூறினார்.

Home Rule is nothing but Brahmin Rule!

ஹோம் ரூல் என்று சொல்லக்கூடிய தனியாட்சி என்று - சுதந்திரம் என்று மற்றவர்கள் சொன்னாலும், Home Rule is nothing but Brahmin Rule! இதை நாம் மட்டும் சொல்லவில்லை; இதே கருத்தை, 200 ஆண்டுகளுக்கு முன்பு, மராட்டியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக, கல்வி உத்தியோகத்திற்குப் போராடிய சத்ய ஜோதக் சமாஜ் என்ற அமைப்பை உருவாக்கிய ஜோதிபாபூலே சொன்னார். அவரைப் பின்பற்றிய சாகுமகராஜ் சொன்னார். அதேபோலத்தான், இங்கே நீதிக்கட்சி ஆட்சியும் சொன்னது. அதனால்தான் பெரியார் அவர்கள், ‘‘சைமன் கமிஷனை நாங்கள் வரவேற்கிறோம்'' என்று சொன்னார்.

பொய் அழுகை அழுதார்கள்!

அப்பொழுது, ‘‘அய்யய்யோ, இவர்கள் வெள்ளைக் காரர்களை வரவேற்கிறார்கள்'' என்று குறை சொன் னார்கள் - பொய் அழுகை அழுதார்கள்!

‘‘இல்லை, எங்களுக்குபிராமின் ரூல்' தேவை யில்லை என்றார்.

இதற்கு அவர்கள் வாய்ப்பாக, அன்னிபெசன்டை பயன்படுத்தினார்கள்.

பிராமின் ரூல் என்பது  பார்ப்பனர் ஆட்சியா? வெள்ளைக்காரர் ஆட்சியா?

ஆகவே, பிராமின் ரூல் என்பது  பார்ப்பனர் ஆட்சியா? வெள்ளைக்காரர் ஆட்சியா? இரண்டில் எது உகந்தது? என்றால், வெள்ளைக்காரன் நமக்கு சமத்துவம் கொடுக்கிறான்; ஆனால், பார்ப்பனர் சமத்துவம் கொடுப்பதில்லையே.

அய்யா அழகாகச் சொன்னார், பலமுறை பொதுக் கூட்டத்தில் சொல்லியதை - இதற்குத் தொடர்பான செய்தியாக இருப்பதால், உங்களுக்கு நான் விளக்கிச் சொல்கிறேன்.

தேசாபிமானம் என்று சொல்லும்பொழுதுகூட, அதற்கு ஒரு விளக்கம் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள். மனிதப்பற்றுக்கு அடையாளமாக அதனைச் சொன்னார்.

எனக்கு நெருங்கியவன் யார்?

மனிதத் தன்மையில் நெருங்கியவன் யார்?

‘‘பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் இங்கே வந்து, ‘‘ஹலோ'' என்று சொல்லி, என்னுடைய கையைப் பிடித்துக் குலுக்குகிறான். ஆனால், என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கின்றவனோ, என்னுடைய பார்வை படக்கூடாது; நான் அவன் அருகில் சென்றால், தீட்டுப்பட்டுவிடும்; காரணம், நான் கீழ்ஜாதி, அவன் மேல்ஜாதி என்று நினைத்துக்கொண்டு, என்னைப் பார்த்தவுடன் ஓடு கிறான். அவன் பக்கத்து வீட்டுக்காரன். உண்மையில் எனக்கு நெருங்கியவன் யார்? மனிதத் தன்மையில் நெருங்கியவன் யார்?

எனவே, எனக்குப் பக்கத்து வீட்டுக்காரன் நண்ப னல்ல; பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தாலும், மனிதநேயத்தோடு என்னுடைய கையைப் பிடித்து குலுக்குகிறானே, அவன்தான் எனக்கு நண்பன்'' என்று எந்தத் தத்துவ அடிப்படையிலே சொன்னார்? தேசாபிமானமா? மனிதாபிமானமா? என்ற கேள்வியைக் கேட்டு, எனக்கு மனிதாபிமானம்தான் முக்கியம் என்றார்.

