சரியான பருவத்தில் இந்நூல்கள் கேள்விகளுக்கு விடைகளாகவும், நோய்களுக்கு மருந்துகளாகவும் கிடைக்கின்றன!

 திருச்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை

சரியான பருவத்தில் இந்நூல்கள் கேள்விகளுக்கு  விடைகளாகவும்,

நோய்களுக்கு மருந்துகளாகவும் கிடைக்கின்றன!

திருச்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை

திருச்சி, ஏப்.6 சரியான பருவத்தில் இந்த நூல்கள், கேள்விகளுக்கு விடைகளாகவும், நோய்களுக்கு மருந்துகளாகவும் சிறப்பாக இங்கே கிடைக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புத்தகங்கள் வெளியீட்டு விழா

திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை, அன்னை

.வெ.ரா. மணியம்மையார் அரங்கில் மார்ச் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  நடைபெற்ற  புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் புத்தகங்களை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய சிறப் பான இந்த நூல் வெளியீட்டு விழாவில் -  அறிவுச் சோலை, அறிவுக்கொடை என்ற அளவில், நவில் தொறும் நூல்நயம் பெற்ற நூற்களை இங்கே வெளியிடும்,  இந்நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அருமைத் தோழர் செயல்வீரர் ஆரோக்கியராஜ் அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மோகன்தாஸ் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களே,

இந்நிகழ்வில் அய்யாவினுடைய கருத்துகளை மிக நுண்ணிய முறையில், மிக அழகாக ஈர்ப்போடு விளக்கிய நம்முடைய பெரியார் மணியம்மை மேல் நிலைப்பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியையும், மதிப்பிற்குரிய கொள்கைக் குடும்பத்தைச் சார்ந்த வருமான அருமை திலகவதியார் அவர்களே,

அருமை அய்யா பேராசிரியர் வளனறிவு அவர்களே,

அருமை நண்பர் தமிழ்நாடு முற்போக்குச் சிந் தனை எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், நாடறிந்த சிறந்த சொல்வல்லருமான கவிஞர் நந்தலாலா அவர்களே,

இங்கே நூல்களைப் பெற்றுள்ள அறிவார்ந்த சான்றோர் பெருமக்களே, இயக்கக் குடும்பத்தவர்களே, பகுத்தறிவாளர்களே, நண்பர்களே, ஊடகவியலா ளர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாலைப் பொழுது, ஓர் இனிய மாலைப் பொழுதாக இருக்கக் கூடிய அளவில், அறிவுக்கு நல்ல விருந்தாக, உணவுப் படைத்திருக்கக்கூடிய அருமை யான இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு மனப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இயக்கத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள் எந்த சிக்கலையும் தீர்ப்பதில் அறிவுபூர்வமானவர்கள், பலகீனங்களையும் பலமாக மாற்றிக் கொள்ளவேண் டும் என்ற அடிப்படையிலும், இந்த நேரத்தில் சிறப் பான வகையில் இங்கே இந்த நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கின்றன.

கேள்விகளுக்கு விடைகளாகவும்,

நோய்களுக்கு மருந்துகளாகவும்...

சரியான பருவத்தில் இந்த நூல்கள், கேள்வி களுக்கு விடைகளாகவும், நோய்களுக்கு மருந்து களாகவும் சிறப்பாக இங்கே கிடைக்கின்றன.

அன்னை மணியம்மையார் அவர்களுடைய உரையைப்பற்றி பேராசிரியை திலகவதி அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாள் நாளைக்கு - அன்னை மணியம் மையார் அவர்கள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று பிறந்தார்கள் - 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்த மாதம் நடைபெற்றது.

அன்னையார் அவர்கள் மறைந்து ஏறத்தாழ 43 ஆண்டுகள்  ஆகக் கூடிய நிலை.

இன்றைக்கு அவர்கள் மறையவில்லை  - அறிவாக - வெளிச்சமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இங்கே அருமையாகச் சொன்னார்கள்.

அன்னை மணியம்மையார்

எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு!

