புரட்சிக்கவிஞர் எங்கும் வாழ்கிறார்! என்றும் வாழ்கிறார்!! எப்போதும் தேவைப்படுகிறார்!!!

 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில்  தமிழர் தலைவர்

சென்னை, மே 9 புரட்சிக்கவிஞர் எங்கும் வாழ்கிறார்! என்றும் வாழ்கிறார்! எப்போதும் தேவைப்படுகிறார்!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

கடந்த 29.4.2021 மாலை 7 மணியளவில் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், மும்பை இலெமுரியா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவினை ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி, அவரின் பிறந்த நாளான 29.4.2021 (10 நாள்கள்)வரை ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிவரை காணொலி மூலம் கருத்தரங்கை நடத்தி வந்தனர். நிறைவு நாளான 29.4.2021 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

வள்ளுவருக்கு அடுத்து

ஓர் அறிவாளி வரவேண்டாமா?

ஏன் வள்ளுவரோடு ஓர் அறிவாளியை நிறுத்த வேண்டும் - அதற்கு அடுத்து ஓர் அறிவாளி வர வேண்டாமா? ஏன் வரக்கூடாது? என்ற கேள்வியைக் கேட்டார்.

அறிவுக்கு எல்லை உண்டா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு!

அந்த சிந்தனையை அப்படியே உள்வாங்கிக் கொண்டு புரட்சிக்கவிஞர் அவர்கள் செய்தார்கள். அவருடைய பார்வை எவ்வளவு விரிந்த பார்வை என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

பெரியாருடைய இனிவரும் உலகத்தையும்...

இதோ அருமையாகக் கேட்கிறார் - விஞ்ஞான உலகத்தைப்பற்றிப் பேசுகிறார், கேளுங்கள்.

''எந்த நூற்றாண்டும் இல்லா முன்னேற்றம்;

இந்த நூற்றாண்டில் எழுந்ததே ஏற்றம்!

கால விரைவினைக் கடக்கும் வானூர்தி

ஞாலப் பரப்பினைச் சுருக்கிற்றுப்பார் நீ!

தொலைபேசித் தொடர்பு தோழமை நட்பு!

அலைகடல் மலையை அறிந்தது பெட்பு!

வானொலி யாலே வையமொழிகள்

தேனொலி யாயின திக்கெலாம் கனிகள்!

ஏவுகணைகள் கோள் விட்டுக் கோளைத்

தாவின எங்குமே நாம் செல்வோம் நாளை!

ஒற்றுமை அமைதி ஓங்கிடத் தம்பி

முற்றும் அறுத்தெறி வேற்றுமை முட்கம்பி!''

பெரியாருடைய இனிவரும் உலகத்தையும், புரட்சிக்கவிஞர் அவர்களுடைய இந்த நூற்றாண் டைப் பற்றிய பார்வை உள்ள ஒரு கவிதையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

புரட்சிக்கவிஞரின்

தொலைநோக்குப் பார்வை!

அடுத்ததாக மகளிருக்குச் சொல்கிறார் புரட்சிக் கவிஞர். இதுதான் மிக ஆழமான ஒரு கருத்து. உலகம் என்றால் இப்போது இருக்கக்கூடிய மண்ணை மட்டும் நினைத்து நாம் பேசுகிறோம். ஆனால், விண்ணையும் தாண்டி, கோள்கள், ஏவுகணை, விண்வெளிப் பயணம் என்பதை இன்றைக்கு நடத்து கிறோமே என்பதைப்பற்றி சொல்லும்பொழுது - நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தான் - இடது காலைத்தான் அப்பொழுது வைத்தான் என்று பார்க்கின்ற நேரத்தில்,

அதற்கு முன்பே அதை வைத்து ஒரு கவிதை - புரட்சிக் கவிஞருடைய சிந்தனை எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.

நிலவில் மாந்தர் இறங்கும் நாள்

நெடுநாள் ஆகா தென்கிறார்;

குலவும் மகளே! விரைவினில்

குடியேறினாள் எம் தமிழ்மகள்

நிலவில் என்று பாரெலாம்

நெடுகப் பேசச் சொல்லுவாய்.

