கிருஷ்ணப்பட்டினம் துறைமுகம் அதானி கைக்குப் போனது

விஜயவாடா, ஏப்.9 கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் நிலக்கரி சுரங்கம், எண்ணெய்க் கிணறுகள், விமான நிலையங்கள் என முக்கியமான துறைகள் பலவற்றையும் கைப் பற்றிவரும் அதானி, சமீபகாலமாக துறைமுகங்களைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

குஜராத்தில் முந்த்ரா, தஹேஜ், டுனா மற்றும் ஹசிரா, ஒடிசாவில் தம்ரா, கோவாவில் மோர்முகாவோ, ஆந்திராவில் விசாகப்பட்டினம், கங்காவரம் மற்றும் சென்னையில் காட்டுப்பள்ளி, எண்ணூர் என மொத்தம் 12 துறைமுகங்களை அவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில், ஆந்திராவின் முக்கியத் துறைமுகமான கிருஷ்ணப்பட்டினத்தை, முழுமையாகவே தனது ஆதிக்கத் தில் கொண்டு வந்துள்ளார். கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்திற்கு ஏற்கெனவே 75 சதவிகிதப் பங்குகள் இருந்த நிலையில், தற்போது, எஞ்சிய 25 சதவிகித பங்குகளையும் விஸ்வ சமுத்திரஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 2,800 கோடிக்கு அதானி வாங்கியுள்ளார். இதனால் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகம் 100 சதவிகிதம் அதானி வசம் வந்துள்ளது.

நெல்லூர் மாவட்டத்தில் அமைந் துள்ள கிருஷ்ணப்பட்டினம் துறை முகம் அனைத்து வானிலையையும் தாக்குப் பிடிக்கக்கூடிய ஆழமான துறைமுகமாகும். இது 20 கி.மீ. நீர்பரப்பு மற்றும் 6,800 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. தற்போது ஆண்டுக்கு 64 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு வரும் கிருஷ்ணப்பட்டினம் துறை முகத்தை, 300 மில்லியன் டன் திறன் கொண்டதாக மாற்ற அதானி தற்போது திட்டமிட்டுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த மொத்த துறைமுகத் திறனில் 24 சதவிகிதம், அதானி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments