மூடநம்பிக்கைகள் கரோனாவுக்கு ‘நல்ல' தீனியே!

கரோனாவை விரட்டுவதற்கு பசு மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதும், உடல் முழுவதும் மாட்டுச் சாணியைப் பூசிக் கொள்வதும், நாடு காட்டுவிலங்காண்டி காலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதாகப் பொருள்.

தொலைக்காட்சியில் மாட்டுச் சாணத்தைப் பூசிக் கொள்ளும் காட்சியைப் பார்த்தபோது - குமட்டிக்கொண்டு வந்தது. இதுகுறித்து அறிவியல் நிபுணர்கள் கருத்துகளைக் கூறியுள்ளனர். இவையெல்லாம் விஞ்ஞான சிந்தனைக்கு எதிரானவை, இவை தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தும் உள்ளனர்.

நாட்டின் ஆட்சித் தலைவராக இருக்கக் கூடியவர்களே - குறிப்பாக பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி அவர்களே கூட கரோனாவை விரட்டிட, கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று சொல்லவில்லையா? ராம நாமத்தை ஜெபியுங்கள்; ரிக் வேத மந்திரங்களைச் சொல்லுங்கள், கரோனா வைரஸ் ஓட்டம் பிடித்து விடும் என்று சொல்லுவது எல்லாம் நகைச்சுவை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இத்தகையவர்கள் மனித சமூகத்தைத் தவறான வழியில் இழுத்துச் செல்லும் ஆபத்தானவர்கள் அல்லவா!

மும்பையில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டில் பிரதமர் மோடி என்ன பேசினார்?

யானைத் தலையை வெட்டி மனித உடலில் ஒட்ட வைத்தவர் சிவபெருமான் (விநாயகன் பிறப்பு - புராணப்படி) அப்பொழுதே பிளாஸ்டிக் சர்ஜரி பாரத பூமியில் இருந்தது என்று சொல்லவில்லையா?

நோபல் அறிஞர் வெங்கட்ராமன்ராமகிருஷ்ணன் போன்ற வர்கள் தலையில் அடித்துக் கொள்ளவில்லையா? அவரைச் சந்திக்க பிரதமர் மோடி விரும்பியும், தான் சந்திக்க விரும்பவில்லை என்று பச்சையாகக் கூறியது உண்டே!

பாரத ரத்னா' பட்டம் பெற்ற அறிவியலாளரான சி.என்.ஆர்.ராவ்டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டுக்கு (9.1.2016) அளித்த பேட்டியில் கூறியது என்ன?

நாட்டு நலனில் அக்கறை செலுத்த நல்ல ஆலோசகர் தேவை என்று கூறினாரா இல்லையா?

நீங்கள் புராணங்களில் கூறப்படும் அறிவியல் காரணங்களை நம்புகிறீர்களா?' என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் முக்கிய மானது.

‘‘இல்லை, நான் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்புவதில்லை. நமது நாடு மதத்தின் பெயரால் பல்வேறு மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளது. இங்கு மூடநம்பிக்கையைக் கூட அறிவியலாக்கி விட்டனர். அதையே மத நம்பிக்கை என்ற பெயரில் மக்களும் நம்பி வருகின்றனர். அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகளையே மக்கள் நம்பவேண்டும். நான் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் நவீன அறிவியலையும், புராணங்களுடன் தொடர்புபடுத்து பவர்களுக்கு எதிரானவன்; அறிவியல் மீது நம்பிக்கை வையுங்கள். மதம் மற்றும் அறிவியல் இரண்டும் வேறு வேறு ஆகும். மதத்தை அறிவியலில் புகுத்தக் கூடாது. நவீன உலகில் அறிவியல் வளர்ச்சியின் வேகத்தினை மதம் மந்தப்படுத்திவிடும். மக்களிடையே மதம் வேறு; அறிவியல் வேறு என்று பிரித்துப் பார்க்க விழிப்புணர்வை உருவாக்கவேண்டும்'' என்று கூறினார்.

பாரத ரத்னா' சி.என்.ஆர்.ராவ் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தூன்றிக் கவனிக்கத்தக்க கருத்தாகும்.

இவர்களின் கருத்துக்கு யாரும் அரசியல் முலாம் பூச முடியாது. விஞ்ஞானிகள் உண்மையையும், நிரூபணத்தையும் சுவாசிக்கக் கூடியவர்கள்.

நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்ததற்கும், மனிதனின் ஆயுட்காலம் நீட்சி அடைந்ததற்கும் காரணமே - அறிவியல் வளர்ச்சியே தவிர, மத மவுடீக ஆன்மிகப் பிரார்த்தனையால் அல்ல; இன்னும் சொல்லப்போனால், ஆன்மிக அஞ்ஞானத்தையும்கூட அறிவியல் கருவிகளைக் கொண்டே பரப்புகிறார்கள் என்பதுதான் வெட்கக்கேடான முரண்பட்ட நிலையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-(எச்) அறிவியல் மனப் பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிமைப்படைக் கடமை என்று வலியுறுத்துகிறது. மிகவும் வருந்தத்தக்க நிலை என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தின் இந்த அடிப்படைக் கருத்தை பிரதமராக இருக்கக் கூடியவரே மதிப்பதில்லை என்பதைவிடப் பின்பற்றுவதில்லை.

இந்தியாவில் பழம்பெரும் அய்.அய்.டி. நிறுவனமான காரக்பூர் அய்.அய்.டி.யில் வாஸ்து சாஸ்திரம் பாடத் திட்டத்தில் இடம்பெறுகிறது என்றால், எங்கே போய் முட்டிக்கொள்வது?

இலட்சக்கணக்கான மக்கள் ஒரு நதியிலோ, குளத்திலோ மூழ்கிப் புண்ணியம் தேடுகின்றனர் என்பதைவிட ஆபத்தான  -உயிருக்கே இறுதியான மூடநம்பிக்கையை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது?

அரித்துவாரில் கும்பமேளா என்ற பெயரில் நீரில் மூழ்கி எழுந்தவர்கள்தான் - அம்மாநிலத்தில் கரோனாவால் மரணித்த வர்களுள் 50 விழுக்காட்டினர் என்று தெரிந்த பிறகும் - மாட்டு மூத்திரத்தைக் குடியுங்கள் என்பதும், மாட்டுச் சாணியைப் பூசிக் கொள்ளுங்கள் என்பதும் தடுக்கப்படவேண்டாமா?

தன்னிச்சையாக பல வழக்குகளை முன்வந்து நடத்தும் நீதிமன்றங்கள்  - இந்த முக்கியமான, உயிருக்கு ஆபத்தான, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரான நடப்புகள் குறித்து முன்வந்து விசாரிக்கத் தயங்குவது ஏன்? ஏன்?

நீதிமன்றத்தையும் கூட மூடநம்பிக்கைக் காட்டாறு மூழ்கடிக்கிறது என்பதுதானே!

பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பார்களா?

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image