பாரதீய ஜனதா மத்திய அமைச்சர்- சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டுமுன் வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்

 சண்டிகர், ஜூன் 6 வேளாண் சட்ட நகல்களை எரித்து பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், ஜலந்தர், மொஹாலி, அபோஹர், ஹோஷியார்பூர், பர்னாலா, நவன்ஷார், பாட்டியாலா, சண்டீகர், சிர்ஸா, ஜிந்த், கர்னால், பானிபட், அம்பாலா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நேற்று (5.6.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்வாராவில் மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ் வீட்டுக்கு அருகில் மூன்று வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சரின் வீட்டுக்கு அருகே சாலையில் காவல்

துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டக்காரர்கள் முன்னேறாத வகையில் தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்தின்போது, மத்திய அமைச்சர் வீட்டில் இல்லை. ஹோஷியார்பூரில் குருத்வாரா சிங் சபாவிலிருந்து உள்ளூர் பாஜக அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள், பாஜக அலுவலகம் முன்பாக சட்ட நகல்களை எரித்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அரியானா மாநிலத்தில் அம்பாலாவில் உள்ள மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் வீட்டின் அருகேயும், அம்பாலா நகர பாஜக சட்டமன்ற உறுப்பினர் அஸீம் கோயல் வீட்டின் அருகேயும் விவசாயிகள் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல, அரியானா சட்டப்பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தா வீட்டினை நோக்கி காவல்துறையின் தடுப்புகளை மீறி போராட்ட விவசாயிகள் முன்னேற முயன்றனர். அதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

கரோனா 2ஆவது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு

புதுடில்லி, ஜூன் 6 நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம்முதலாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனை வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு பரவிய முதல் அலையை ஒப்பிடுகையில், இரண்டாம் அலை வீரியமிக்கதாக உள்ளது.

இதில் அதிகபட்சமாக, கடந்தமாத தொடக்கத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். உயிரிழப்பும் அதிக அளவில்இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கு நாடு முழுவதும் இதுவரை 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் நீடித்த கரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

ஆனால், இரண்டாம் அலை தொடங்கி 4 மாதங்களிலேயே 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக மருத்துவச் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலைக்கு டில்லி யில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அங்கு இதுவரை 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பீகார் (97), உத்தரப்பிரதேசம் (79), ராஜஸ்தான் (43), ஜார்க்கண்ட் (39), குஜராத் (37), ஆந்திரா (35), தெலங்கானா (34), மேற்கு வங்கம் (30) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,20,529 ஆக சரிவு

புதுடில்லி, ஜூன் 6 இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து தினசரி பாதிப்பு கடந்த 58 நாள்களுக்கு பிறகு 1,20,529 குறைந்துள்ளது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 58 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,20,529 ஆக உள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,86,94,879, கடந்த 24 மணி நேர நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,20,529. இதுவரை குணமடைந்தோர்: 2,67,95,549, கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,97,894, கரோனா உயிரிழப்புகள்: 3,44,082

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,380

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 15,55,248

இதுவரை கரேனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 22,78,60,317

Comments