கரோனா பரவல் கட்டுப்படுத்த தேசிய அளவிலான திட்டம் தேவை

 மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி, ஏப்.23 கரோனா மேலாண்மை தொடர்பாக தேசிய அளவிலான திட்டம் தேவை என மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கரோனா பாதிப்பு ஏற்படுத்தியுள்ள மோசமான சூழல், ஆக்சிஜன் விநியோகம் ஆகிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு நேற்று (22.4.2021) தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கரோனா பாதிப்பு மோசமான சூழலை உருவாக்கியுள்ளது. திடீரென கரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் உயர்ந் துள்ளன.

தடுப்பூசியை தாண்டி ரெம்டிசிவர் போன்ற மருந்துகளால் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. கரோனா சிகிச்சையில் ஆக்சிஜனும் முக்கிய பங்காற்றுகிறது. இருந்தபோதிலும், பீதி உருவாக்கப்பட்டு ஆக்சிஜன் விநியோகம் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி, மும்பை, சிக்கிம், மத்திய பிரதேசம், கொல்கத்தா, அலகாபாத் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.

கரோனா தொற்று காலத்தில் தேவைப்படும் சுகாதார சேவைகள், ஆக்சிஜன், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய திட்டத்தை மத்திய அரசு நாளைக்குள் (இன்று) சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்து ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு உள்ளதா? இல்லை என்றால் ஒருங் கிணைப்பு அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

அத்தியாவசிய மருந்து

கரோனா சிகிச்சைக்காக தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் என அறிவிப்பது தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும்.கரோனா சிகிச்சைக்காக தேவைப்படும் ஆக்சிஜன் மருத்துவ உபகரணங் களை மாநிலங்களுக்குள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் எடுத்துச்செல்லும் ஏற்பாடு தொடர்பான ஒருங்கிணைப்பு குறித்தும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

இன்று விசாரணை

ஆக்சிஜன் விநியோகம், அத்தியாவசிய மருந்து பொருட்கள் விநியோகம், தடுப்பூசி செலுத்தும் முறை, ஊரடங்கு அறிவிப்பு ஆகியவை தொடர்பாக ஏன்? உச்சநீதிமன்றம் ஒரே மாதிரியான உத்தரவை ஏன் பிறப்பிக்கக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் இன்றைக்குள் பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வேவை நியமிக்கிறோம் அவருக்கு உதவ அனுராதா தத்தை நியமிக்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments