"வழங்கப்பட்டவை வெறும் வள்ளுவர் சிலைகள் அல்ல - உலகத்திற்கே சீலத்தை போதித்திடும் அடையாளங்கள்"

 வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழாவில் தமிழர் தலைவர் பேருரை!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், டாக்டர் வி.ஜி.சந்தோசம், தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலையினை வழங்கினார் (9.4.2021). 

சென்னையிலிருந்து வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழங்கிடும் விழாவினை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழாவில் பங்கேற்று முன்னிலை வகித்து, திருவள் ளுவர் சிலைகளை வழங்கிடும் மாபெரும் பணி யினை முன்னெடுத்து நடத்திய டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களை, திருவள்ளுவர் சிலைகளை உலகெங்கிலும் வழங்கி வருவதால் 'சிலை வள்ளல்' எனப் பாராட்டி பெருமைப்படுத்தி உரையாற்றினார்.

வள்ளுவர் சிலைகள் வழங்கும் விழா

சென்னை - அடையாறு சத்யா ஸ்டுடியோவாக இருந்த - தற்பொழுது எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக உள்ள அரங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக சிலைகள் வழங்கி வழியனுப்பிடும் விழா ஏப்ரல் 9ஆம் நாள் காலையில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஜி.பி. குழுமங்களின் தலைவரும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான டாக்டர் வி.ஜி. சந்தோசம் தலைமை தாங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிப் பேரரசு வைரமுத்து பங்கேற்று உரையாற்றினார். வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளைப் பெற்றிட அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி சிலைகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று வி.ஜி.பி. ரவிதாஸ் உரை ஆற் றினார். நிகழ்ச்சியின் நிறைவாக வி.ஜி.பி. ராஜாதாஸ் நன்றி கூறினார்.

திருவள்ளுவர் சிலைகள் வழங்கிடும் விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்கள், சான்றோர்கள்: சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி வள்ளிநாயகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விஜயராகவன், பேராசிரியர் முனைவர் ஞான சம்பந்தன், பெருங்கவிக்கோ, வா.மு. சேதுராமன், டி.கே.எஸ். கலைவாணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திரைப்பட இயக்குநர் நடிகர் பாண்டியராஜன், பேராசிரியர் உலக நாயகி பழனி, எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் லதா, பேராசிரியர் அபிதா ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர்களின் உரைச் சுருக்கம்:

வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கமைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பியிடம் 60 திருவள்ளுவர் சிலைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, டாக்டர் வி.ஜி.சந்தோசம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் ஒப்படைத்தனர் (சென்னை, 9.4.2021)

விழாவிற்கு முன்னிலை வகித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். (முழு உரை 4ஆம் பக்கம் காண்க).

டாக்டர் வி.ஜி. சந்தோசம் உரை

விழாவிற்கு தலைமையேற்ற டாக்டர் வி.ஜி. சந்தோசம் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

எங்களது நிகழ்ச்சி எதுவும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களது பங்கேற்பு இல்லாமல் நடந்தது இல்லை. ஆசிரியர் அவர்கள் எங்களது குடும்ப உறுப்பினர் போன்றவர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எங்களிடம் உரிமை படைத்தவர்கள்.

பொருளாதாரப் போதாமை காரணமாக கல்வியை முழுமையாகப் படிக்காமல், வருமானம் தேடுகின்ற வகையில் தொழில் தொடங்க வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டது. தொழிலில் படிப் படியாக முன்னேறி, பொதுப் பணியில் கல்விப் பணியாக, வாழ்வியல் நெறியைப் பரப்பிடும் பணியாக திருவள்ளுவர் சிலைகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வழங்கி வருகிறோம்.

முதன் முதலாக வெளிநாட்டில் மலேசியாவில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் வாழ்விடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதுவரை 62 திருவள்ளுவர் சிலைகள் உலகமெங்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலம் 60 சிலைகள் வழங்கப்பட்டு உள்ளன. மொத்தமாக இன்று வரை வழங்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை 122 ஆகும். திருக்குறளில் உள்ள 133 அதிகாரத் தலைப் புகளின் எண்ணிக்கைக்கு இணையாக மீதமுள்ள 11 சிலைகள் விரைவில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருக்குறள் நெறியான 'பிறப்பால் அனைவரும் சமம்;' 'எல்லாருக்கும் எல்லாமும்' என்பது பாரெங்கும் பரவிட வேண்டும்'. இதுவே எங்களது விழைவு.

