பெரியாரைப்பார்த்து அஞ்சக் கூடியவர்கள் - புரட்சிக்கவிஞரைப் பார்த்தும் பயப்படுகிறார்கள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில்  தமிழர் தலைவர்

சென்னை, மே 7 பெரியாரைப் பார்த்து அஞ்சக் கூடியவர்கள் - புரட்சிக்கவிஞரைப் பார்த்தும் பயப் படுகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

கடந்த 29.4.2021 மாலை 7 மணியளவில் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், மும்பை இலெமுரியா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவினை ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி, அவரின் பிறந்த நாளான 29.4.2021 (10 நாள்கள்)வரை ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிவரை காணொலி மூலம் கருத்தரங்கை நடத்தி வந்தனர். நிறைவு நாளான 29.4.2021 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை, ஆங்கிலப்படுத்தி, பல மொழிகளில் மொழி பெயர்த்து, பல ஆண்டுகளுக்கு முன்பு செய்திருப்போமேயானால், இன்றைக்கு உலகம் முழுவதும் தந்தை பெரியாருடைய கருத்துதான் இருந்திருக்கும். இன்றைக்கே மக்கள் உலகம் முழுவதும் பெரியார் என்ற பேராயுதத்தைத்தான் மிகப்பெரிய அளவிற்கு நம்புகிறார்கள்.

பெரியாரைப்பார்த்து அஞ்சக் கூடியவர்கள் - புரட்சிக்கவிஞரைப் பார்த்தும் பயப்படுகிறார்கள்

அப்படிப்பட்ட அந்தப் பேராயுதத்தினுடைய சிறப்புகளைக் கண்டு இன்றைக்கும் எதிரிகள் ஏன் அஞ்சுகிறார்கள்? இன்றைக்கும் பெரியாரைப்பார்த்து அஞ்சக் கூடியவர்கள் - புரட்சிக்கவிஞரைப் பார்த்தும் அதே அளவிற்குப் பயப்படுகிறார்கள்.

பெரியாரை, எப்படியாவது திரிபுவாதத்தை செய்ய லாமா என்று நினைப்பவர்கள் - புரட்சிக்கவிஞர் அவர்களையும்  திரிபுவாதம் செய்யலாமா என்று நினைக்கிறார்கள். புகழ்வதைப்போல சிலர், அவரை இகழ்வது போன்ற சூழல் இருக்கிறது.

புரட்சிக்கவிஞர் அவர்களைப்பற்றி பல பேருக்கு என்ன எண்ணம் என்று சொன்னால், ‘அவர் ஒரு குறுகிய சிந்தனையாளர்’. பெரியாரிடத்தில், திராவிட இயக்கத்தில் இருந்த காரணத்தினால், உலகளா விய வெளிச்சத்திற்குப் போயிருக்கவேண்டிய அவரு டைய ஆற்றலும், புகழும் அந்த அளவிற்குப் போக விடாமல் தடுத்தார்கள் - தடுக்கக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அந்த வஞ்சகத்தினால்தான், புரட்சிக்கவிஞருடைய ஆற்றல், உலகளாவிய அள விற்கு, இன்றைக்கும் கொண்டுபோய்ச் சேரவேண்டிய எல்லைக்குப் போய்ச் சேரவில்லை.

அவருடைய புகழை எதிர்ப்பதற்கு, பல தந்திரங் களைப் பயன்படுத்துவார்கள் எதிரிகள்.

அதையெல்லாம் தெளிவாகச் சொல்வதாகத்தான் என்னுடைய உரை அமையப் போகின்றது.

பாரதிதாசன் என்று புரட்சிக்கவிஞர் பெயர் வைத்துக் கொண்டாலும்கூட, பாரதியார் - தேசியக் கவி. ஆனால், புரட்சிக்கவிஞர் தேசிய உணர்வு இல்லாதவர் - தேசியத்திற்கு எதிரானவர். புரட்சிக் கவிஞர் மிகக் குறுகலான பார்வை உடையவர் என்று எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, விளம்பரப் படுத்தப்பட்டு, தங்களை உயர்த்திக் கொண்டிருக்கக் கூடியவர்களிலே ஒரு சாரார் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரத்தை செய்தார்கள்.