தேசம், உலகம் என்பதெல்லாம் பிறகு; மண்ணுக்கு இருக்கின்ற மரியாதையைவிட, மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை மிக முக்கியமானது - அவரைப் பொறுத்தவரை.

பெரியாருடைய சுயமரியாதை இயக்கமே சமத்துவத்திற்காகப் பிறந்ததுதான்; அந்த சுயமரியாதை இயக்கம் எதற்காக என்று சொல்லுகின்ற நேரத்தில், அய்யா அவர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். அதை அடுத்த சொற்பொழிவிலே சொல்கிறேன்.

இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பெரிய தேச பக்தர்கள் போன்று, பெரிய பெரிய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போன்று பேசுகிறார்கள்; ஆனால், அவர்கள் நம்மைப் பார்த்து, ‘‘இவர்கள் எல்லாம் தேச பக்திக்கு விரோதமானவர்கள்; தேச பக்தர்கள் அல்ல'' என்றெல்லாம் விரலைச் சுட்டுகிறார்களே, அவர்களுக்காகச் சொல்கிறோம்.

இந்த நாட்டில், யாரும் சொல்வதற்கு முன்பாகவே, சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்றால், நம்முடைய இளைஞர்கள் அந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

காங்கிரஸ் எப்படி தோற்றுவிக்கப்பட்டது; பத்தாண் டுகள் எப்படி கடவுள் வாழ்த்தையும் பாடினார்கள்; ராஜ வாழ்த்தையும் பாடினார்கள். எனவே, ராஜ விசுவாசம், கடவுள் பக்தி இரண்டையும் சேர்த்துத்தான் தீர்மானம் போட்டார்கள் பத்தாண்டுகளாக!

 ‘‘காங்கிரஸ் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகளும் - கறைபடிந்த அத்தி யாயங்களும்''

லெட்டர் பேடு போன்றுதான் வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். பிறகுதான் அவர்கள் மாறினார்கள் என்ற பல தகவல்கள் அடங்கிய,  ‘‘காங்கிரஸ் வரலாறு மறைக்கப்பட்டஉண்மைகளும் - கறைபடிந்த அத்தி யாயங்களும்'' என்ற புத்தகம் இப்பொழுது மறுபதிப்பு வெளிவந்திருக்கிறது  - கூடுதல் செய்திகளோடு.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அருமை நண்பர்களே நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், சுயமரியாதை இயக்கம், அதனுடைய இலட்சியம் என்று வருகின்றபொழுது, அதனைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு இந்த செய்திகளை யெல்லாம் சொல்லவேண்டும். நம்முடைய இயக்கம், கொள்கை, லட்சியம் என்று வந்தால், இயக்கக் கொள்கை என்ன? லட்சியம் என்பது என்ன? அன்றைக்குத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட் டார்கள்; ஏனென்றால், வெள்ளைக்காரர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக;

The Aims and Ideals of the Self-Respect Party of South India - சுயமரியாதை இயக்கத்தினுடைய லட்சியங்களும், நோக்கங்களும் என்ன? என்று சொல் லுகிறபொழுது,

‘‘The attainment of complete independence from the British and other forms of capitalist Government.''

‘‘நம்முடைய நோக்கமே, வெள்ளைகாரர்களுடைய ஆட்சியிலிருந்து பூரண விடுதலை வேண்டும் என்பதுதான்.''

இந்தக் கருத்தை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் - தந்தை பெரியார் 1933 இல்!

சுயமரியாதை இயக்க லட்சிய வேலைத் திட்ட கூட்டு நடவடிக்கை என்பதே பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித்துவ ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வதாகும்..

