பெரியாரின் கருத்தும் - புரட்சிக்கவிஞரின் கருத்தும் ஒன்றே!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில்  தமிழர் தலைவர்

சென்னை, மே 7 பெரியாரின் கருத்தும் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கருத்தும் ஒன்றே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

கடந்த 29.4.2021 மாலை 7 மணியளவில் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், மும்பை இலெமுரியா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவினை ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி, அவரின் பிறந்த நாளான 29.4.2021 (10 நாள்கள்)வரை ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிவரை காணொலி மூலம் கருத்தரங்கை நடத்தி வந்தனர். நிறைவு நாளான 29.4.2021 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அன்றைக்கே மானிடப் பார்வை - மனித குலம் ஒன்று என்று சொல்லக்கூடிய பார்வை

அப்படிப்பட்ட புரட்சிக்கவிஞர்,

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்

வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு

மானிடத் தன்மையை நம்பி - அதன்

வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி!

'மானிடம்' என்றொரு வாளும் - அதை

வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்

வானும் வசப்பட வைக்கும் - இதில்

வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்!

மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த

வையத்திலே அவன் செய்தவரைக்கும்

மானுடத் தன்மைக்கு வேறாய் - ஒரு

வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!

மானிட மென்பது புல்லோ? - அன்றி

மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?

கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு

கடலை வசப்படச் செய்ததும் அதுதான்!


மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு

மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;

மானிடம் என்பது குன்று - தனில்

வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று

மானிடருக் கினி தாக - இங்கு

வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே

வான்திசை எங்கணும் நீ பார்! - வாழ்வின்

வல்லமை 'மானிடத் தன்மை' என்றேதேர்.”

என்றார்.

மிகப்பெரிய அளவிற்கு, அன்றைக்கே மானிடப் பார்வை - மனித குலம் ஒன்று என்று சொல்லக்கூடிய பார்வை. இந்த இடத்திற்கு அவர் சென்றார் என்று சொன்னால், எவ்வளவு பெரிய மானிடத்தன்மை என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவேதான், அப்படி சொல்லுகின்ற நேரத்தில், ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும்.

இன்றைக்கு உலக நோய்களில் மதவெறி நின்று கொண்டிருக்கிறது

உடனே அடுத்த கேள்வியைக் கேட்பார்கள், அப்படி யானால் புரட்சிக்கவிஞர் அவர்கள் ஏன் மற்றவர் களைப்பற்றி பாடியிருக்கிறார்? ஏன் மற்றவர்களைக் குறை சொல்லியிருக்கிறார்? என்று கேட்டால்,

அவர் பார்த்த பார்வை,

''இருட்டறையில் உள்ளதடா உலகம்,

ஜாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே?

மருட்டுகிற மதத் தலைவர் வாழ்கின்றாரே?

வாயடியும் கை அடியும் மறைவெதென்னாள்?''

இன்றைக்கும் அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை காணவேண்டும். இன்றைக்கு உலக நோய்களில் மதவெறி நின்று கொண்டிருக்கிறது.

அதுபோலவே, இன்னமும், நிற பேதம், ஜாதி வெறி இவையெல்லாம் திகழ்ந்துகொண்டிருக்கின்றன.

ஒரு மானுடப் பற்றாளராக அவர் என்றைக்கும் இருந்திருக்கிறார்!

எனவேதான், புரட்சிக்கவிஞர் அவர்கள் கேட்ட கேள்வி, இன்னொரு நாட்டிற்கும் பொருந்தும் - அமைதியற்று இருக்கக்கூடிய எல்லாப் பகுதிகளுக்கும் அது விரியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் ஒரு மானுடப் பற்றாளராக என்றைக்கும் இருந்திருக் கிறார் என்பதுதான் மிக முக்கியமானது.

அந்தக் கருத்தைத் தாண்டி, மிக முக்கியமான ஒரு கட்டத்திற்குப் போய் பார்க்கவேண்டும்.

மனித சமுதாயத்தில், பெண்ணுலகம் என்று சொல்லு கிறார்கள். அந்தப் பெண்ணுலகத்திற்கும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு, விடியல் தேடவேண்டும்; ஏனென்றால், சரி பகுதி அந்த மக்கள். அவர்களைப்பற்றி புரட்சிக்கவிஞர் அளவிற்கு வேறு யாராவது பேசியிருக்கிறார்களா?

புரட்சிக்கவிஞர் அவர்கள் ஒரு மருந்தாளுநர்!

தந்தை பெரியாருடைய கருத்தை, இலக்கியத்தில் குழைத்து, தேனாகத் தருவதுதான் - அந்தக் கொள்கை என்ற மருந்தை தருவதுதான் புரட்சிக்கவிஞருடைய வேலை. அவர் ஒரு மருந்தாளுநர்.