வெண்ணிலாவில் இறங்கிநீ

வெற்றி கொடுக்கும் அறிவியல்

தண்டமிழ்ப் பெண் கொண்டதாய்த்

தரையில் புகழும் வண்ணமே

எண்ணற்கரிய உடுக்களின்

இயல்பறிந்து வருகநீ!

மக்கள் வாழும் உலகினில்

மதங்கள் ஜாதி வேற்றுமை

சுக்கு நூறாய் ஆக்கிய

தூய பெரியார் முகமென

அக்கரைக்கண் தோன்றிடும்

அழகு நிலவில் இறங்குவாய்!”

பெரியாருடைய சிந்தனையினுடைய தேக்கங்களிலிருந்து மலர்ந்தவர்!

இந்த அறிவியல் பார்வை எந்த கவிஞருக்காவது இந்த அளவிற்கு எட்டியுள்ளதா? அவருடைய பார்வை, இந்த சமுதாயத்தில் தொடங்கி, இங்கே இருக்கிற மிகப்பெரிய மூடநம்பிக்கைகளையெல்லாம் சாடிய தொலைநோக்குப் பார்வை. ஏனென்றால், அவர் பெரியாருடைய ஆயுதக் கிடங்கிலிருந்து வந்த வர். பெரியாருடைய சிந்தனையின் தேக்கங்களி லிருந்து மலர்ந்தவர்.

தூய பெரியார் முகமென...

நிலாவைப் பார்க்கும்பொழுது பெரியாருடைய நினைவு வருகிறது கவிஞருக்கு.

எப்படிச் சொல்கிறார் பாருங்கள்,

மக்கள் வாழும் உலகினில்

மதங்கள் ஜாதி வேற்றுமை

சுக்கு நூறாய் ஆக்கிய

தூய பெரியார் முகமென

அக்கரைக்கண் தோன்றிடும்

அழகு நிலவில் இறங்குவாய்!”

எவ்வளவு பெரிய சிந்தனை - தத்துவார்த்தங்கள்.

இதுபோன்று நிறைய சொல்லிக்கொண்டே போக லாம்.

இப்படிப்பட்ட பார்வை உள்ள புரட்சிக்கவிஞரை,  பேராசிரியர்கள் சிலர், ‘பாரதியும் பாரதிதாசனும்என்ற நூலிலே, .. ஞானசம்பந்தம் போன்றவர்கள்கூட, அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. கடவுள் பற்றாளராகக் கடைசிவரை இருந்தார் என்று ஒரு திரிபுவாதத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தத் திரிபுவாதம் சாதாரணமானதல்ல.

பெரியார் கொள்கைகளைப் பாதுகாப்பதைப்போல....

அதற்காகத்தான் நான் சொன்னேன், பெரியாரை, அவருடைய கொள்கையைப் பாதுகாப்பதைப்போல, புரட்சிக்கவிஞரையும் நாம் பாதுகாக்க வேண்டும். புரட்சிக்கவிஞர் என்று சொன்னால், அவருடைய தத்துவார்த்தங்களை, அவருடைய கொள்கைகளை.

புரட்சிக்கவிஞருடைய கருத்து

புரட்சிகரமான கருத்து

ஏனென்றால், அவர் சாங்கியம் என்ற தத்துவத்தைச் சொன்னவர். வள்ளுவம் எப்படிப்பட்டது என்பது பற்றிய புரட்சிக்கவிஞருடைய கருத்து புரட்சிகரமான கருத்தாகும்.

அதை வைத்து, வள்ளுவரை இழிவுபடுத்தக் கூடிய கதைகளையெல்லாம் அவர் சுக்கு நூறாக்கினார்.

'வள்ளுவர்' என்ற பதவி என்பது, அது அமைச்சர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய பதவி. ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி எழுதியவர் புரட்சிக்கவிஞர் அவர்கள்.

அதேபோன்று, தத்துவார்த்தங்கள் என்று சொன் னால், அது மதத்தைப் பொறுத்ததல்ல என்பதற்கு, சாங்கியம் என்ற எண்ணூல் என்று சொல்லக்கூடிய அவற்றிலிருந்து சுட்டிக்காட்டியவர் புரட்சிக்கவிஞர் அவர்கள்.