இந்தத் தீர்மானம் போடப்பட்டது 1.1.1933 ஆம் ஆண்டு. எங்களைப் போன்றவர்கள் இரண்டு மாத குழந்தையாக இருந்திருப்போம். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களில் சிலர் பிறந்திருக்கவே மாட்டீர்கள்.

அப்பொழுது ஆர்.எஸ்.எஸினுடைய பங்கு என்ன? இன்றைக்குப் பெரிய தேச பக்தர்கள் போன்று யார் பேசினாலும், இதை நன்றாக அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

‘‘வெள்ளைக்காரனே வெளியேறு'' என்று ஆரம் பித்தது 1942  ஆம் ஆண்டு - அதற்கு முன்பு ஒரு தீர்மானம் போட்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.

ஆனால், அந்த அடிப்படையில் திராவிடர் கழகம், வெள்ளைக்காரர்களை இருக்கச் சொன்னார்கள், அவர்களுக்கு வால் பிடித்தார்கள் என்று மிகவும் கொச்சையாகப் பேசுவதா?

சத்தியமூர்த்தி போன்றவர்கள் மிகத் தரக்குறைவாக மேடையில் பேசுகின்ற நேரத்தில், ‘‘இவர்கள் எல்லாம் பிரிட்டிஷ்காரர்களது பூட்ஸ் காலை நக்கியவர்கள்'' என்று சொன்னார்கள்.

வெள்ளைக்காரர்கள் கால்கள் சாக்ஸ் போட்டிருப்பதால், சுத்தமாக இருக்கும்!

உடனே தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘நான், வாதத்திற்காக சொல்கிறேன், ‘‘ஆமாம்பா, பார்ப்பான் காலை நக்குவதைவிட - அது ரொம்ப அசிங்கமாக இருக்கும்; அதைவிட வெள்ளைக்காரர்கள் கால்கள் சாக்ஸ் போட்டிருப்பதால், சுத்தமாக இருக்கும்'' என்று பதிலுக்குப் பதிலாகப் பொதுக்கூட்டங்களிலேயே பேசியிருக்கிறார்!

எனவே, சுதந்திரம் என்பதைப் பொறுத்தவரையில் இரண்டு வியாக்கியானம் சொல்லியிருக்கிறார்.

எது சுதந்திரம்? எது சுயராஜ்ஜியம்?

சமதர்ம ராஜ்ஜியமா? சுய ராஜ்ஜியமா?

அதேபோன்று, ‘‘பிராமின் ரூல், ஹோம் ரூல்'' என்று தன்னாட்சி என்ற பெயராலே, எல்லாவற்றையும் பார்ப் பனர்களின் கைகளில் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

அதை பெரியார் அவர்கள் எப்பொழுது உணர்ந்து பேசினார்கள்? சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பே, பெரியாருடைய சிந்தனை என்பது பிராமினோகிரசி என்பதை ஒழிப்பதிலேயே இருந்தது.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில், ஒன்றாக உட்கார்ந்து பிள்ளைகளுக்குப் பரிமாற முடியாது என்கிற தகராறு ஏற்பட்டு, காந்தியாரிடம் சமரசம் வரையில் சென்றபொழுது,

காந்தியார் என்ன தீர்வு சொல்கிறார் - வருணாசிரம தர்ம நம்பிக்கை உள்ளவர் அவர்.

‘‘இல்லை, இல்லை - பார்ப்பனர் பிள்ளைகள் இருப்பதினால், ..சு. அய்யர் சொல்கிறார், பிராமண சமையற்காரர்களை வைக்கலாம் என்று.''

காந்தியார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்!

டாக்டர் வரதராசுலு நாயுடுவும், திரு.வி..வும், பெரியாரைவிட மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். ‘‘அப்படி கூடாது; அப்பொழுதும் ஜாதியைத்தானே நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். காந்தியார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்'' என்கிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் 1924 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்கள் பேசுகிறார்,

‘‘The Caste question must be settled before the British leave this country; otherwise there will be Brahminocracy''

டெமாக்கிரசி'க்குப் பதில் பிராமிணோகிரசி'தான் ஏற்படும்!