மருந்தை எப்படி மருந்தாளுநர் கலக்கிக் கொடுக் கிறாரோ - மருந்தைக் கண்டுபிடித்தவர் ஒருவர் - மருந்தை கலக்கிக் கொடுப்பவர் இன்னொருவர் என் பதைப்போல,

''காதலுக்கு வழி வைத்துக்

கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம்

இதிலென்ன குற்றம்?

காதலுக்கோ பிள்ளை

தவிர்ப்பதற்கோ பிள்ளை!''

என்று கேட்கிறார்.

இதுவரையில் எந்தக் கவிஞராவது கருத்தடை யைப்பற்றி, குடும்பக் கட்டுப்பாட்டைப்பற்றி இந்த அள விற்கு வேகமாக, தெளிவாக சொல்லியிருக்கிறார்களா?

பெரியாரின் கருத்தும்புரட்சிக்கவிஞரின் கருத்தும் ஒன்றே!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய கருத்தும், கவிதைகளும் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளே!

தந்தை பெரியார் சொன்னார், “நான் மக்கள் தொகையைக் கணக்கு வைத்து கருத்தடையை, குடும்பக் கட்டுப்பாட்டை, கர்ப்ப ஆட்சி என்று சொல்லவில்லை. பெண்களின் விடுதலையை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறேன்'' என்றார்.

அந்தக் கருத்தைத்தான் மனதில் வைத்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னார்,

''காதலுக்கு வழி வைத்துக்

கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம்

இதிலென்ன குற்றம்?

காதலுக்கோ பிள்ளை

தவிர்ப்பதற்கோ பிள்ளை!'' என்று சொன்னார்.

தந்தை பெரியார் அவர்கள், ''திருமணம் என்பதே ஒரு கிரிமினல் குற்றம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு நாளை ஒரு சமுதாயம் வரும். வாழ்ந்து கொண்டிருக்கலாம் - அந்த ஒரு ஏற்பாடு தேவையில்லை'' என்ற புரட்சிகரமான கருத்துகளை சொன்னபொழுது,

''ஒருவனுக்கும் ஒருத்திக்கும் என்ற திருமணம் ஒழிதல் நன்றாம்'' என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இந்தக் கருத்துகள் தீர்ப்புகளாக வந்திருக்கின்றன

இந்தக் கருத்தின் எல்லைக்கு யாராவது சென்றிருக் கிறார்களா? இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இந்தக் கருத்துகள் தீர்ப்புகளாக வந்திருக்கின்றன.

அன்றைக்குப் பெரியார் சொன்னபொழுது, செரி மானம் செய்துகொள்ளாதவர்கள் - அந்தக் கருத்தைப் புரட்சிக்கவிஞர் அவர்கள் அப்படியே கவிதையில் குழைத்து கொடுத்தார். மருந்தாளுநர் என்று சொன்னேன் அல்லவா அதற்கு உதாரணம் இது.

தந்தை பெரியார் சொன்னார், ''திருமணம் கிரிமினல் குற்றம் ஆக்கப்படவேண்டும்'', "திருமணம் என்ற ஒரு ஏற்பாடு தேவையில்லை'' என்றார்.

அதை எவ்வளவு அழகாக, சிறப்பாகக் கவிதையில் வடித்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் அவர்கள் - பெண்ணுரிமையினுடைய உச்சம் அது.

இன்றைக்குக்கும்கூட பலரால் செரிமானம் செய்துகொள்ள முடியாத தத்துவங்களில் ஒன்று. ஏனென்றால், பெரியாருடைய கொள்கைகளை முழுமையாக உள்வாங்கி, அதை இலக்கியத்தில், பாட்டில் எல்லோருக்கும் பதியக் கூடிய அளவிற்கு செய்வதுதான் தன்னுடைய லட்சியம் என்பதை - சுயமரியாதை ஆயுதக் கிடங்களில் தயாரிக்கப்பட்ட வாளாக - வீச்சாக புரட்சிக்கவிஞர் அவர்கள் இருந்தார் என்பதுதான் அவருடைய தனித்தன்மை.

அதன் காரணமாகவே அவருக்குத் தரப்படவேண் டிய, அவர் பெறவேண்டிய புகழை அவர் இழந்திருக்கிறார். வாய்ப்பையெல்லாம் இன எதிரிகள் தடுத்திருக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றி அவர் கொஞ்சம்கூட கவலைப்பட்டதில்லை.

ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம்,

இவ்வளவு பெரிய பரந்த, விரிந்த மனப்பான்மை உள்ளவர் என்று சொல்கிறீர்களே, அப்படிப்பட்டவர் எப்படி தான் திராவிடன் என்று சொல்லும்பொழுது, ''நாவெல்லாம் இனிக்குது - தேன்தான் பாயுது நாவினிலே'' என்று சொல்லக்கூடிய அளவிலே பாட்டு எழுதினார்? பிறகு ஏன் அந்த அளவிற்கு அவர் வந்தார்? என்று கேள்வி கேட்லாம்.

பெரியாருக்கும் அது பொருந்தும் - புரட்சிக்கவிஞர் அவர்களுக்கும் அது பொருந்தும் என்பதுதான் - அதற்கு விளக்கம் சொல்லவேண்டியது நம்மைப் போன்றவர்களுடைய கடமையாகும்.

நம்முடைய பார்வை - உலகப் பார்வை!

நம்முடைய பார்வை - உலகப் பார்வை - நம்முடைய அணுகுமுறை மானுடத்தையே காப்பாற்றுகின்ற அணுகுமுறையாகும். ஆனால், நமக்கென்று ஒரு முகவரி உண்டு. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் என்ன பதில் சொல்வது?

சென்னையில் இருக்கிறேன்.

சென்னையில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

நான் இருப்பது அடையாறு, கஸ்தூரிபா நகர் முதன்மைச் சாலை பழைய எண் 13, புதிய எண் 31 என்று நான் சொல்லவேண்டாமா?

அதனால், எனக்கு குறுகிய மனப்பான்மை என்று சொல்ல முடியுமா? அது நான் வசிக்கின்ற முகவரி.

பண்பாடு என்பது அது முதலில் இங்கிருந்து கிளம்புகிறது. எனவேதான், மானிடத்திற்கு அது சமத்துவத்தை சொல்லக்கூடிய பண்பாடு.

அந்தப் பண்பாடும், மானிடமும் முரண் பாடல்ல.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்று சொல்லும்பொழுது, அது உலகம் முழுவதும்.

அதுபோலவே,

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

சுயமரியாதை இயக்கத்தினுடைய தத்துவமே, அனைவருக்கும் அனைத்தும்; இதற்காகத்தான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது.

அனைவருக்கும் அனைத்தும்!

சமூகநீதி என்று நாம் சொல்லுகிறோம்,

பாலியல் நீதி என்று சொல்லுகிறோம்,

ஜாதி ஒழிப்பு என்று சொல்லுகிறோம்,

ஆதிக்க அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறோம்

முதலாளித்துவம் ஒழிக என்று சொல்லுகிறோம்

சமதர்மம் ஓங்குக என்று சொல்லுகிறோம் என்று சொன்னால் நண்பர்களே, இதை நன்றாக ஆழமாக சிந்தத்துப் பார்த்தீர்களேயானால், இரண்டே வரிகளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது சொன்னார்,

அனைவருக்கும் அனைத்தும்என்று.

அனைவருக்கும் அனைத்தும்என்பதை புரட்சிக் கவிஞர் அவர்கள்,

எல்லாருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம்!” என்றார்.

எல்லாருக்கும் எல்லாமும் - அனைவருக்கும் அனைத்தும்

எவ்வளவு அழகாக, அந்தக் கருத்தை தேனில் குழைத்து மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைத்தால் எங்கே சண்டை? எங்கே போர்? எங்கே ரகளை? யாருக்கு அதிருப்தி? என்பதை நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

சமதர்மம் என்பதற்கு தந்தை பெரியார் ஒரு விளக்கம் சொன்னார்.

அதற்கு நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள் தத்துவ ரீதியாக விளக்கம் எழுதியிருக்கிறார்.

சமதர்மம் என்பதற்கு விளக்கம் சொல்லும்பொழுது, சமதர்மம் என்பது பேதம் ஒழிந்த இடம்.

ஒரு மனிதன் அனுபவிப்பதை, இன்னொரு மனிதன் அனுபவிக்கவில்லையே - அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிறபோதுதான், வருத்தம் ஏற்படுகிறது.

ஒப்பிட்டுப் பார்ப்பதுதானே மனித குலத்தின் இயல்பு

எல்லோருக்கும் இரண்டு கைகள் என்று சொன்னால், ஒருவனுக்கு மட்டும் மூன்றாவது கை இருக்குமேயானால், அது முதுகைச் சொறிந்து கொள்வதற்கும், மூன்றாவது கண் இருக்குமேயானால், அது பின்னால் வருகின்றவன் முதுகில் குத்துகிறானா என்பதைப் பார்க்கலாம் என்று சொல்கிற அளவிற்கு இருக்குமேயானால், அது நல்லதுதானே என்று நினைக்கலாம்; அப்படி ஒருவனுக்கு மூன்றாவது கை இருந்து, மற்றவனுக்கு இல்லையே என்று ஒப்பிட்டுப் பார்ப்பதுதானே மனித குலத்தின் இயல்பு.