அதனைத் தெளிவுபடுத்தவேண்டியது நம்முடைய கடமையாகும்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் கொள்கையில் தெளிவானவர், உறுதியானவர் என்பதற்கு அடையாளம் இங்கே அழகாக, நம்முடைய குமணராசன் அவர்களும், மற்ற நண்பர்களும் சுட்டிக்காட்டினார்கள். பல பரிணாம வளர்ச்சியைப்பற்றி இங்கே சொன்னார்கள்.

அவர் முதன்முதலில், தந்தை பெரியார் கொள்கைக்கு வருவதற்கு முன்பு, சுப்பிரமணிய சாமியைப்பற்றி - முருகனைப்பற்றி பாடக்கூடிய ஒரு இளைஞராக இருந்தார். 19 வயதிலே அவர் தமிழ் படித்து ஆற்றலுடன் இருந்தார். வைதீக உணர்வைப் பெற்றிருந்தார். ஆனால், அதற்குப் பின் அவர், 1920 ஆம் ஆண்டு மயிலம் ஸ்ரீ சண்முகம் வண்ணப் பாட்டு - 1925 இல்கூட மயிலம் ஸ்ரீ சண்முகம் பஞ்சரத்தின கீர்த்தி, 1926 இல் சுப்பிரமணிய துதியமுது - சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுகின்ற கால கட்டத்தில், சுப்பிரமணிய துதியமுது பாடியவர்.

அதற்கடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தேசிய உணர் வுக்கு ஆளாகிறார், பாரதியாரைப் பார்த்து! சிறுவர், சிறுமியர், தேசிய கீதம் எழுதினார்.

திரிபுவாதிகள் தலைகீழாக மாற்றக்கூடிய ஆபத்து உண்டு

அதற்குப் பிறகு தந்தை பெரியாரை சந்திக்கின்ற பொழுது, பெரியாருடைய தாக்கமும், சுயமரியாதை இயக்கத்தினுடைய கொள்கைவீச்சும் அவரைத் தன் வயப்படுத்தியது. அப்படி தன்வயப்படுத்தியதன் விளைவாக, அந்தக் கொள்கைக்கே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளக்கூடிய அள விற்கு வந்தார்.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், அந்தப் பரிணாம வளர்ச்சியின் படிப்படியான நிலை இருக்கிறதே - அதனை நாளைய தினம் திரிபுவாதிகள் தலைகீழாக மாற்றக்கூடிய ஆபத்து உண்டு.

தந்தை பெரியாரை பரப்புவதைவிட பாதுகாப்பது எப்படி முக்கியமோ - டாக்டர் அம்பேத்கரைப் பரப்புவதைவிட, பாதுகாப்பது எப்படி முக்கியமோ- அதேபோல, புரட்சிக்கவிஞர் அவர்களைப் பற்றியும், திரிபுவாதங்களிலிருந்து நாம் பாதுகாத்து, எப்போதும் அவருடைய பெருமைகளை நிலைநாட்டிக் கொண்டு வரவேண்டும் என்பது மிகமிக முக்கியமானது.

ஏனென்றால், புரட்சிக்கவிஞர் அவர்கள் எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி, இமயம்போல் வளர்ந்திருக்கிறார், உயர்ந்திருக்கிறார்.

எனவே, இந்தக் காலகட்டத்தில் எதிர்த்து அழிக்க முடியாததை அணைத்து அழிப்பதைப்போல, அவர்கள் இன்றைக்குப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலே தலைகீழாக சொல்லி வைப்பார்கள்.

வருங்காலத் தலைமுறையினரிடம் கொஞ்சம் மாற்றி வைத்தால் - ஜாதி மறுப்பு கருத்துகள் - கடவுள் மறுப்பு கருத்துகள் - அவருடைய மனித நேய கருத்துகளையெல்லாம் முன்னால் வைத்து, சுப்பிரமணிய துதியமுதையும், பஞ்சரத்தின கீர்த்தி யையும், மற்றவைகளையும் பின்னால் வைத்துவிட்டால், அதையே அவர்கள் நம்பக் கூடிய அளவிற்குத் தலைகீழாக செய்யக்கூடும்.