அன்னையார் அவர்களுடைய வாழ்க்கை என்பது திறந்த புத்தகம் மட்டுமல்ல - அவருடைய உரைத் தொகுப்பாக வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் சிறந்த புத்தகம் என்பது மட்டுமல்ல -  அதைவிட எளிமைக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

தந்தை பெரியார்தான் உலகிலேயே சிக்கனமாவர் என்றால், நாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் நண்பர்களே, அன்னை மணியம் மையார் அவர்கள் அதைவிட சிக்கனமானவர்.

பெரியார் எளிமையானவர் என்றால், அன்னையார் அவரைவிட எளிமையானவர்.

அன்னையாருக்கும் - தந்தை பெரியாருக்கும் எதில் போட்டி என்றால், சிக்கனத்திலே போட்டி - எளிமையிலே போட்டி - தொண்டறத்திலே போட்டி - மக்களுக்கு உழைப்பதில் போட்டி என்று அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டனர்.

பெரியாருடைய அத்தனை சொத்துக்களும் மக்கள் சொத்துகளாக ஆயின. அவர் கையெழுத்துப் போடுவதற்காக வாங்கிய காலணா, நாலணா, அவ ருக்குக் கொடுக்கப்பட்ட பண முடிப்புகளெல்லாம் 101 காலணாக்கள் - அவையெல்லாம்தான் இன்றைக்கு இந்த அரங்கமாக - பல்கலைக் கழகங்களாக - கல்லூரிகளாக - மேல்நிலைப்பள்ளியாக - குழந்தைகள் இல்லமாக - பகுத்தறிவுக் கேந்திரியமாக மிளிர்கின்றன.

இதே திருச்சியில், உங்களுக்கெல்லாம் தெரியும் - பெரியார் மணியம்மை மகப்பேறு விடுதி என்று பக்கத்தில் இருக்கின்ற பெரிய மருத்துவமனையில் தனி பிளாக் இருக்கிறது.

மரைக்காயர் டி.எம்.எஸ்.

அந்தக் காலத்தில் மரைக்காயர் என்ற ஓர் அம்மையார் டி.எம்.எஸ். ஆக இருந்தார். ஆளுமை நிறைந்தவர் பெண் அம்மையார் அவர்.  யாரும் அவரிடம் பரிந்துரைக்குக்கூட போகமாட்டார்கள்.

திருச்சி மருத்துவமனையை கொஞ்சம் விரிவாக்கம் செய்யவேண்டும் - குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை அமைக்கவேண்டும் -  அதற்கான  நிதியில்லை என்று அந்த அம்மையார், அய்யாவிடம் சொல்லச் சொல்லி, என்னிடம் ஒருமுறை சொன்னார்.

அதை அய்யாவிடம் நான் சொன்னவுடன்,

‘‘அப்படியா, அந்த அம்மாவே சொன்னாங்களா? அவங்க யாரிடமும் எதுவும் சொல்லமாட்டேங்களே - மிகவும் கண்டிப்பானவங்களாயிற்றே!'' என்றார்.

ஆமாம் அய்யா, நம்மிடம் அவர்களுக்கு மரியாதை - அதனால்தான் சொன்னார்கள் என்றேன்.

உடனே அய்யா, ‘‘நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லுங்கள்'' என்றார்.

மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாயும் -

கல்லூரி தொடங்குவதற்கு 5 லட்சம் ரூபாயும்!

அந்தக் காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் என்றால், சாதாரணமானதல்ல. இந்த சம்பவம் நடந்தது 1966 - அண்ணா அவர்கள் ஆட்சி அமைவதற்கு முன்பு.

பெரியார் .வெ.ரா.கல்லூரிபற்றி உங்களுக்கெல் லாம் தெரியும். அந்தக் கல்லூரி தொடங்குவதற்கு நிலமும், நிதியும் அளிக்கிறேன் என்று தந்தை பெரியார் அறிவித்தார். ஜி.டி.நாயுடு  பெரியாரிடம் சண்டை போட்டார்; அந்தக் கல்லூரிக்கா நீங்கள் நிதி கொடுக் கிறீர்கள் என்று.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது; அரசாங்கக் கல்லூரியாக இருந்தால்தான், அந்த மாணவர்களுக்குப் படிக்கின்ற வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்லி, அய்ந்தரை லட்சம் ரூபாயை கல்லூரி தொடங்குவதற்காகக் கொடுத்தார்.

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார். சுகாதாரத் துறை அமைச்சராக சாதிக்பாட்சா அவர்கள்.

அய்யா அவர்கள், முதலமைச்சர் அண்ணா அவர் களிடம் ஒரு  லட்சத்திற்கான காசோலையை கொடுக் கும்படி சொன்னார்.

அந்தக் காசோலையை எடுத்துக்கொண்டு, அண்ணா அவர்களுடைய இல்லத்திற்குச் சென்றேன்.

அண்ணா அவர்களும், எப்படி இருக்கிறார் அய்யா என்று விசாரித்து, அய்யாவின் உடல்நலம் பற்றிக் கேட்டார்.

டி.எம்.எஸ். மரைக்காயர் அவர்கள், திருச்சி மருத் துவமனையில் குழந்தைகள் வார்டு அமைப்பதற்காக அய்யாவிடம் நிதி கேட்டிருந்தார்கள், அதற்காக அய்யா அவர்கள் இந்தக் காசோலையை உங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்றேன்.

‘‘அப்படியா? அய்யா அறிவித்த நிதியை, என் கையால் வாங்குகின்ற வாய்ப்பு கிடைத்தது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

சாதிக் பாட்சா கேள்வியும் -

முதலமைச்சர் அண்ணாவின் பதிலும்!

சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா அவர்கள்,  ‘‘பெரியாரிடம் நிறைய பணம் இருக்கிறது என்று சொல்வார்களே, அவர் ஒரு லட்சம் ரூபாய்தானே கொடுத்திருக்கிறார்; அவரிடம் இன்னும் கொஞ்சம் கேட்கலாமா?'' என்றார்.

உடனே சாதிக் பாட்சா அவர்களை திரும்பிப் பார்த்த முதலமைச்சர் அண்ணா அவர்கள், ‘‘ஏம்பா சாதிக், உனக்கு அய்யாவைப்பற்றி ஏதாவது தெரியுமா? எனக்குத் தெரியும், வீரமணிக்குத் தெரியும் - நாங்கள் எல்லாம் அவர் கூடவே இருந்தவர்கள். நீ வெளியில் இருந்ததால், உனக்கு பெரியாரைப்பற்றித் தெரிய வில்லை. அய்யா அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், அது மற்றவர்கள் 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் அய்யா கொடுத்த நிதிக்கு ஈடாகாது? இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெரியார் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் என்பது, வேறு வழியில் வந்த பணம் அல்ல; அய்யா அவர்கள் காலணா, காலணாவாக சேர்த்த பணம்; அதைத்தான் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அமைக்கக் கொடுத்திருக்கிறார்'' என்றார்.

பார்ப்பனர் இல்லாத

அண்ணாவின் அமைச்சரவை!

அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தவுடன், மாவட்ட ஆட்சியாளர் முதல் மாநாட்டினை திருச்சியில் போட்டார். அன்றைக்கு மாலை எல்லா அமைச்சர்களும் - அண்ணாவின் அமைச்சரவையில் 9 அமைச்சர்கள்தான் இருந் தார்கள் - பார்ப்பனர்களே இல்லாத அமைச் சரவை அது.

காலை வேளையில், ஒவ்வொரு அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக அந்தந்தத் தொகுதிகளுக்குச் சென்றார்கள். மாலையில் நடை பெற்ற அந்த மாநாட்டிற்கு (மூன்று நாள் மாநாடு) எல்லா அமைச்சர்களும் வந்திருந்தார்கள்.

திருச்சி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அமைக்க பெரியார் பணம் கொடுத்திருக்கிறார்; அர சாங்கமும் பணம் போடுகிறது; அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஏற்பாடுகள்பற்றி  மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்து, முதலமைச்சர் அண்ணா கலந்தாலோசித்தார்.

அண்ணா எப்படிப்பட்டவர்? அய்யாவினுடைய அருளுடைமை எப்படிப்பட்டது? இவற்றையெல்லாம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஏனென்றால், அண்ணாவைப் பார்க்காதவர்கள், அண்ணா படத்தை கொடியில் மட்டும் பறக்கவிட்டு, கொள்கையை காற்றில்  பறக்கவிட்டு விட்டார்கள்.

சக அமைச்சர்களை, முதலமைச்சர் அண்ணா அவர்கள் அழைத்து, ‘‘நாளை மாலை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது; எல்லா அமைச்சர்களும் அந்த விழாவில் கண்டிப்பாக  பங்கேற்கவேண்டும்;  அய்யா அவர்கள், நம்முடைய  அரசாங்கத்திற்குக் கொடுத்திருக்கின்ற  அங்கீகாரம். நம்முடைய அரசாங்கத்தைப் போற்றி, பாராட்டியிருக் கிறார். நாம் பதவிக்கு வந்தவுடனே, முதலில் அய்யாவிடமிருந்து பணம் வாங்கியிருக்கிறோம். நாம் கேட்காமலேயே, திருச்சி மருத்துவமனையில் குழந் தைகள் வார்டு அமைக்க பணம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.

தந்தை பெரியாரின்

புகழின் சிதறல்கள்!

அண்ணா அவர்கள் பேசுகிறார்,

‘‘பெரியார் இல்லை என்றால், தமிழகம் கிடையாது. தமிழகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இன்றைக்குப் பல கட்சித் தலைவர்கள் இருக் கிறார்கள். யார் எந்தக் கட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தலைவர்கள் என்று சொன்னால், இந்தியாவில் இருக்கக் கூடிய தலைவர்கள் அகில இந்திய தலைவர்கள் - ஆனால், தமிழ்நாடு என்று சொல்லும்பொழுது, பழைய சென்னை ராஜதானி உள்பட எடுத்துக் கொண்டால்,  அந்தத் தலைவர்கள் யார்? வெவ் வேறு கட்சியில் இருப்பார்கள்  - கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பார்கள்; சோசலிஸ்ட் கட்சியில் இருப்பார்கள்; காங்கிரஸ் கட்சிகளில் இருப் பார்கள்; வேறு வேறு கட்சியில் இருப்பார்கள். ஆனால், அவர்கள் யார் எந்தக் கட்சியில் இருந்தாலும், ‘‘தந்தை பெரியாரின் புகழின் சிதறல்கள்'' என்ற வார்த்தையை சொன்னார்.

எவ்வளவு அழகான சொற்கள்; எவ்வளவு ஆழ மான கருத்துகள் என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்ட அந்த உணர்வோடு, அருமையான ஓர் உரையை  ஆற்றினார் அடிக்கல் நாட்டு விழாவில், முதலமைச்சர் அண்ணா அவர்கள்.

காட்சிக்காக, நாங்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை - கொள்கைக்காகத்தான்!

இங்கே வெளியிடப்பட்ட ‘‘முறியடிக்கப்படாத முப்பெரும் சாதனைகள்'' என்ற புத்தகம் இன்றைய காலகட்டத்தில், எப்படி தேர்தல் நேரத்தில் மகளிர் நீங்கள் வாக்களிக்கவேண்டுமானால், உங்கள் உரிமைகளுக்கென்று அன்னை மணியம்மையார் அவர்கள் சொன்னதை திலகவதியார் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, அதுபோல, முறியடிக் கப்படாத முப்பெரும் சாதனைகள் -  இந்தத் தத்துவம் என்னவென்றால், காட்சிக்காக, நாங்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை நாங்கள். கொள்கைக்காகத்தான் என்றார் அண்ணா.

ஆனால், இன்றைக்கு என்ன சொல்கிறார்கள், கொள்கையாவது, லட்சியமாவது - கூட்டணி வேறு - கொள்கை வேறு என்று சொல்கிறார்கள்.

பதவி என்பது மேல் துண்டு;

லட்சியம் என்பது வேட்டி!

