நெருப்பாற்றில் நீந்தி, ஏச்சுப் பேச்சுகளைத் தாண்டி தி.மு.க.வின் மூன்றாம் முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்!

முதல் சவாலாகக் கரோனாவை ஒழிக்க மக்கள் இயக்கமாக செயல்பட முன்வந்துவிட்டார்!

தலைசாய்ந்த வெற்றிக் கதிர்போல் அடக்கமாக ஆட்சி அமையும் - ‘திராவிடம் வெல்லும்' என்ற சாட்சிக்கான ஆட்சியாகவும் மலரும்!

தி.மு..வின் மூன்றாம் முதலமைச்சராகும் தளபதி மு..ஸ்டாலின் ஆட்சி தலைசாய்ந்த நெற்கதிர்போல அடக்கத்தோடு - அதேநேரத்தில் செயலூக்க மிக்க ஆட்சியாக அமையும்  - ‘திராவிடம் வெல்லும்' என்பதற்கான சாட்சியமாகவும் மலரும் என்று கூறி, தாய்க்கழகமாம்  திராவிடர் கழகம் உச்சிமோந்து வாழ்த்தி வரவேற்பதாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

உழைப்பின் உருவம் - பண்பின் பெட்டகம் தளபதி மு..ஸ்டாலின்!

நாளை (மே 7 ஆம் தேதி) காலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தனித்த பெரும்பான்மையோடு மதச்சார் பற்ற கூட்டணி கட்சிகளின் பேராளர்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தோடும், 234 இடங்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் 159 உறுப்பினர்களும் ஒரு புதிய மக்கள் ஆட்சியை - புதிய விடியலைத் தருவதற்காக - உழைப்பின் உருவமான - பண்பின் பெட்டகமான தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் தனது சகாக்களுடன் புதிய அமைச்சரவை அமைத்து தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்!

வல்லமை படைத்துக் காட்டினார்!

எளிதில் இவர் இந்த வெற்றியைப் பெற்றிடவில்லை.

நெருப்பாற்றில் நீந்தி - ஏளனம், ஏகடியம், எகத்தாளப் பேச்சுகள் - விமர்சனங்கள், ‘இரட்டை என்ஜின்களின்' அதிகார பலம், பண பலம், பத்திரிகை பலம், வருமான வரித்துறை ஏவுகணைகள் - இவை தேர்தல் களங்களில் இறுதி முயற்சிகளாக தி.மு.. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க ‘‘அஸ்திரங்களாக'' பாய்ந்தன! அவற்றை முதலமைச்சர் நாற்காலியின் அடியில் போட்டு அமரும்வஸ்திரங்களாக்கி', வல்லமை படைத்துக் காட்டினார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் தலைமை முதலமைச்சர்! மூன்றாவது ஆட்சித் தலைவராக அவரின் செயல் திறன், ஆளுமை 7 ஆம் தேதி முதலமைச்சர் பதவி ஏற்கும் முன்பே, மக்கள் ஆணை கிடைத்த மறுநாளே (மே 3 ஆம் தேதியே) செயல்படத் தொடங்கி, கரோனா கொடுந் தொற்று என்ற மிகப்பெரிய சவாலை எதிர் கொள்ள முக்கிய அதிகாரிகளை அழைத்து சீரிய யோசனைகளைக் கூறி செயல்பட வைத்துள்ளார்.

கலைஞர் அவர்களைப்போல மக்கள் சந்திப்பு என்பதையும் அவர் ஒதுக்கி விடாமல், தனது பணிகளை வரைமுறைப் படுத்திக் கொண்டுகடிகாரம் ஓடுமுன் ஓடிக் கொண்டு' அமைதியாக - அடக்கமாக - புதிய சரித்திர அரசியல் வரிகளை எழுதத் தொடங்கிவிட்டார்!

அவர் முன் உள்ள பிரச்சினைகள் மலைபோல்!

கரோனா இரண்டாம் அலையின் வீச்சை எதிர்கொள்ள தனது புதிய அரசை வேகமாக முடுக்கி செயல்பட வைக்க அவர் முன் உள்ள பிரச்சினைகள் மலைபோல் உள்ளன!

1. படுக்கை பற்றாக்குறை - மருத்துவ மனைகளில்

2. ஆக்சிஜன் பற்றாக்குறை

3. தடுப்பூசிகள் போதாமை

4. சரியான முறையில் 18 வயதுள்ள பெரும் பகுதியினரையும் இணைத்தத் தடுப்பூசித் திட்டம்.

5. தொற்று  பரவாமல் தடுக்க, கரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக்கி செயல்பட வைக்கும் புதிய நம்பிக்கை ஊட்டும் செய்தி.

6. ஆணை இடும் என்ற (War Room) தகவல் ஒருங்கிணைப்புத் திட்டம் - அறிவிப்பு!

7. தனியார் மருத்துவமனைகளுக்கு - தொழிலைவிட தொண்டுக்கே முன்னுரிமை அளியுங்கள் என்ற கனிந்த உருக்கமான வேண்டுகோள்!

மே 6 ஆம் தேதி முதல் - மே 20 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகள் எவ்வகையிலும் பொருளா தாரத்தை முடக்கிவிடாமல் - கட்டுப்பாடும், பாதிக்கப்படாத தொழில், வணிக முயற்சி களும் என்ற தராசின் இரண்டு தட்டு களையும் சம ஈவுடன் நிறுத்தும் திறமைமிக்க அணுகுமுறை.

8. முதல்வராக அதிகாரப்பூர்வ பொறுப்பு ஏற்குமுன் கரோனா களப் பணியின் வீரர், வீராங்கனைகளை, செவிலியர்கள் 1,212 பேரை நிரந்தரப் பணி நியமனம் செய்து - அறிவித்து அவர்களுக்குத் தெம்பூட்டிய கருணை மிகுந்த ஆணை - முடிவு.

9. பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக - அவர்கள்தம் உயிரைப் பொருட்படுத்தாது  - கால நேரம் பாராது கடமையாற்றும் தன்னல மறுப்பாளர்கள் என்பதை ஏற்று - அறிவித்தது.

முதல்வர் ஸ்டாலின் வருவார் பின்னே - செயல் ஓசை கேட்கும் அதற்கு முன்பே!'

10. வெளிப்படைத் தன்மையோடு அரசு இயந்திரம் இயக்கப்படும் என்ற செயல் கலந்த அறிவிப்புமூலம் முதல்வர் நாற் காலியில் அமரும் முன்பேயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே'  - ‘முதல்வர் ஸ்டாலின் வருவார் பின்னே - செயல் ஓசை கேட்கும் அதற்கு முன்பே' என்று மக்களுக்குப் புரிய வைத்து புது நம்பிக்கையை விதைத்துவிட்டார்.

சென்னையில் எங்கோ தி.மு..வினர் சிலர்அம்மா உணவகத்தின்' பெயர்ப் பலகையை அகற்றி அத்துமீறி நடந்து கொண்டவர்கள்மீது சட்டம் பாய்ந்து - தவறுகளை உடனே சரி செய்ய வைத்து, சட்டம் - ஒழுங்கு காப்பதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கே இடமில்லை என்று தொடக்கத்திலேயே தனது கட்சியினருக்கும் எச்சரிக்கை மணி அடித்துத் தனி முத்திரை பதித்து உயர்ந்துள்ளார்!

திராவிடம் வெல்லும்' என்பதற்கான சாட்சி!

எம் இனத்தின் மீட்சி

அரசியல் ஆரூடங்களையும் - ஜோசி யத்தைப் பொய்யாக்கி, மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறியடித்துக் காட்டியே  - முதல்வர் நாற்காலி என்ற முள் கிரீடத்தை அணிந்து, எதையும் தாங்கும் இதயத் தோடும், வெற்றிக் கதிர்கள் வெளிச்சம் வீசியபோதும் தலைசாய்ந்தே அடக்கத் தோடு கூடிய ஆட்சியாக தமது ஆட்சியிருக்கும் என்பதை அகிலத்துக்கும் செய்தியாக அறிவிக்கும் அவர் ஆட்சி  திராவிடம் வெல்லும்' என்பதற்கான சாட்சி!

எம் இனத்தின் மீட்சி என்று தாய்க்கழகம் உச்சி மோந்து, உளமெலாம் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம் - வாகை சூடும் எம் தளபதி முதல்வரை!

குடிசெய்வார்க் கில்லை பருவம்  மடிசெய்து

மானங் கருதக் கெடும்  (குறள் 1028)


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.5.2021

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image