எனவேதான், அவரைப்பற்றி வருங்காலத் தலை முறையினர் தெரிந்துகொள்வதற்கு, தெளிவான வரலாற்றுப் பார்வையை இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லவேண்டும்.

எனக்கில்லை கடவுள் கவலை!

1920 இல் அவருடைய நிலை என்ன?

சுப்பிரமணிய துதியமுதை 1925-1926 வரை பாடினார் என்று சுட்டிக்காட்டினார்கள். அதற்குப் பிறகு படிப்படியாக வளர்ந்துதான், 1928 இல் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த காலம் முதற் கொண்டு, சுயமரியாதை இயக்கத் தொடர்பு வந்தவுடன்,

அடுத்து முதற்கவிதையில்,

''உண்டென்பார் சிலர்

இல்லையென்பார் சிலர்

எனக்கில்லை கடவுள் கவலை''

இப்படி எழுதினார்.

பிறகு,

இல்லையென்போன் யாரடா

தில்லை சென்று பாரடா

என்று சொன்னவர்களுக்கு,

 இல்லையென்போன் நானடா,

அத்தில்லை கண்டுதானடா

என்று பதிலுரைத்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். கடைசி வரையில் தெளிவான பார்வையோடு இருந்தார்.

எனவே, இந்தக் கருத்தை முதலில் தெளிவாக்க வேண்டும். ஏனென்றால், முதலில் சுப்பிரமணியத் துதியமுது பாடிய கனகசுப்புரத்தினத்துக்கு 1908 ஆம் ஆண்டிலிருந்து 1918 ஆம் ஆண்டு வரையில் பாரதியார் உறவு. பிறகு அவர் பாரதிதாசனாக இருக்கிறார்.

அதற்கும் 10 ஆண்டுகாலத்திற்குப் பிறகுதான், 1928 இல் தந்தை பெரியாருடைய சந்திப்பு ஏற்பட்டது.

அவருக்கு மானுடப் பார்வை வந்தது

அவருக்கு பாரதியின்பால் மரியாதையும், பற்றும் இருந்தது என்றாலும், கொள்கையளவில் அவர் வேகமாக வளர்ந்தார்கள். பாரதி எதையெல் லாம் சொன்னாரோ - தேசியக் கொள்கை என்பதிலிருந்தெல்லாம் விடுபட்டு, இன்னும் வேகமாக வந்தார். அவருக்கு மானுடப் பார்வை வந்தது.

எனவேதான், பாரதியாரை தேசியக்கவி என்று பெருமைப்படுத்துகிறோம் என்று நினைக்கக் கூடியவர்கள்,   இவர் தேசியக் கவியா?’ என்று புரட்சிக்கவிஞரைப் பார்த்து கேட்கின்ற நேரத்தில், ஒரே பதில், ‘ஆம்! அவர் தேசியக் கவியல்ல. ஆனால், தேசியத்தையெல்லாம் தாண்டிய மானிடப் பார்வையாளர்என்பது நம் பதில்.

மானுடம் வென்றதம்மா’, ‘மானுடத்தினுடைய பரப்பைப் பார்என்று பார்க்கக் கூடிய அளவிற்கு, அவருடைய பார்வை என்பது உலகப் பார்வையாக ஆயிற்று!

தேசியம் என்று சொல்லும்பொழுது, அந்தக் கோடு சிறிய கோடு - உலகம் என்று சொல்லும்பொழுது அது விரிந்தது.

திசை என்ன என்று புரட்சிக்கவிஞர் சொல்லுகின்ற பொழுது, நண்பர்களே, கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டுமானால்,

''தென்திசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்றன்

சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா

அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்

அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்

குன்றெடுக்கும்நெடுந்தோளான்கொடைகொடுக்கும் கையான்

குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்

என்தமிழர் மூதாதை என்தமிழர்பெருமான்

இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்''

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கக்கூடிய புலவர் .இராமநாதன்!

புரட்சிக்கவிஞர் அவர்களுடைய கவிதை களைப்பற்றி, அதனுடைய சிறப்பையும், ஆழத் தையும் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த நயத்தை உள்ளபடியே சிறப்பாக விளக்கக் கூடிய ஒரே ஒருவர் - அவரைப் போன்று மற்றவரை ஒப்பிட முடியாத அளவிற்கு சிறப்பான ஆற்றலைப் பெற்ற ஒருவர் - மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கக்கூடிய புலவர் .இராமநாதன் அவர்களாவார்கள்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக நடத்தப் பட்ட, பெரியார் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். கரந்தை தமிழ்ச்சங்கத்திலும், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியிலும் முதல்வராக இருந்து ஓய்வு பெற்று, கடைசிவரையில் தன்னுடைய வாழ்வை சிறப்பாக வாழ்ந்து, பெரியாரியல் பாடத்திட்டத்திற்கு ஒரு தலைவராக இருந்து, மிகப்பெரிய அளவிற்கு ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தவர் புலவர் .இராமநாதன் அவர்கள்.

அவரிடத்தில் நான், புரட்சிக்கவிஞர் அவர்களுடைய கவிதைகளைப்பற்றிக் கேட்பதுண்டு.

எவ்வளவு சுவையாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுவையாக அதனுடைய அருமையை, ஆழத்தை அவர் சொல்லுவார்.

பத்து திசை என்று சொன்னால்என்ன அர்த்தம்?

நான் அவரிடம் கேட்டேன்,

அய்யா இதுவரையில் நாம் எட்டுத் திசை என்றுதானே கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், புரட்சிக்கவிஞர் அவர்கள், 'அய்யிரண்டு திசைமுகத்தும்' என்று எழுதியிருக்கிறாரே, அய்யிரண்டு என்றால், பத்து அல்லவா - பத்து திசை என்று சொன்னால், என்ன அர்த்தம்?” என்றேன்.

அதற்கு அருமையான விளக்கத்தைப் புலவர் .இராமநாதன் அவர்கள் சொன்னார்.

பத்து தலை இராவணன், பத்து தலை இராவணன் என்று இராவணனைப்பற்றி சொன்னார்கள் அல்லவா - அது பத்து தலை இருக்கிறது என்பதல்ல - பத்துத் துறைகளிலும் அவருடைய புகழ் சிறந்திருக்கிறது என்பதுதான் புரட்சிக்கவிஞருடைய விளக்கம். அதை சிறப்பாக அந்த ஒரு வரியில் காட்டியிருக்கிறார்.

'அய்யிரண்டு திசை முகத்தும்' என்று எழுதி யிருக்கிறார். அந்த அய்யிரண்டு திசையில் - எட்டு திசை என்பது எல்லா பக்கமும். ஆனால், கீழே நோக்கினால் ஒரு திசை - மேலே நோக்கினால் இன்னொரு திசை. ஆகவே, இரண்டு திசையும் சேர்த்து பத்து திசை என்று ஒரு புது விளக்கத்தைக் கொடுத்தார்.

எவ்வளவு ஆழமான சிந்தனை - எவ்வளவு எளிய வரிகள் - அதேநேரத்தில், எவ்வளவு சிறப்பான கொள்கை!

அப்படி அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைக்கக்கூடிய ஆற்றலும், திறமையும் உள்ளவர் நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள்.

ஒரு குறுகிய தேசிய வட்டத்தில் தன்னை அடைத்துக் கொள்ளாதவர்!

எனவே, ஒரு குறுகிய தேசிய வட்டத்தில், அல்லது குறுகிய வட்டத்தில் அவர் என்றைக்கும் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை.

சுயமரியாதை இயக்கத்தைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக ஒரு கருத்தை சொன்னார்கள்.

''என்னுடைய இயக்கம் இப்பொழுது இங்கே தோன்றி, பணி செய்கிறது என்றாலும், எப்பொழுதும் இப்படி இருக்கப் போவதில்லை. இது உலக இயக்கம். உலக மானுடம் என்னென்ன உரிமைகளைப் பெற வாய்ப்பைத் தடுத்திருக்கிறார்களோ,  மறுத்திருக் கிறார்களோ - அதையெல்லாம் பெற்றுத் தர போராடக் கூடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்என்று சொன்னார்.

