திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணையவழி தொடர் சொற்பொழிவு

 புரட்சியாளர் அம்பேத்கர்புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வழியில் புத்துலகம் படைப்போம்

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

சென்னை,ஏப்.24 திராவிடர் கழக இளைஞரணி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதியதோர் உலகு செய்வோம் எனும் தலைப்பில் 21ஆவது இணையவழி தொடர் சொற்பொழிவு கூட்டம் 18.4.2021 அன்று நடைபெற்றது.

 சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் வரவேற்புரையாற்றினார்.  மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் தலைமை வகித்து உரையாற்றினார்.  மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு காமராஜ், பொன்னமராவதி ஆசைத்தம்பி, பொழிசை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தொடக்க உரையாற்றுகையில்,  "தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,  கரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கழகத் தோழர்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், இணைய வழியாக தொடர் சந்திப்புகளை நடத்த வேண்டும் என கூறியதன் அடிப்படையில் இக்கூட்டம் கழகத்தின் சார்பில் முதல் கூட்டமாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

 அம்பேத்கரை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றுகையில் குறிபிட்டதாவது: புனிதப்போர் என்றும், ஜிகாத் என்றும், சைவம், வைணவம், சமணம் என்றும் மதங்களால் மக்களுக்கு இடையே நடந்த போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர். இந்நிலையில் சனாதனத்திற்கெதிரான புராண இதிகாச திற்கு எதிரானப் ஜாதிக்கு எதிரான புரோகித முடிவுக்கு எதிரான போரை புரட்சியாளர் அம்பேத்கரும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் இந்தியாவில் நிகழ்த்தினார்கள். ஹிந்து மதம் மக்களுக்கு கேடானது என்று விளக்கினார்கள். ஜாதி உருவானது எப்படி என்ற அறிவுபூர்வமான கருத்துக்கு யாரும் இன்றுவரை மறுப்பு கூற முடியவில்லை.

இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்றார் அண்ணல் அம்பேத்கர். நாகர்களே பூர்வ குடிகளான திராவிடர்கள் ஆவார் என்றார் தந்தை பெரியார். ஆரியர்கள் வந்தேறிகள் திராவிடர்கள் பூர்வகுடிமக்கள். பர்மா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளிட்ட ஒருங்கிணைந்த அன்றைய இந்தியா முழுவதும் நாகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். திராவிடமொழி இந்தியா முழுவதும் பேசப்பட்டது.  வடக்கே நாக்பூர் தெற்கே நாகர்கோவில் என்று ஊர்பெயர்கள் இருப்பதும் நாகர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். பழங்குடி மக்களை  ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தியது ஆரிய சனாதனம்.

 இந்நிலையில் சனாதனத்தின் பின் மூலமாக உருவான ஜாதி, இறைவழி உருவான தீண்டாமை இவற்றுக்கு எதிரானப் போரை அண்ணல் அம்பேத்கர் நிகழ்த்தினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் கடவுளுக்கு எதிரான போரை  வருணாசிரம முறைக்கு எதிரானப் போரை மக்களிடையே நிகழ்த்தினார். இருவரும் மக்களைக் காக்க கருத்தியல் போர் நிகழ்த்தினார்கள்.  ஹிந்து மதம் ஜாதி களின் தொகுப்பு எனவே ஹிந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்றார் அண்ணல் அம்பேத்கர். அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய போது அவர் கூறிய 22 உறுதிமொழிகளை ஏற்று அம்பேத்கரை படமாக மட்டும் பார்க்காமல் அவரை பாடமாக ஏற்க வேண்டும். கருப்பு சட்டையும் ,நீல சட்டைகளும் சனாதனத்துக்கு எதிரானப் போரில் வென்று புதியதோர் உலகம் படைப்போம் என்றார்.

 கூட்டத்தில் தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் ராஜவேல், விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் இளம்பரிதி, ஆத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியானந்தன், தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், தஞ்சை மண்டல  தலைவர் அய்யனார்  மண்டல செயலாளர் குருசாமி மண்டல தலைவர் சடகோபன், செயலாளர் பட்டாபிராமன்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, சிகாகோ சோம.வேலாயுதம், திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி மாவட்ட செயலாளர் வைகறை,விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், தாராபுரம் மாவட்ட செயலாளர் சண்முகம், சாமிநாதன், தயாளன், ஜெயங்கொண்டம் காமராஜ், கோபால், பிரகாஷ், சங்கர், இராமச்சந்திரன், பெரியார் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநிலத் தலைவர் இணைய வழியான ஒருங்கிணைப்பு செய்து உதவினார்.

கூட்டத்தின் நிறைவில் புதுவை இளைஞரணி தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.

Comments