இவ்வாறு டாக்டர் வி.ஜி. சந்தோசம் பேசினார்.

கவிப் பேரரசு வைரமுத்து

சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய கவிப் பேரரசு வைரமுத்து குறிப்பிட்ட தாவது:

தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றல் பகுத்தறிவுப் பேராசான் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள். டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களை 'சிலை வள்ளல்' எனச் சொல்லிப் பாராட் டினார். வழங்கப்படும் சிலைகள், வள்ளுவரது சீலத்தைப் பரப்பிட வேண்டும். என்பதையும் ஆசிரியர் தெரிவித்தார். அந்த  வகையில் சந்தோசம் அவர்கள் 'வள்ளுவ வள்ளல்' எனும் பெருமைக்கு உரியவராகிறார்.

ஈராயிரம் ஆண்டுகளாக திருக்குறள் கால வெள் ளத்தில் தாக்குப் பிடித்து நீந்தி வந்திருக்கிறது. நீந்தி வந்ததில் ஒரு சிறப்புத் தகுதியையும் திருக்குறள் பெற்றிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கும்  மேலாக  விவிலியம் நீடித்து வருகிறது. அதற்கு அடுத்து குரான் தொடர்ந்து வருகிறது. ஆனால் இவை இரண்டும் 'மதம்' எனும் மாபெரும் ஆதரவுத் தளத்தில் நிலைத்து வந்துள்ளன. ஆனால் திருக்குறள் மதம் என்ற எந்தத்  தளமும் இல்லாமல் மானுடத்தை - முன்னேற்றத்தைப் பேசி வந்துள்ளது. அந்த வகையில் திருக்குறளுக்கு உள்ள இலக்கியத் தகுதி வேறு எதற்கும் இல்லை என்றே சொல்ல முடியும். 

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது ஒரு முதுமொழி. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, சமூக ஊடகங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் என்பதில் அந்த முதுமொழி பொருத்தமாகிறது. 'டுவிட்டர்' எனும் கருத்துப் பரிமாறும் முறை அதன் வெளிப்பாடே! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த டுவிட்டர் பயன்பாட்டை கையாண்டவர் வள்ளுவர். ஒன்றே முக்கால் அடியில் வாழ்வியல் நெறியைச் சொன்னார். கால வெள்ளத்தைக் கடந்து வந்ததற்கு திருக்குறளின் சுருக்கமான கருத்து வெளிப்பாடும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்ற பல சட்டங்கள் நாட்டில் உண்டு. திருக்குறளும் ஒரு சட்டம் சார்ந்த நெறியே - அதிகாரத்தைக் காப்பாற்றும் சட்டமல்ல திருக்குறள்; அறத்தை காக்கவல்ல சட்டம் திருக்குறள். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் உயர்வாகக் கருதிடுவராகக் கூறும் திருக்குறளை - அனைவருக்கும் பொதுவான  மறையை ஏன் தேசிய நூலாக நீங்கள் அறிவிக்கக் கூடாது. விரைவில் திருக்குறளை தேசிய நூலாக பிரகடனப்படுத்திட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

திருக்குறள், வடமொழி சாஸ்திரங்களின் சாரம் எனக் கூறுபவர்கள் இங்கு இருக்கிறார்கள். வடமொழி சாஸ்திரங்கள் நான்கு உறுதிப் பொருளைக் கொண்டவை. தர்மம், பொருள், காமம், மோட்சம் என்பனவே அவை. ஆனால் திருக்குறள் மூன்று உறுதிப்பாட்டில் முழுமையாகி விடுகிறது. அறம், பொருள், இன்பம் என்பதில் அடங்கி விடுகிறது. வீடு பேறு எனப்படும் மோட்சம் என்பதற்கு திருக்குறள் நெறியில் இடமே இல்லை. வாழ்வென்பது இம்மை யில் மட்டுமே - என்பதைச் சொல்லும் வாழ்வியல் நெறியாக உள்ளது. விழிப்புணர்வு பெருகிவிட்ட காலத்திலும் திருக்குறளின் மீது பண்பாட்டுப் படையெடுப்பை படைத்திடும் செயல் ஆழ்ந்து  களையப்பட வேண்டும். திருக்குறளின் தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.

திருவள்ளுவர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, டாக்டர் வி.ஜி.சந்தோசம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன்: முக்கிய விருந்தினர்கள் மற்றும் விஜிபி குழுமத்தினர் (சென்னை, 9.4.2021)

கரோனா காலம் என்பதால் முகக்கவசம் அணிந்து இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுள்ளோம். ஒருவர் புன்னகைப்பது மற்றவருக்கு தெரியாது. இருப்பினும் ஒரு மாபெரும் பணியினைப் போற்றுகின்ற வகையில் ஒருமித்து நாம் இங்கு இணைந்துள்ளோம். இந்த நிலையைக்கூட வள்ளுவர் வெகு நேர்த்தியாகக் கூறி விட்டார்.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு."

எக்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில் மனித நெறியை போதிக்கின்ற  வகையில் வள்ளுவம் பரவிட வேண்டும். பல நாடு களிலும் பரவிட வேண்டும் என வாழ்த்துகிறோம். டாக்டர் வி.ஜி. சந்தோசம் எடுக்கின்ற முயற்சிகள் வெல்லட்டும்! இவ்வாறு கவிஞர் வைரமுத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கால்டுவெல் வேள்நம்பி உரை

வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக திருவள்ளுவர் சிலைகளைப் பெற்றுக் கொண்ட  பேரவையின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி தமதுரையில் குறிப்பிட்டதாவது:

அமெரிக்க அய்க்கிய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நிறுவப்படுகின்ற வகையில் திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டதற்கு பேரவை சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிறேன். அனைத்து மாநிலங்களில் மட்டுமல்லாது, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோபைடன் மற்றும் குடியரசு துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் திருவள்ளுவர் சிலைகளை நேரில் சந்தித்து வழங்குகிட உள்ளோம்.

கவிஞர் வைரமுத்து உரையாற்றுகையில் 'திருக்குறள்' தேசிய நூலக அறிவிக்கப்பட வேண்டும் எனும் கருத்தினை தெரிவித்தார். திருக்குறள் தேசியத்திற்குள் முடங்கி விடுவதல்ல. மானுடம் முழுவதற்கும் உரியது. அந்த வகையில் திருக்குறள் உலகப் பொது நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அந்த விருப்பத்தினை நிறைவேற்றுகின்ற வகையில் வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அய்க்கிய நாடுகள் அவையிடம் (United Nations Organisation) உரிய வகையில் முயற்சிகளைத் தொடங்கிட உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்வாதாரம் தேடி வட அமெரிக்க நாடுகளுக்கு தமிழர்கள் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் சென்றனர். இன்று அமெரிக்க அய்க்கிய நாட்டில் 2,85,000 தமிழர்கள் உள்ளனர். கனடா நாட்டில் 3,55,000 தமிழர்கள் வசிக்கின்றனர். வட அமெரிக்காவைப் பொறுத்த அளவில் மொத்தம் 10 லட்சம் தமிழர்கள் இருப்பார்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து அய்க்கிய நாடுகள் அவையின்   உரிய அங்கீகாரத்தைப் பெற்று திருக்குறளை உலகப் பொது நூலாக அறிவிக்கச் செய்வோம்.

டாக்டர் வி.ஜி.பி. சந்தோசம் அவர்கள் திருக்குறள் அதிகாரத் தலைப்பிற்குப் பொருத்தமாக 133 சிலைகள் எண்ணிக்கை எட்டப்படும் என்றார். இதுவரை வழங்கப்பட்ட122 சிலைகளுக்கு மேலாக 11 சிலைகளையும் அண்ணாச்சி அவர்களது பிறந்த நாளான ஆகஸ்டு 15ஆம் நாளுக்குள் வழங்கி வள்ளுவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் கூறி மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு கால்டுவெல் வேள்நம்பி குறிப்பிட்டார்.

வள்ளுவர் சிலைகள் வழங்கிய நிகழ்ச்சியில் மொழி வாழ்த்துப் பாடலை டி.கே.எஸ். கலைவாணன் பாடினார். நிகழ்ச்சி முழுவதையும் பேராசிரியர் அபிதா தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், அறிவுவழி  சார் வட்டத்தின் பொறுப்பாளர் தாமோதரன், மாநில பெரியார் காப்பு அணி பொறுப்பாளர் சோ. சுரேஷ் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: வீ. குமரேசன்

 

  

Comments