அதே கருத்தைத்தான் நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள், தன்னுடைய சிந்தனை மூலமாகக் கொண்டு வந்தார்கள். எனவேதான், அவர் தேசியக் கவி அல்ல என்பதை நாங்களும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அந்த வட்டத்திற்குள்ளே தன்னை அடைத்துக் கொள்ளாதவர்.

மானுடப் பரப்பைப் பார்த்தவர். அதைத்தான் நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அதிலேதான் அவருடைய பெருமையும், புகழும் இருக்கிறது.

எல்லாவற்றிலும் பார்த்தீர்களேயானால், உலகம், உலகம், உலகம் என்றுதான் இருக்கும்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் 'பொதுவுடைமைக் கருத்துகளைத் திசையெட்டும் சேர்ப்போம்' என்றார். அதற்குப் பிறகு, 'அய்யிரண்டு திசை முகத்தும்' என்று சொன்னார்.

உலகப்பன் பாட்டு!

அவர் உலகப்பன் பாட்டைப் பாடினார். உங்களுக் கெல்லாம் தெளிவாகத் தெரியும்.

''ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!''

எனவேதான், உலகப் பார்வை - மானுடப் பார்வை. அவருக்கு.

பெரியார் அவர்கள் சொன்னார், ‘எனக்கு அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்று. எனக்கு வேறு பற்று கிடையாதுஎன்றார் தந்தை பெரியார்.

பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் பிறந்ததே - மானிடப் பற்றிலிருந்துதான். அந்தக் காலகட்டத்தில் புரட்சிக்கவிஞர் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல் கிறார்,

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்

வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு

மானிடத் தன்மையை நம்பி - அதன்

வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி!

'மானிடம்' என்றொரு வாளும் - அதை

வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்

வானும் வசப்பட வைக்கும் - இதில்

வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்!

என்று எழுதியிருக்கிறார்.

கொள்கையைப் பற்றித்தான் அவர் கவலைப்பட்டார்

இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தக் காலத்தில் சென்றிருக்குமேயானால், நோபல் பரிசைத் தாண்டிய பரிசை அவர் பெற்றிருப்பார். ஆனால், பரிசைப்பற்றி அவர் கவலைப்படவில்லை; புகழைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. கொள்கை யைப் பற்றித்தான் அவர் கவலைப்பட்டார்.

சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட நிலையில்,  சுப்பிரமணிய துதியமுதைப் பாடிக்கொண்டு, ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த ஒருவர், ஓர் எல்லையோடு இருந்த ஒருவர், விரிந்த பார்வைக்குரியவரானார். அவருக்கு குறுகிய மனப்பான்மை என்று யாரும் சொல்ல முடியாது.

இன்றைக்குக் கரோனா காலகட்டத்தில், உலக நாடுகள் எல்லாம் உதவிக்கு வரக்கூடிய கட்டத்தைப் பார்க்கிறோம் - அது மானுடப் பற்று - அதுதான் மனிதநேயம்.

அதுபோன்று, இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகத்திலும், உத்தரப்பிரதேசத்திலோ, டில்லியிலோ உள்ள மக்கள் படுகின்ற வேதனையைப் பார்த்து நாம் அவதிப்படுகின்றோம் என்று சொல்லுகின்ற நேரத்தில் நண்பர்களே, புரட்சிக்கவிஞர் அவர்கள் ஒரு வரியை எழுதியிருக்கிறார்.

அவருடைய பார்வை - ஏனென்றால், மற்றவர்கள் அறியாத செய்திகளைச் சொல்லவேண்டும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என்று நான் விரும்புகிறேன்.

''இமயச் சாரலில் ஒருவன் இருமினான்,

குமரிவாழ்வான் மருந்து கொண்டோடினான்''

இப்படி ஒரு காலகட்டத்தில், மிகத் தெளிவாக எழுதியவர், பாடியவர் புரட்சிக்கவிஞர்.

(தொடரும்)

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image