முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய மூன்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 4, 2021

முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய மூன்று

 நேற்றைய தொலைக்காட்சி விவாதங்களில் நடந்து முடிந்த தேர்தல் - முடிவுகளின் அடிப்படையில் மூன்று பிரச்சினைகள் முக்கிய இடம் பெற்றன.

(1) மதவாத  அரசியல்

(2) ஜாதியவாத அரசியல்

(3) 'மொழிவாத' அரசியல் என்பவை தான் அந்த மூன்று.

மதவாத அரசியலைப் பொறுத்தவரை  பாரதீய ஜனதா கட்சியின் முதலும் முடிவுமான அரசியல் ஹிந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்பதும் ராமன் கோயில் கட்டுவது என்பதும், குடியுரிமை திருத்த சட்டம் என்பதெல்லாம் அதனைச் சார்ந்தவைதான்.

அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கக் கூடிய ஆட்சி தொட்டதற்கெல்லாம் மதவாதப் பார்வை என்பது பச்சையான பாசிச துர்க்குணமாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவரைக்கூட வேட்பாளராக நிறுத்துவதில்லை என்பதிலிருந்தே அதன் புத்தியில், குணத்தில் மதவெறி மேலோங்கி நிற்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உணவுப் பிரச்சினையில்கூட மதக் கண்ணோட்டம் என்பது சகிக்கவே முடியாத கீழ்நிலையாகும். மாட்டுக் கறியைச் சாப்பிடுவோர் மலத்தைச் சாப்பிடலாமே என்று கூறக் கூடியவர்களை எல்லாம் பா... - சங்பரிவார் வட்டத்தில் சர்வ சாதாரணமாகக் காண முடியும்.

இந்தக் காரணங்களால்தான் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் அவர்களை விரட்டி விரட்டியடிக்கிறது. திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி அரசியல் நடத்தும் நிலை!

தமிழகத் தேர்தல் களத்தில் பா...வினர் பா... வின் கொள்கையையோ பிரதமரின் படத்தையோ கூட முன் நிறுத்தாததற்குக் காரணம், தமிழ்நாடு திராவிட இயக்கக் கொள்கை கொழிக்கும்பூமி, தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட பூமி என்ற அச்சம்தான்.

ஆனாலும் சட்டப் பேரவையில் அவர்களின் குரல் எதைச் சார்ந்தது என்பதை நாடு அறியப் போகிறது.

இரண்டாவதாக ஜாதீயவாதம்! தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜாதியை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மரியாதை இல்லை. ஜாதியின் அடிப்படையில் தனியாக நின்றால் கட்டிய பணத்தைக் கூடத் திரும்ப வாங்க முடியாது என்பது கடந்த காலம் கற்பிக்கும் பாடமாகும்.

அதே நேரத்தில் செல்வாக்குள்ள கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு அந்தச் சூழலில் தம் ஜாதியை முன் நிறுத்தி ஜாதிக்காரர்களின் வாக்குகளை சுளையாக விழுங்கும் தந்திரத்தைக் காண முடிகிறது.

சமூகநீதிக்கான ஜாதியின் அளவுகோல் என்பது வேறு - தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஜாதியை முன்னிறுத்துவது என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல.

நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகளில் குறிப்பிட்ட வட்டாரங்களைப் பார்க்கும்போது - ஜாதி எந்த அளவு பாத்திரம் வகித்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மூன்றாவதாக மொழி பிரச்சினை. திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை - மொழி உரிமை - இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது வேறு. மொழி மானமும் இனமானமும் தேவை என்பது தேவையானதாகும்.

அதற்கு மாறாக தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு பாடுபடும் தலைவர்களுக்கு மொழி முத்திரை குத்தி - அவர் யார் தெரியுமா தெலுங்கர், இவர் யார் தெரியுமா கன்னடியர், இவர் மூலம் என்ன தெரியுமா மலையாளம் என்றெல்லாம் வெறியேற்றிப் பேசுவது எல்லாம் எத்தகைய ஆபத்து! தமிழினத்திற்குத் தன்மானத்தை ஊட்டிய தந்தை பெரியார் அவர் வழிவந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரைக்கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாலும் அது எத்தகைய கீழ்த்தரம்!

இந்த மொழிகள் எல்லாம் தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்தவை தான் என்கிற கடுகளவு மொழி அறிவும், வரலாற்று அறிவும் இல்லாமல் வெறியேற்றிப் பேசுவது ஏற்றுக் கொள்ளப்படவே முடியாதது. இவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான ஒன்றே!

இந்த மூன்றையும் திராவிட இயக்கக் கோட்பாட்டில் வளர்ந்த திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் தயக்கம் ஏதுமின்றி முறியடிக்க வேண்டும் என்று திரு. கோபாலகிருஷ்ணகாந்தி (காந்தியாரின் பேரன்) மேனாள் ஆளுநர் கூறியிருப்பதும் முக்கியம்!

தமிழ்மண் - தந்தை பெரியார் மண் - திராவிட இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மண் - மதச் சார்பின்மைக் கோட்பாட்டைக் கொண்ட மண் - ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடர்ந்து நடத்தப்படுகிற மண் - இதனைப் பாதுகாக்கும் கொள்கையும் செயலும் இயல்பாகவே திமுகவுக்கு உண்டே! அமைதி தவழும் சமத்துவ மணம் மானமிகு தளபதி மு.. ஸ்டாலின் ஆட்சி நிருவாகத்தால் கமழும் என்பதில் அய்யமில்லை.

நாடு அதைத் தான் எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment