விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகுமாம் - நம்புங்கள்!

பா... ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மத்திய பா... குரல் கொடுப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை. மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளின் முதுகை முறித்தாயிற்று.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் விவசாயிகளின் அறப்போர் 141ஆவது நாளை எட்டியுள்ளது - உலக போராட்ட வரலாற்றில் இது ஒரு கின்னஸ் சாதனை என்று கருதப்படுகிறது.

இவ்வளவுப் பெரிய - இந்தியாவையே உலுக்கக் கூடிய பிரச்சினைமீது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்தவித அக்கறையும் இல்லை. ஒரே ஒரு முறையாவது விவசாயப் பிரதிநிதிகளை பிரதமர் சந்திப்பதற்கான மனநிலை இல்லை.

இந்தியாவில் ஜனநாயகம் என்பது அசல் கேலிக் கூத்தாகி விட்டது என்பதற்கு இது ஒன்றே போதுமானது. வெளிநாட்டு நாடாளுமன்றங்களில்கூட இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசப்பட்டதோடு அல்லாமல் விவசாயிகளின் போராட்டத்தின் நியாயம் குறித்தும் விரிவாக  விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்கக் கூடாது என்று சொல்லுவதற்கெல்லாம் மரியாதை இல்லாமல் போய் விட்டது.

இந்தியப் பிரதமரின் செல்வாக்கை வெளிநாடுகளில் உயர்த்திட பலவிதமான 'சித்து விளையாடல்கள்' எல்லாம்  ஒரு பக்கத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னதான் காகிதப் பூவுக்கு வண்ணங்களைத் தீட்டினாலும்,  அது மணக்கப் போவதில்லை.

இந்தியாவில் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் உலக நாடுகளின் முகங்களைச் சுளிக்கச் செய்து வருகின்றன.

அமெரிக்கப் பிரதமராக இருந்த ஒபாமா அவர்கள் இந்திய பயணத்தின்போது பிரியா விடை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே ஒன்றை இடித்தும் சொன்னதுண்டு. "சகிப்பு மனப்பான்மை இருந்தவரை இந்தியாவுக்கு மிகப் பெரிய பெருமை இருந்து வந்திருக்கிறது" என்று சொன்னார். இதன் உள் அர்த்தத்தை பிரதமர் மோடி உணர்ந்து கொண்டாரா என்று தெரியவில்லை.

மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது நடத்தப்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து, அன்றைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி சொன்னது நினைவிருக்கக் கூடும்.

"எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு செல்வேன்?" என்று சொன்னாரா இல்லையா?

குஜராத் முதல் அமைச்சராகவிருந்தபோது மாண்புமிகு நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல இரண்டு முறை முயற்சித்தபோது மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக் காரணமாக விசா மறுக்கப்பட்டது எல்லாம் சாதாரணமானது தானா?

பா... - சங்பரிவார் காவிமுகம் அவருக்கு இருக்கும் வரை, எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் உண்மை முகமே எஞ்சி நிற்கும்.

இப்பொழுது உள்நாட்டிலே மிகப் பெரிய வெறுப்பையும், எதிர்ப்பையும் நாளும் சம்பாதித்துக் கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியா ஒரு விவசாய நாடு. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்வாதாரத்தின் வேரை வெட்டி வீழ்த்திவிட்டு "உலக நாயகராக" எப்படி ஜொலிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

கரோனா கால கட்டத்தின் காரணமாக இந்தியப் பிரதமர் மோடி வெளிநாடுகளிலும் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை. அப்படி செல்ல வாய்ப்பு இருந்தால் பிரதமருக்கு எதிரான குரல்கள் வெளிநாடுகளில்கூட வெடித்துக் கிளம்பியிருக்கும்.

"ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்பதுபோல மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இலட்சக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள் குடும்பம் குடும்பமாக தலைநகரமான டில்லியில் அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், விவசாயத்தின் ஜீவப் பொருளான உரத்தின் விலை  கண் முடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டி..பி. எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் உரம் 50 கிலோ எடை கொண்ட உர மூட்டை ரூ.1200 லிருந்து ரூ.1900க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் 15:15 உரம் ரூ.1150லிருந்து ரூ.1650 என்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் 20:20 உரம் ரூபாய் ஓராயிரத்திலிருந்து ரூ.1350 ஆகத் தாவியிருக்கிறது.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற வாக்குறுதிக்குப் பதிலாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் உரத்தின் விலைதான் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம் பாவத் தொழில் என்று மனுதர்மம் கூறியிருப்பதால்தான் இந்த நிலையோ!

Comments