பார்ப்பன நாயகம்தான் ஏற்படும்; டெமாக்கிரசிக்குப் பதில் பிராமிணோகிரசிதான் ஏற்படும். ஒரு ஆங்கில வார்த்தையை உருவாக்கிக் கொடுக்கிறார். (ஆதாரம்: ‘இந்து' நூற்றாண்டு மலர்)

எனவே நண்பர்களே, சுதந்திரத்திற்கு எதிராகப் போராடினார்கள் சுயமரியாதை இயக்கத்தவர்கள். திரா விட இயக்கத்தவர்கள் அல்ல. தங்களுடைய சுதந்திரம் அதற்குப் பறிபோகிறது. தங்களுடைய சமத்துவம் அதனாலே மற்றவர்களால் பறிக்கப்படுகிறது. நிரந்தர மாகத் தாங்கள் அடிமைகளாக, தங்களுடைய உரிமை களை விட்டுவிடுவதைத்தானே பார்க்கிறோம்.

ஆட்சி மாற்ற நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு தொலைநோக்கோடு சொன்னார்கள், இது ஒரு  Made Over  - அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

இன்னுங்கேட்டால், அய்யா அவர்கள் ஓரிடத்தில் எழுதும்போது ரொம்ப வேகமாகச் சொல்கிறார்,

நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தானே இருக்கிறோம்; ஆகவே, நாங்கள் எல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக நாங்கள் சமத்துவம் ஆகிவிடுவோம் என்று சொன்னால், எப்படி ஆக முடியும்?

ஜெயிலர் அதிகாரியாக இருக்க முடியுமே தவிர, அவர் கைதிகளுக்குத்  தந்தை ஆகிவிடுவாரா?

அதற்கு அருமையான ஓர் உதாரணம் சொல்கிறார்! அந்த உதாரணம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் உவமையாகும் - தந்தை பெரியாருடைய சிந்தனை யில் வந்தது.

‘‘சிறைச்சாலையில் அகப்பட்டவர்கள் எல்லாக் கைதி களும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனால், ஜெயிலரும், சூப்பிரண்டெண்டோ கைதிகளுக்குஅப்பா' ஆகிவிட முடியுமா? அவர் ஒரு அதிகாரி, அவ்வளவுதான். அந்த அதிகாரிகளுக்குக் கீழ்ப்பட்டவர்கள் நாங்கள்; ஜெயிலில் இருக்கின்ற வரையில் கைதிகளுக்கு சிறைச்சாலையில் உள்ள ஜெயிலர் அதிகாரியாக இருக்க முடியுமே தவிர, அவர் கைதிகளுக்குத் தந்தை ஆகிவிடுவாரா?

ஆகவேதான், இதில் தெளிவை ஏற்படுத்தவேண்டும். ஏனென்றால், திராவிட இயக்கத்தைப்பற்றி காலங்கால மாக அன்றுமுதல் இன்றுவரை திடீரென்று ‘‘24 காரட் தேச பக்தர்களாக'' இன்றைக்கு உருவாக்கியிருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உள்பட,  இதோ பாரத புத்திரர்கள் - என்றைக்குமே இவர்கள் தூக்கிக் கொண்டு சுமந்தவர்கள் போன்று சொல்லிக்கொண்டு - இவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டவர்கள் என்பதற்கு வரலாறு வேறு; அங்கே போகவேண்டிய அவசியமில்லை.

திராவிடர் கழகமும், சுயமரியாதை இயக்கமும் தீர்மானமே போட்டிருக்கிறது. இதுபோன்று ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில், என்றைக்காவது ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்களா? கேளுங்கள்.

ஆகவே, அடிப்படையில் மிகத் தெளிவான விஷயத்தில் இதைப் பயன்படுத்தவேண்டும். காங்கிரஸ் நண்பர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்தப் பிரச்சினையை எடுப்பதில்லை. அவர்கள் தெளிவாகி விட்டார்கள்; ஏனென்றால், காங்கிரசினுடைய போக்கே, சமூகநீதி, இட ஒதுக்கீடு என்று மாறிக் கொண்டு வரு கின்ற காரணத்தினால்.

ஆனால், அதைவிட மிக முக்கியம் இன்றைக்கு, ‘‘சூப்பர் தேச பக்தர்களாக'' இருக்கக்கூடியவர்கள், தேசியவாதிகள் போன்று காட்டிக் கொள்பவர்கள் - மத்திய ஆட்சி அவர்களின் கைகளில் சிக்கிவிட்டது என்பதற்காக - மிகப்பெரிய அளவிற்கு எல்லாம் ஒன்று தான் என்ற பெயராலே -  ஒற்றை என்ற பெயராலே, தங்களுடைய சர்வாதிகாரத்தை நிலை நாட்டலாம் என்பதற்காகத்தான், ஒற்றை ஆட்சி நடத்தக் கூடியவர்கள் - ஒரே கட்சியைக் கொண்டுவரக்கூடிய - ஒரே தத்துவம் என்ற பெயராலே - ஹிந்துராஷ்டிரம் என்று சொல்லக்கூடியவர்கள் - மற்றவர்களைக் குறை சொல்லுவதற்கு, திராவிடர் இயக்கத்தைப் என்ன சொல்லுகிறார்கள் என்றால், இவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் என்பார்கள்; அதற்கு விளக்கம் சொல்லிவிட்டேன்.

அடுத்து நண்பர்களே, இதுபோன்ற செய்திகளை நீங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அடுத்து மிக முக்கியமான இன்னொரு செய்தி -

ரஷ்யாவிற்குத் தந்தை பெரியார் அவர்கள் சென்ற தைப்பற்றிக்கூட இரண்டு, மூன்று செய்திகள். கவிஞர் அவர்கள் லேசாகத் தொட்டுக் காட்டினார்.

ரஷ்யாவில் 100 நாள்கள் தங்கியிருந்திருக்கிறார்!

தந்தை பெரியார் அவர்கள், சோவியத் ரஷ்யா விற்குச் சென்று அங்கே 100 நாள்களுக்குமேல் செல வழித்திருக்கிறார்!

11 மாதங்களுக்குமேல் அவருடைய வெளிநாடு சுற்றுப்பயணம் - அது அய்ரோப்பிய நாடுகள், மற்றவை சேர்ந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவில் மட்டும் அவர் சுமார் 100 நாள்கள் இருந்திருக்கிறார்!''

இந்தியாவிலிருந்தும், மற்ற இடங்களிலிருந்தும் போனவர்கள் இவ்வளவு நாள்கள் தங்கியிருந்தது இல்லை. இந்தியாவிலிருந்து, கம்யூனிஸ்ட்டாக இருந்து, அவர் பிரபலமாக இருக்கக்கூடிய பிரிட்டனில் எம்.பி. யாக இருந்த சக்லத்வாலா அவர்கள். அவரை அங்கே சந்தித்தபொழுது, கடிதம்கூட கொடுத்திருக்கிறார்.

மிகப்பெரிய அளவிற்கு இவரை அறிமுகப்படுத்தி, பெரிய சிந்தனையாளர் என்று - இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, இப்படியெல்லாம் அவரை உயர்த்தியிருக்கிறார்.

எனவே, சோவியத் ரஷ்யாவில் 100 நாள்கள் தங்கி, எல்லாவற்றையும் உள்ளார்ந்து சென்று பார்த்து இருக்கிறார். அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு அதை சொன்னார்.

(தொடரும்)

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image