ரசியா-உக்ரைன் எல்லையில் பதற்றம் போர்க்கப்பல்களை அனுப்ப அமெரிக்கா திட்டம்

 
வாசிங்டன், ஏப். 10- உக்ரைன் எல்லை அருகே ரசிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரசியா முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரசிய எல்லையில் உக்ரைன் படைகளை குவித்து வருகிறது. இதை காரணம் காட்டி ரசியாவும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருகிறது. எல்லையில் ரசியா மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சி பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை விரைவில் கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் பயிற்சி மேற்கொள்கிறது. ஆனால் இப்போது போர்க்கப்பல்களை அனுப்புவதன் மூலம், ரசியாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிப்பதையே காட்டுகிறது.

மேலும், ரசிய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள பன்னாட்டு வான்வெளியில் உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில்

மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

வாசிங்டன்: ஏப். 10- அமெரிக்காவில் தனி மனிதர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் பிரையலில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் இருந்தவர்கள் மீது நேற்று (9.4.2021) மதியம் அடையாளம் தெரியாத மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். உடனே அங்கு இருந்தவர்கள் அலறிய டித்துக் கொண்டு ஓடினார்கள்.

பலர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் அவர்கள் கீழே சாய்ந்தனர். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு சென்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை ஆபத்தாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார். 2 மணி நேரத்துக்குப் பிறகு சந்தேகத்துக்கு இடமான ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

Comments