நூல் அரங்கம்

நூல்: பீமா கோரேகான்

ஆசிரியர்: முனைவர் மு.இனியவன்

வெளியீடு : அறிவாயுதம் பதிப்பகம்

நூல் கிடைக்குமிடம் : 1, சாஸ்திரி வீதி, எண்-4,  கல்லூரிபுதூர்,  கோவை-41.

விலை : ரூ.120/-

1818இல் பீமா கோரேகானில் கிழக்கிந் திய ஆங்கிலேய படைப்பிரிவான மகர் படைப் பிரிவுக்கும், மராட்டிய பார்ப்பன பேஷ்வா படைக்கும் நடைபெற்ற போரை மய்யமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் இது.

கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப் பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த போர் என்பது ஓர் அடிமை, ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு குறித்தது. பல நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியதும் அதுதான்.

மராட்டிய மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், சித்பவன் பார்ப் பனர்களான பேஷ்வாக்களால் நடத்தப் பட்ட விதம் நினைத்தாலே குலை நடுங் கும். இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் நிலவினாலும் மராட்டிய மண்ணில் நடந்த கொடுமைகள் மற்றெந் தப் பகுதியோடும் ஒப்பிட முடியாதவை. இவற்றை புரட்சியாளர் அம்பேத்கரின் வரிகளில் படித்தால் கண்ணீர் சிந்தாதவர் இருக்க முடியாது.

பூனாவின் தெருக்களில் தீண்டத்தகாத வர்களான மகர்கள் நடக்கும் போது அவர் களது காலடிபட்ட இடத்தின் தீட்டைப் பெருக்கிச் சுத்தப்படுத்த  துடைப்பத்தை இடுப்பிலும், எச்சில் துப்ப  குவளையை கழுத்திலும் கட்டிக் கொண்டே செல்ல வேண்டும். தங்களை அடையாளப்படுத் திக் காட்டும் வகையில் கையில் கருப்புச் சரடு அணிந்திருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்கள் தெருக்களுக்குள் நுழைந்து விட முடியாது. காலையிலும் மாலையிலும், நீண்ட நிழல் ஏற்படும் நேரங்களில் அவர்கள் நடமாட முடியாது. ஏனெனில், அவர்களது நீண்ட நிழல்கள் அவர்கள் மீது பட்டு தீட்டாகி விடும் என்பதால். எனவே, ஒரு குறிப்பிட்ட நேரத் தில் அவர்கள் நடமாட உரிமையில்லை.

புதிய கோட்டைகள் கட்ட மகர்களை உயிரோடு நரபலி இட்டனர். சிறு தவறுக் கும்கூட உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்த அக்கிரமங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை தலை மட்டும் தெரி யுமாறு மண்ணில் புதைத்து, யானையைக் கொண்டு தலையை இடறச் செய்யும் நிகழ் வின் கொலைக்களமாக பேஷ்வாக்களின் அரண்மனை முற்றம் திகழ்ந்தது.

இவ்வாறாக காலம் காலமாக அடிமைப் பட்டுக் கிடந்த மண்ணின் பூர்வக் குடி களான மகர்கள், வீறுகொண்டு எழுந்து பேஷ்வாக்களை பீமா கோரேகான் என் னும் இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டு பழி தீர்த்ததையும், அதன் பின்னே உள்ள வரலாற்றை அறிந்து கொள்ளவும் இந்நூல் உதவுகிறது.

மராட்டியத்தின் வரலாறு, சத்ரபதி சிவாஜியின் எழுச்சி, அதில் மகர்கள் வகித்த பங்கு, பின்னர் சிவாஜி பார்ப்பனி யத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு, பார்ப்பன பேஷ்வாக்களின் கொடுமையான ஆட்சி, அதில் ஒடுக்கப்பட்ட மக்களாகிய மகர், மாங், மாதாரி, மாதிகா, சாமர், ஆகியோர் அடைந்த இன்னல்கள், இழிவுகள் நிறைந்த துன்பியல் வாழ்நிலைகள் மற்றும் கோரேகானை வரலாற்றிலிருந்து தூக்கி எறியத் துடிக்கும் பார்ப்பன இந்துத்துவா சக்திகள், அதற்குத் துணை நிற்கும் அரசின் வன்மங்கள் என ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

- வை.கலையரசன்

Comments