கங்கையில் கரோனா சடலங்கள்!

புனித நதி, புனித நதி' என்று நீட்டி முழங்குவார்கள் - கங்கையை ஒருமுறை நேரில் பார்த்து வந்தவர்கள் யாரும் அவ்வாறு கூற மாட்டார்கள். அவ்வளவு மோசமான மாசு நீர் கொண்டது கங்கை.

இப்பொழுது அங்கு நிலைமை என்ன? ஏடுகளில் செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன.

சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசம் கரோனா தொற்றால் விழி பிதுங்கிக் கிடக்கிறது. கரோனாவால் மரணமடைந்தவர்களை எரியூட்டக்கூட இடமில்லை. மயானங்களில் எல்லாம் இறந்த வர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு கிடக்கின்றன; கங்கையில் தூக்கி எறியப்படுகின்றன.

பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சவுசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40-க்கும் மேற் பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கரை ஒதுங்குவது குறித்து அந்த மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால், இதுகுறித்து ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள்.

கழுகுகளும், நாய்களும் இந்த சடலங்களை உண்பதற்காக பெருமளவில் வந்து குவிவதால், குடிநீருக்காக இந்தபுண்ணிய' நதியின் நீரை பயன்படுத்தும் அந்தப் பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

கரோனாவுக்கு முன்னர் சடலங்களை எரிக்க ஆறாயிரம் ரூபாய் வரை செலவான நிலையில் தற்போது விறகு முதல் சம்பிரதாயப் பொருள்கள் என்று அனைத்து விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டதால் 15 ஆயிரம் ரூபாய்வரை செலவாகிறது. இதனால் இடைத்தரகர்கள் தான் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். பணத்திற்கு வழி இல்லாதவர்கள் சடலங்களை அப்படியே நதியில் விட்டுச் செல்கின்றனர்.

புனித நதியாம்' கங்கை! அதனைத் தூய்மைப்படுத்தநவாமி கங்கேஎன்ற திட்டத்தை (20 ஆயிரம் கோடி ரூபாயில்) அறிமுகப்படுத்தியவர்கள் இந்த நதிக்கரையில் மின்மயானங்களை அமைத்திருந்தால் சாமானியர்களுக்கு அது உதவியாக இருந்திருக்கும் என்று அந்தப் பகுதியில் உள்ள சமூகநல ஆர்வலர் அஸ்வினி குமார் வர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சடலங்களை இதுபோல் நதியில் விட்டுச் செல்வதால் இந்த பகுதி மக்களுக்கு தொற்றுப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

இதுகுறித்து பக்ஸர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, ‘‘இந்த சம்பவம் தொடர்பான புகார் என்னிடம் வந்திருக்கிறது. நதிக்கரையைத் தூய்மைப்படுத்தத் தேவையான நடவடிக் கையை எடுக்க அந்தப் பகுதி தூய்மைப் பணி அலுவலரிடம் உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

உடல்கள் மிதந்து வரும் பக்சர் பகுதி பீகார் - உத்தரப்பிரதேச எல்லையில் உள்ளது. இந்த மாவட்டத்திற்கு அருகில் வாரணாசி உள்ளது. வாரணாசி கிராமப்புறப் பகுதியில் மிகவும் அதிகமாகக் கரோனா தொற்று ஏற்பட்டு மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்று அரசு மிரட்டல் விட்ட காரணத்தால், உத்தரப்பிரதேச மாநில கோவிட் தொடர்பான மரணங்கள் சரியான எண்ணிக்கையில் வெளிவருவதில்லை; மேலும் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் தொகுதியாகையால் வாரணாசி குறித்த எந்த செய்தியும் வெளியாவது இல்லை; இந்த நிலையில் உடல்களை எரிக்க வழியில்லாமல் கங்கையில் வீசி விட்டுச் செல்லும் அவலம் நிகழ்கிறது. இந்த உடல்கள் அருகில் உள்ள மாநிலமான பீகாரில் கரை ஒதுங்குகின்றன. கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து இதுவரை மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு ஒருமுறைகூட வரவில்லை என்ற குறைபாடு அந்தத் தொகுதி மக்களிடம் உள்ளது.

உண்மையைச் சொல்லப்போனால் கங்கையில் பிணங் கள் மிதப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. கங்கை ஆற்றின் நீளம் 2,525 கிலோ மீட்டர். இதில் காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கலக்கிறது. நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு, கங்கையில் தூக்கி எறியப்படுகின்றன. 9,000 கிழட்டுப் பசுக்கள் ஆண்டு ஒன்றுக்குக் கங்கையில் உயிரோடு தள்ளப்பட்டுக் கொல்லப் பட்டு வருகின்றன.

இந்த கங்கை சாதாரணமானதல்ல; விண்ணுலகில் ஓடிக் கொண்டிருந்த கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டு வந்தவன் பகீரதன். அதற்காகக் கடும் தவம் செய்தானாம். கங்கை மண்ணுலகுக்கு மிகப்பெரிய வேகத்தில் ஓடி வந்ததால், சிவன் என்ன செய்தானாம்? தன் தலைமுடியால் தாங்கிக் கொண்டானாம். சிவனின் சடாமுடியில் ஒரு துளி பூமியில் விழுந்ததாம்! அந்த ஒரு துளிதான் மண்ணுலகில் இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கும் கங்கையாம்.

இது புண்ணிய நதியாம். இதில் குளித்தால் பாவங்கள் எல்லாம் பறந்து ஓடிவிடுமாம். ஆமாம், பிணங்களைக் கங்கையில் வீசி எறிவதுகூட, அவர்களுக்கு நற்கதி கிடக்கத்தானாம். செத்தவர்களுக்கு நற்கதி கிடைப்பது இருக்கட்டும்; உயிரோடு இருப்பவர்களின் கதி என்ன? இந்துராஜ்ஜியம் அமைப்போர் பதில் சொல்லட்டும்!

மதமும், மத நம்பிக்கைகளும் மனித வாழ்வுக்கு நாசமே!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image