சா(ணி)மியார்களின் புத்தகங்கள் பல்கலைக் கழகங்களிலா?

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் யோகா சாமியார் ராம்தேவ்  புத்தகங்கள் இளங்கலை தத்துவம் என்னும் பாடத்திட்டத்தில் இடம் பெறுகிறதாம்.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள மாநில அரசின் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவப் பாடப்பிரிவில் ஏற்கெனவே முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சாமியார் ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள இதர பல் கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் இவர்கள் இருவரின் புத்தகங்களைச் சேர்க்க புதிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. இளங் கலை தத்துவம் படிக்கும் மாணவர்களின் இரண்டாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 'ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா'(யானைகளின் பலன் எப்படி என்று தெரியவரும்)  மற்றும் சாமியார் ராம்தேவின் 'யோக் சாத்னா வா யோக் சிக்கிட்சா ரஹஸ்யா' (யோக சிகிச்சை ரகசியங்கள்) ஆகிய புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு புத்தகங்களையும் மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தத்துவப் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பரிந்துரை அளிக்கப்பட் டுள்ளது. அந்த இரண்டு புத்தகங்களும் உயர் இலக்கிய கருத்துகளையும், கல்விக்குத் தேவையான கருத்துகளையும் கொண்டிருப்பதால் அவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டி ருப்பதாகப் பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதுதான் வேடிக்கை - விநோதம்!

தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப மாநிலத் திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரி களுக்கும் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை உருவாக்க மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுதான் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சாமியார் ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்களை இளங்கலை தத்துவப் பாடப்பிரிவில் இணைக்க பரிந்துரை அளித்துள்ளதாம்.

இது குறித்து சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டி.என். சிங் கூறுகையில், "குழுவால் பரிந் துரைக்கப்பட்ட புத்தகங்கள் கல்விக்கான உயர்ந்த கருத்து களைக் கொண்டுள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புத்தகம் யோகா பற்றி விளக்குகிறது. நமது பண்டைய அறிவியலான யோகாவைப் பற்றி அறிய இது போன்ற புத்தகங்கள் நமக்குத் தேவை. அதேபோல், ராம்தேவின் புத்தகமும் தத்துவ மாணவர்களுக்கு ஒரு நல்ல புரிதலைத் தரும். ஏனெனில் அவரே ஒரு யோகா குரு. அவர் யோகாவை மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்" என்று தெரிவித்தார்.

யோகா சாமியார் ராம் தேவ் ஒரு பொய்யர். இதை அவரது முன்னாள் உதவியாளரே கூறியுள்ளார். இவரது நிறுவன தயாரிப்புகள் அனைத்தும் உள்ளூர் சிறு தயாரிப் பாளர் மற்றும் உள்ளூரில் பிரபலமாகி உள்ள நாட்டு மருத்துவர்களிடமிருந்து மருந்துகளை மொத்த மாகப் பெற்று அதில் பதஞ்சலி லேபிளை ஒட்டி விற்பனை செய்கிறார் என்று குற்றச்சாட்டு உள்ளது, இவர் மீது கருப்புப்பண மோசடி உள்பட பாஸ்போர்ட் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில் கூட ஆங்கில மருத்துவர்களை மோசமாகத் திட்டினார். முட்டாள்தனமாக அலோபதி மருத்துவம் குறித்து உளறிக் கொட்டினார். இதற்கு அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராடிக்கொண்டு உள்ளனர். இவர் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்று இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்த நிலையிலும் இவரது மருந்து வெளியீட்டு நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷவர்தன், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படிப்பட்ட மோசடியான ஒருவர் எழுதிய நூல்களுக்குத் வாழ்நாள் ராயல்டி என்ற பெயரில் கோடிக்கணக்கில் உத்தரப்பிரதேச அரசு இவருக்குக் கொடுத்து அவரது நூல்களை உத்தரப்பிரதேச பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களில் சேர்த்துள்ளது. இதைப் படிப்பவர்களின் மனதில் எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கவலைகொண்டுள்ளனர்.

உலகத்திலேயே இப்படியொரு மோசமான - மக்கள் விரோத - அறிவியலுக்குப் பொருந்தாத அரசுகளைப் பார்க்க முடியுமா? பா... ஆட்சிக்கு வந்தாலும் வந்தது - மோசடிக் கும்பலுக்கும், முட்டாள்தனத்தை முதலீடாகக் கொண்டு பணம் பறிக்கும் கும்பலுக்கும் துணை போகும் கொடூர நிலை அல்லவா இது!

மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் என்கிற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் (51--எச்) பகுதி குப்பைக் கூடையில் வீசி எறியப் பட்டு விட்டதே - நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன? தன்னிச்சையாக வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கவேண்டாமா?

Comments