எனவேதான், மனித குலம் தழைக்கவேண்டுமானால், அனைவருக்கும் அனைத்தும்; எல்லோருக்கும் எல்லாமும் - அதுதானே குறள் நெறி.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

எனவே, மானுடப்  பார்வை. அந்த மானுடப் பார்வையைப் பார்த்தவர்கள்.

உலகம் ஒரு குலம் என்ற அளவிலே வந்து, யாதும் ஊரே, யாவரும் கேளிர். அனைவரும் உறவினர்; புரட்சிக்கவிஞர் அவர்கள் ஆத்திச்சூடியில்கூட, அனைவரும் உறவினர் என்பதிலிருந்துதான் தொடங்கு வார்கள்.

உலகக் கவிஞராக உயர்ந்திருக்கிறார்

ஆகவேதான், குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப் பதிலிருந்து, பெரியவர்கள் வரையில், அவருடைய மானுடப் பார்வை, மானுட நேயம் என்பது, அது சுயமரியாதை இயக்கத்தினுடைய கனிந்த விளைவு - அதை கவிதைகளில், இலக்கியத்தில் தெளிவாக வடித்ததின்மூலமாக அவர் உலகக் கவிஞராக உயர்ந் திருக்கிறார்.

இன்னும் ஒரு கட்டத்தைச் சொல்லவேண்டும் - உலகப் பார்வை என்று சொல்லுகின்ற நேரத்தில் நண்பர்களே, வேறு எந்த கவிஞரும் செய்ய முடியாத அளவிற்கு பகுத்தறிவுச் சிந்தனைகளில் செய்திருக்கிறார்.

தந்தை பெரியார், ‘நம்முடைய மக்களுக்கு அறி வியல் பார்வை வேண்டும் - மூடத்ததனத்தின் முடை நாற்றம் உடைக்கப்படவேண்டும்என்றார்.

நம்முடைய மக்கள் செவ்வாய் தோஷம் என்று சொல்லிக் கொண்டிருந்த நாட்டிலே, செவ்வாய் கோளிலே இறங்கி ஆராய்ச்சி செய்யக்கூடிய அள விற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது.

இன்னமும் செவ்வாய் தோஷம் என்று சொல்லிக் கொண்டு சிலர் இங்கே இருக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனையான ஒன்று, வெட்கப் படக்கூடிய ஒன்று என்பதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இதுவரை நீங்கள் புரட்சிக்கவிஞரைப்பற்றி அறியாத பார்வை!

இதுவரை நீங்கள் அறியாத பார்வை - புரட்சிக் கவிஞர் அவர்களைப்பற்றி சொல்லவேண்டும்.

என்னவென்றால், அறிவியல் பார்வையோடு பெரியார் அவர்கள், முன்னோக்கிப் போ என்றார் - பெரியாருடைய இனிவரும் உலகம் எப்படிப்பட்ட உலகம்?

எல்லோருடைய கைகளிலும் கைப்பேசி இருக்கும் என்று சொன்னார். அதேபோல, இன்றைக்கு எல்லோருடைய கைகளிலும் கைப்பேசி இருக்கிறது.

அறிவியல் சாதனை!

கரோனா தொற்று காலகட்டத்தில், பெங்களூருவி லிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், உலகம் முழு வதும் இருந்தும் இந்த நிகழ்ச்சியினை காணொலி காட்சியின்மூலம் கண்டு - கேட்கக் கூடிய அளவிற்கு நாம் உரையாற்றிக் கொண்டிருக்கின்றோம். இந்த நெருக்கடியையும் தாண்டி, நாம் கலந்துரையாடக் கூடிய ஒரு வாய்ப்பை இன்றைக்குப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால், நண்பர்களே, இது அறிவியல் சாதனையல்லவா!

இந்த நேரத்தில், நூற்றாண்டின் பெருமை என்னவென்று சொல்லும்பொழுது நான் சொன்னேன் அல்லவா - பெரியாருடைய கருத்துகள் முற்போக்குக் கருத்துகள். இனிவரும் உலகம் என்று தந்தை பெரியார் அறிவியலைக் காட்டினார்.

புரட்சிக்கவிஞர் பாடுகிறார் - “இந்த நூற்றாண்டு!”

இந்த நூற்றாண்டைப் பற்றி சொல்லும்பொழுது - இதுவரையில் பழைமையைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். பழைமையை நாம் அறவே மறந்துவிடவேண்டும் என்று சொல்ல முடியாது.

தமிழ் காலத்தால் மூத்த மொழி - அறிவால் மூத்த மொழி என்று சொல்லுகிறபொழுது, அது அதோடு நின்று விடக்கூடாது. பெரியார்தான் கேட்டார்.

(தொடரும்)

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image