மரண ஓலத்துக்கு இடையிலும் வசூலில் சாதனை ஜிஎஸ்டி.யில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாயாம்

 புதுடில்லி, மே 3 நாட்டில் கரோனா கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாலும், பல மாநிலங்களில் மரண ஓலம் ஒலித்துக் கெண்டு இருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசுக்கு  புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி  வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து, 7ஆவது மாதமாக வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் 2017-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியது. கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு வரி வசூலில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் கடந்த 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் வேகமெடுக்கத் தொடங்கியது.

இந்நிலையில், நாட்டில் கரோனாவால் தினமும் 3-4 லட்சம் பேர் பாதித்தும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் வருகின்றனர். பல மாநிலங்களில் எங்கும் மரண ஓலம் கேட்கிறது அப்படி இருந்தபோதிலும், ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சமாக கடந்த மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். கடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலானது. தற்போது ரூ.1.41 லட்சம் கோடி வசூலில், மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.27,837 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.35,621 கோடியும் வசூலாகி உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ.68,421 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.9,445 கோடி வசூலானது.

Comments