புரட்சிக்கவிஞர் அவர்களுடைய இந்தக் கருத் தைச் சொல்லுகின்ற நேரத்தில், ஒரு விளக்கத்தை சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.

புலவர் இராமநாதன் அவர்கள் எப்படி ஆழமாக சிந்திப்பார்களோ, அதேபோன்று காரைக்குடியில் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்த வரான புலவர் பாவலர்மணி என்று அழைக்கப்பட்ட புலவர் பழம்நீ அவர்கள் சீரிய பகுத்தறிவாளர். அவர் எழுதிய ஒரு நூலில் ஓர் அருமையான சொல்லைப் பயன்படுத்துகிறார்.

பேராசிரியர் ..ஞானசம்பந்தம் அவர்கள், பாரதிதாசனுக்குக் கடவுள் பற்றுகூட உண்டு; கடைசிவரையில் அப்படியே இருந்தார் என்று ஒரு கதையளக்கிறார்.  ஏனென்றால், எப்போதுமே திரிபுவாதத்தைச் செய்கின்ற நேரத்தில் இப்படிக் கூறுகின்றனர்.

''வந்தவர் மொழியா

செந்தமிழ்ச் செல்வமா?''

தெய்வம் என்பதற்கு அவர் அளித்திருக்கின்ற விளக்கத்தை இங்கே சொல்லவேண்டுமானால், நேரம் அதிகமாகும்.

''வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா?'' என்ற நூலில் தெய்வம் என்பதைப்பற்றி,  தெய்வு என்பதைப்பற்றி, எப்படி அந்தச் சொல்லாட்சி வந்தது என்பதைப்பற்றி, அவர் எழுதி, புலவர் குழந்தை அந்தக் கருத்தை ஆழமாக ஏற்றிருக்கிறார். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அந்தக் கருத்தை ஆழமாக ஏற்றிருக்கிறார்கள். இப்படி பலருக்கும் அந்த வாய்ப்புகளை அளித்தவர் அவர்.

புரட்சிக்கவிஞர் அவர்களுடைய

இறுதிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்!

ஒரு செய்தியை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். புரட்சிக்கவிஞர் அவர்களுடைய இறுதிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

தோழர் முருகுசுந்தரம் அவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் அவர் சுட்டிக் காட்டி யிருப்பதை பாவலர் பழம்நீ அவர்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் கடைசிக்காலத்தில் அரசு மருத்துவமனையில்  இருக்கிறார். அப் பொழுது ஒரு சம்பவம் நடைபெறுகிறது, அதை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

மாரடைப்பால் தாக்கப்பட்டு, சென்னை அரசினர் மருத்துவமனையில் பாவேந்தர் படுத்திருந்தபொழுது, ''அப்பா, அப்பா'' என்று அன்போடு பழகும் அனுசுயா என்ற ஓர் அம்மையார், வடபழனி முருகன் கோவிலி லிருந்து திருநீறு கொண்டு வந்து பாவேந்தர் நெற்றி யில் பூசினார்.

 என்ன மந்திரமா?'' என்று சொல்லி, பாவேந்தர் அதைக் கலைத்துவிட்டார்.

இதுதான் சாகும்போதும் பாவேந்தருடைய கடவுள் கொள்கை.

இப்படி எழுதியிருக்கிறவர், நம்முடைய முருகு சுந்தரம் அவர்கள்.

திரிபுவாதங்கள் செய்யாமல் இருக்க கவிஞருடைய பெருமையை நாம் காப்பாற்றியாகவேண்டும்

ஆகவேதான், எதற்காக இதைச் சுட்டிக்காட்டு கிறோம் என்றால், மறுபடியும் சுப்பிரமணிய துதிய முதை கடைசியாகக் கொண்டுவந்து வைத்து, அநாமதேயமாக இருக்கிறவர்கள் சொன்னால்கூட பரவாயில்லை, விளக்கமாகத் தெரிந்த பேராசிரியர் களேகூட, புரட்சிக்கவிஞருக்குத் தெய்வ நம்பிக்கை இருந்தது அல்லது இராமாயணத்தைக்கூட அவர் போற்றினார் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவிற்கு, திரிபுவாதங்கள் செய்யாமல் இருக்க கவிஞருடைய பெருமையை நாம் காப்பாற்றியாக வேண்டும்.

அவருடைய தனித்தன்மை - அவருடைய சிறப்பு என்பது எப்படிப்பட்டது என்பதற்கு இறுதியாக ஒன்றைச் சொல்லி என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

புரட்சிக்கவிஞர் கவிதையால்

பதில் சொல்கிறார்!

இப்போது புரட்சிக்கவிஞர் அவர்களை எப்படி சிறுமைப்படுத்த விரும்புகிறார்களோ - அதுபோல, தந்தை பெரியார் அவர்களுடைய சிலைக்கு இன்றைக்கு அவமதிப்பு செய்வது, இப்படி செய்தால், நாம் ஆத்திரப்படுவோம், வேதனைப்படுவோம் - அதன் மூலமாக பெரியாரை மக்கள் மனதிலிருந்து, தமிழ் மண்ணிலிருந்து அகற்றிவிடலாம் என்றெல்லாம் மதக் கிறுக்கர்கள் நினைத்துக்கொண்டு, காவிச் சாயம் பூசுவது, திருநீறு பூசுவது போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்குப் பதிலை நாம் சொல்வதைவிட, புரட்சிக் கவிஞர் அவர்கள் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

ஏனென்றால்,

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக் குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார்!

உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்றெல் லாம் பலமுறை கேட்ட உங்களுக்கு இது புதிதாக இருக்கும்.

பெரியாரை எந்தக் கோணத்திலே பார்த்தாலும், பெரியாரை யார் தாக்கினாலும், அவர் தாக்குவார் - பூமராங் என்று சொல்லக்கூடிய ஆயுதத்தைப்போல, பெரியாருடைய படைக்களத்திலே, ஆயுதக் கிடங்கிலே இருந்து அந்த அறிவாயுதம் வேகமாக, இலக்கிய வீச்சோடு புறப்பட்டது என்பதற்கு அடை யாளமாகத்தான் இந்தக் கவிதை.

இதைச் சொல்லி நான் என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

''பெரியார் முன் சிறியார் பெற்ற பரிசு''

''பெரியார் முன் சிறியார் பெற்ற பரிசு'' என்ற தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதை

''வந்தேறிகளால் வாழ்நாள் எல்லாம்

அறியாமை இருட்டில் ஆழ்த்திய தமிழர்க்கு

அறிவொளி கூட்டிய அன்புடை பெரியார்

சீர்திருத் தத்தால் செம்மை நெறியினை

ஆர்வத் தோடும் மக்கள் அணைக்கையில்

ஜாதி என்னும் சழக்கு தகர்ந்தது;

சமயம் என்னும் தடைக்கல் இடிந்தது;

மதத்தின் நரித்தனம் மடிந்தொழிந்தது.

 

இவற்றைத் தாங்கிய என்றும் இலாத

கடவுள் என்னும் கயமையும் மறைந்தது.

அறியாமைக் கெலாம் அரணாய் அமர்ந்த

வெறித்தனம் மிகுந்த ஜாதியும் சமயமும்

மதமும் கடவுளும் மண்ணில் உண்டாக்கிக்

கதைகளை வளர்த்தவர் - உழைக்கா துண்ணும்

சோற்றால் அடித்த சோம்பேறிகள் எலாம்,

ஆட்டம் கண்டனர் அறிஞர் பெயரால்.

 

உண்மை ஒளியினை மக்களுக் கூட்டிய

பெரியார் தம்மை ஏசினர் பேசினர்.

குட்டி நாய்கள் போல் குரைத்துப் பார்த்தனர்;

மோழை நரிகள் போல் ஊளை இட்டனர்.

நெருப்பின் முன்னர்ப் பருத்திப் பொதியா?

வெள்ளத்தின் முன் உப்பு மூட்டையா?

ஊற்றை மண்ணால் அடைக்க முடியுமா?

புல்லேந்தும் கையால் வில்லேந்துவதாய்ச்

சொல்லேந்திப் பார்த்துச் சோர்வடைந்தனர்

 

விபீடண மரபில் பிறந்த ஒருவனைக்

கேடய மாக்கிக் கீழ் அறுப்பவர்கள்

ஒருமுறை பெரியார் திருமுன் சென்றனர்.

