50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்

 மத்திய பா... அரசின் கொள்கையால் தனியார் மருத்துவமனைகளுக்கிடையே உருவான ஏற்றத்தாழ்வு

புதுடில்லி, ஜூன் 6 கடந்த மே மாதம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட தடுப்பூசிகளில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவற்றை வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே அள்ளிச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நாடு முழுவதுமுள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளில், 60 லட்சத்து 57 ஆயிரம் தடுப்பூசிகளை வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே அபகரித்துச் சென்றுள்ளன.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளதால், கோடிக்கணக்கான மக்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, அரசு தடுப்பூசி மய்யங்களில் காத்துக் கிடக்கின்றனர். மத்திய அரசு மட்டுமே, முன்பு கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அதனை மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கீடு செய்து வந்த நிலையில், தற்போது மாநில அரசுகளும், தனியாரும் நேரடியாகவே தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கும் மற்றும் கண்காணிக்கும் அதிகாரத்தை மட்டும் தன் வசமே வைத்துக் கொண்டுள்ளது.

எனினும், தடுப்பூசி தயாரிப்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், எதிர்பார்க்கும் வேகத்திற்கு தடுப்பூசிகள் கிடைப்பதாக இல்லை. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையின்படி, உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கு போய்விடும். மீதமிருக்கும் 50 சதவிகித தடுப்பூசிகளையே மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் விலைக்கு வாங்கி பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதன்படி மத்திய அரசு 50.9 சதவிகிதம் (4.03 கோடி டோஸ்கள்), மாநில அரசு 33.5 சதவிகிதம் (2.66 கோடி டோஸ்கள்) அளவிற்கு தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் டோஸ்களை (15.6 சதவிகிதம்) கொள்முதல் செய்துள்ளன.

இதில்தான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது,  கடந்த மே மாதத்தில், தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்த ஒரு கோடியே 20 லட்சம் டோஸ்களில், சுமார் 50 சதவிகிதத்தை- 60 லட்சத்து 57 ஆயிரம் டோஸ்களை வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே கைப்பற்றியுள்ளன.

அப்பல்லோ, மேக்ஸ் ஹெல்த்கேர், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் எச்.என் மருத்துவமனை; மெடிகா மருத்துவமனைகள், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், கோத்ரேஜ், மணிப்பால் ஹெல்த், நாராயண ஹிருதலயா, டெக்னோ இந்தியா டமா ஆகியவையே இந்த 9 மருத்துவமனைகள் ஆகும்.

இதில், அப்பல்லோ மருத்துவமனை 16 லட்சத்து ஆயிரம் டோஸ்களையும், மேக்ஸ் ஹெல்த்கேர் 12 லட்சத்து 97 ஆயிரம் டோஸ்களையும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் எச்.என் மருத்துவமனை 9 லட்சத்து 89 ஆயிரம் டோஸ்களையும், மெடிகா மருத்துவமனைகள் 6 லட்சத்து 26 ஆயிரம் டோஸ்களையும், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் 4 லட்சத்து 48 ஆயிரம் டோஸ்களையும், கோத்ரேஜ் 3 லட்சத்து 35 ஆயிரம் டோஸ்களையும், மணிப்பால் ஹெல்த் 3 லட்சத்து 24 ஆயிரம் டோஸ்களையும், நாராயண ஹிருதலயா 2 லட்சத்து 2 ஆயிரம் டோஸ்களையும், டெக்னோ இந்தியா டமா 2 லட்சம் டோஸ்களையும் அள்ளிக்கொண்டு சென்றுள்ளன.

தனியார் மருத்துவமனைகளுக்கிடையே ஓர் ஏற்றத்தாழ்வு உருவாக்கம்!

இது தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ளேயே ஓர் ஏற்றத்தாழ்வை உருவாக்கி இருக்கிறது.

மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளால் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எளிதாகப் பெற முடிகிறது. ஆனால், சிறிய மருத்துவமனைகளால் அப்படிப் பெற முடிவதில்லை என்று அவர்களுக்கு உள்ளேயே புலம்பலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைக்கு பெருநகரங்களைத் தவிர்த்து, வேறு இடங்களில் மருத்துவமனைகள் இல்லாததால், கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதிலும் ஒருதடையாக இது மாறியுள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசிகளை விற்பனை செய்கின்றன. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு 600 ரூபாய்க்கும், கோவாக்சின்1,200 ரூபாய்க்கும் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கும் தனியார் மருத்துவமனைகள், பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை 850 முதல் 1000 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசியை 1,250 ரூபாய்க்கும் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image