கரோனா நோய் தடுப்பு பணியில் கோவில்களில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு

சென்னை, மே 12 கரோனா நோய் தடுப்பு பணியில் கோவில்கள் சார்பாக தினமும் 1 லட்சம் மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

கரோனா நோய் தடுப்புக்காக கோவில் களில் உணவு பொட்டலங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்க முதல்-அமைச்சர் வழிகாட்டி உள்ளார்.

அதனை ஏற்று, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை யங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் விக்ரம் கபூர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கு.ராசாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது:-

தினசரி 1 லட்சம் பயனாளிகள்

கரோனா நோய் பாதிப்பு குறையும் வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைக் கேற்ப உணவு பொட்டலங்கள் உயர்த்தி வழங்க அறநிலையத்துறை முடிவு செய் துள்ளது.

அதன்படி தினசரி ஒரு 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் செலவில் அறநிலையத்துறை மூலம் மதிய உணவு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments