மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு அலட்சியம் காட்டி ஒதுக்கி விடக் கூடாது

(21.05.2021 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழில் தலையங்கம்)

மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பு மிகப் பெரிய பொறுப்புடன் வருவதாகும்.  பலம் வாய்ந்த மய்ய அம்சங்கள் கொண்ட ஒரு கூட்டாட்சி நாட்டின்  பெரிய பொறுப்பு,  மாநில அரசுகளில் உள்ள அரசியல் கட்டமைப்புகளுடன், ஏற்றத் தாழ்வு அற்ற சம நிலையைப் பேணுவது, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக் கொள்வது என்ற பொறுப்பு மய்ய அரசிற்கு உள்ளது. குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர்களைக் கையாளும்போது, அவர்களது கருத்துகளை அலட்சியப் படுத்தி ஒதுக்கிவிடாமல் இருப்பது மத்திய அரசின் பொறுப்பாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கீழ் செயலாற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்குவதற்கு அண்மையில் மத்திய அரசு மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் கவலை அளிப்பவையாக இருக்கின்றன. கோவிட்-19 தொற்று நோய் எதிர்ப்பு தொடர்பான மாநில அரசு அதிகாரிகளுடன் பிரதமர் இரண்டு நேரடியான கூட்டங்களை நடத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதற்காக மத்திய கல்வி அமைச்சர் பாக்ரியால் மாநில கல்வி அதிகாரிகளுடன் ஒரு நேரடியான கூட்டத்தை நடத்தினார். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தேவையான சில விவரங்களைப் பெறுவதற்கு இத்தகைய கூட்டங்கள் பிரதமருக்கோ மத்திய அமைச்சர்களுக்கோ உதவி செய்யும் என்பது ஒரு புறமிருக்க,  மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்களை அந்தக் கூட்டத்திற்கு அழைக்காமல் போனது முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாக அமைந்ததாகும். தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் நடத்திய கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் செல்வதற்கு அனுமதி வழங்காமல் போனது சரியான நடவடிக்கையே ஆகும். மத்திய அமைச்சரின் கூட்டத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்பது அல்ல அவரது நோக்கம். தேசியக் கல்விக் கொள்கை பற்றியதொரு விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ள மாநில கல்வி அமைச்சர்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அதன் காரணம்.

மாவட்ட ஆட்சியர்கள் அல்லது மாவட்ட மாஜிஸ்டிரேட்டுகளுடன் பிரதமர் பேசியதற்கு முன்மாதிரி ஒன்று இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் பற்றி மாவட்ட நிருவாகத் தலைவர்களுடன் பேசினார். இவ்வாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நேரடியாக அறிவுரைகள் வழங்குவது அரசமைப்பு சட்ட 256 மற்றும் 257  பிரிவுகளின்படி அனுமதிக்கத் தக்கதே என்று அப்போது நியாயப்படுத்தப்பட்டது. நாடாளுமன்றம் உருவாக்கிய சட்டங்களை மதித்து பின்பற்றி நடக்கவும், மத்திய அரசின் ஆணைகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்வதும் மாநில அரசின் கடமை என்று இந்த அரசமைப்பு சட்டப் பிரிவுகள் கூறுகின்றன. பிரதமர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்து, அவர் பேசும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் வேறு கட்சி ஆட்சியில் உள்ள மாநில அதிகாரிகளாக இருக்கும்போது, மாநிலத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பிரதிநிதிகள் மத்திய அரசால் புறக்கணிக்கப்படு கிறார்கள் என்ற எதிர்ப்புணர்வு தோன்றுவது இயல்பேயாகும். இந்த வழக்கில் கரோனா-19 நோய் எதிர்ப்பு இயக்கத்தில் மத்திய அரசுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கின்றது என்பது உண்மைதான். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்துவதற்கான வழிமுறைகள் காட்டுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் விதிவிலக்குகள் அளிப்பது, மருத்துவ உதவிகள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது ஆகியவற்றுக்காக தேசிய பேரிடர் நிருவாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும்,  மாநில அரசியல் கட்டமைப்புகள் புறக் கணிக்கப்படுகின்றன என்ற எண்ணத்திற்கு இடம் அளிக்காத வகையில் இத்தகைய கூட்டங்களோ நிகழ்ச்சிகளோ ஏற்பாடு செய்வது நாட்டின் ஒட்டு மொத்த நன்மைக்கு அவசியமானதாகும். பிரதமர் நேரில் கலந்து கொண்ட கலந்துரையாடலில் தாங்கள் அனைவரும் பேசுவதற்கு அனுமதிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டதாக  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  தெரிவித்தது போன்ற புகார்களுக்கு இடம் அளிக்காமல் பார்த்துக் கொள்வது மத்திய அரசின் பொறுப்பாகும்.

நன்றி: 'தி இந்து' 21-05-2021

                தமிழில்: ..பாலகிருட்டிணன்

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image