அண்ணா எவ்வளவு ஆழமான கருத்தைச் சொன்னார் என்றால், பதவிக்கு வந்தவுடன் சொன்னார் -பதவியைப் பிடிக்கவேண்டும் என்ற ஆசையில், அதனை அடையவில்லை.

பதவி என்பது மேல் துண்டு போன்றது என்றார். மேல் துண்டு இல்லாமல் நாம்போகலாம். ஆகவே, பதவி ஒரு சிலருக்குக் கிடைக்கிறது என்பதால், சில பேர்தான் மேல்துண்டு போட்டிருக்கிறார்கள்.

நீங்கள் போட்டிருக்கீங்களே என்று நீங்கள் கேட்கலாம். இந்தத் துண்டை நான் நன்கொடை வாங்குவதற்காகப் போட்டிருக்கிறேன். பாத் திரத்திற்குப் பதிலாக, துண்டை ஏந்தி நன்கொடை வாங்குகிறேன். அதுவேதான், கல்வி நிலை யங்கள், அதுதான் மற்ற மற்ற இடங்கள். அப்படி நன்கொடை வாங்கித்தான் எல்லா நிறுவனங் களையும் வளர்த்திருக்கிறோம்.

பதவி என்பது மேல்துண்டு; வேட்டி என்பது லட்சியம் என்றார் அண்ணா.

ஆனால், இன்றைக்கு என்ன சொல்கிறார்கள்?  மேல் துண்டு இருந்தால் எனக்குப் போதும் என் கிறார்கள். அதை நினைத்தாலே மிகவும் சங்கடமாக இருக்கிறது. கொள்கையே கிடையாது அவர்களுக்கு.

1937 இல் துறையூரில், அய்யாவை அழைத்து அந்த வாலிபப் பருவத்தில் இருக்கின்றவர் (அவர் 28 வயதுள்ள ஒரு வாலிபர்) அழைத்து, முசிறி தாலுகா, மூன்றாவது சுயமரியாதை மாகாண மாநாடு, துறையூரில் 22.8.1937 இல் நடைபெற்றது. அந்த மாநாட்டில், அய்யா அவர்கள் தலைமையுரையாக என்ன பேசினாரோ, 1967 இல்  அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அதைத்தான் நிறைவேற்றம் செய்தார். இதுதான் பெரியாருடைய தத்துவம்.

தமிழ்நாட்டையும் மீட்டெடுக்கவேண்டும்; அடகு வைக்கப்பட்ட கட்சிகளையும் மீட்டெடுக்கவேண்டும்

இன்றைக்குத் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே உரிமைகளைக் கேட்கக்கூடிய மாநிலாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் மூச்சே விடவில்லை. இங்கேயும் அடிமைகள் இருக்கிறார்கள். ஆகவே, தமிழ்நாட்டையும் மீட்டெடுக்கவேண்டும்; தமிழ்நாட் டில்  அடகு வைக்கப்பட்ட கட்சிகளையும் மீட்டெடுக்க வேண்டும். ஆகவே, மீட்டெடுப்பு இருக்கிறதே அது  பல பரிமாணங்களில் நடக்கவேண்டும்.

ஒன்று, தமிழ்நாட்டை மீட்டெடுக்கவேண்டும் - இன்னொன்று தமிழ்நாட்டினுடைய ஆளுங்கட்சியை யும் சேர்த்து  மீட்டெடுக்கவேண்டும். ஏனென்றால், மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார்கள்.

உங்களுக்குத் தெரியும் - பல குடும்பங்கள் வட்டி கட்டியே மூழ்கிவிடும். அதுபோன்று, தமிழ்நாட்டுக் கடன் இப்பொழுது 5 லட்சத்து  78 ஆயிரம் கோடி ரூபாய் கடன். லட்சம் ரூபாய்க்கு எத்தனை பூஜ்ஜியம் போடுவது என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் போடவேண்டும் என்று கேட்டால், பல பேருக்குத் தெரியாது. உடனே கோடியை எழுத்தால் எழுதிக் கொள்ளுங்கள். ஏனென்றால், எத்தனை பூஜ்ஜியம் போடுவது என்ற சந்தேகத்தால்.                     (தொடரும்)

Comments