உழைக்கா துண்டு பிழைக்கும் வாழ்வினில்

மண்ணைப் போட்டதால், மக்கள் கண்ணைத்

திறந்ததால், தீண்டாமைத்தீ அவித்ததால்,

சுரண்டலை, திருட்டு வழிகளை அடைத்ததால்,

தாக்கு தாக்கெனத் தாக்கிப் பேசினர்.

பூசனை மொழியால் ஏசிச் சலித்தனர்;

இன்னாச் சொற்களை இன்புடன் கேட்டுப்

புன்னகை பூத்தார் நன்னலப் பெரியார்.

 

''ஏசுகின்ற என்னுடைய நண்பர்காள்

கூசுகின்ற மொழி கொஞ்சம் இருப்பின்

அதனையும் நீர் அர்ச்சனை செய்க;

எதற்கு நிற்கிறீர் எதிரில் வந்தமருக

என்ன குறையின்னு எடுத்துச் சொல்லுக"

என்று கேட்டதும், நின்றவர் வேர்த்தனர்.

 

பக்கத் தழைத்தே உட்கார வைத்தார்.

"யாரையாவது காணச் சென்றால்

ஆர்வத்துடன் நீர் அங்கையில் என்ன

எடுத்துச் செல்வீர், இயம்புவீர்'' என்றார்.

"குழந்தைகள் இருந்தால் பழங்களுடனும்

நண்பர்கள் என்றால் தின்பண்டங்களுடனும்

மாண்பினர் என்றால் மாலையுடனும்

காணச் செல்வோம்" என்று கூறினர்.

''காணச் சென்றவர் ஏற்க மறுத்தால்

மாண்புப் பரிசினை என்ன செய் வீர்கள்?"

என்று கேட்டார், ஈடிலாப் பெரியார்.

''திரும்ப எடுத்து வீடு திரும்புவோம்

இழப்பிலா நாள் என எண்ணி மகிழ்வோம்.''

 

''அதுபோலத்தான் அய்யா, உங்கள்

ஏச்சையும் பேச்சையும் ஏற்கவில்லை நான்,

பரிசுப் பொருள்களைத் திருப்பக் கொண்டே

இழப்பிலா மகிழ்வில் எடுத்துச் செல்லுவீர்"

என்று பெரியார் இயம்பினார்; ஏசினோர்

எரிமலை வீழ்ந்த சருகாயினரே.”

இதுதான் நண்பர்களே, பெரியாரை  எரிமலை வீழ்ந்த சருகுகள் - விழவேண்டிய சருகுகள் இன் றைக்கும் ஏச்சும், பேச்சும் செய்கின்றன.

அதே சருகுகள்தான், இன்னொரு பக்கத்தில் புரட்சிக்கவிஞரை திரிபுவாதங்கள்மூலமாக திரித்துக் காட்டலாம் என நினைக்கிறார்கள்.

எங்கும் வாழ்கிறார்! என்றும் வாழ்கிறார்!!

எப்போதும் தேவைப்படுகிறார்!!!

எனவே,

அய்யிரண்டு திசை முகத்தும் அவர் புகழைப் பெறுவது என்பது - பரப்புவது என்பது யாராலும் தடுக்கப்பட முடியாதது. காரணம், அவர் மானுடத்தை நேசித்த கவிஞர் - மானுடத்திற்காக வாழ்ந்த கவிஞர் - மானுடத் தத்துவமாய் வாழ்ந்த கவிஞர் - மிகப்பெரிய அளவிற்கு மக்கள் குலம் எல்லாத் துறையிலும் இருக்கவேண்டும் - அறிவுலகமாக, பகுத்தறிவுலகமாக வாழவேண்டும் என்று சொன்ன கவிஞர் -

அந்தக் கவிஞர்

எங்கும் வாழ்கிறார்!

என்றும் வாழ்கிறார்!

எப்போதும் தேவைப்படுகிறார்!

மருந்துகள் என்றைக்கும் தேவை

மருந்து கண்டுபிடித்தவரும் -

மருந்தாளுநரும் எப்போதும் தேவை -

என்றும் வாழ்வார்கள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image