செய்தியும், சிந்தனையும்....!

கல்மனக் காக்கைகள்

* உதவித் தொகை பெறுவோரின் அறியாமையைப் பயன்படுத்தி அரசு அலுவலர்கள் கமிஷன் பெறும் அக்கிரமம்.     

>> செத்த பிறகும் திவசம் என்று சுரண்டுவதில்லையா?  

மற்ற கோயில் சாமிகள் - பவர் கட்டா?

* 29 கோயில்களில் தரிசனம் ரத்து   

>> அது என்ன 29 கோயில்கள் - மற்ற கோயில்களில் கூட்டம் கூடினால் கரோனா தொற்றாதா?   

கணக்கு உதைக்குதே!

* தமிழ்நாட்டில் 53 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.        

>> 7 கோடி மக்களில் இது எத்தனை விழுக்காடு? 

காணிக்கையும் ஒரு வகை லஞ்சம்தான்!

* திருப்பதி ஏழுமலையானுக்கு இன்னோவா கார் நன்கொடை.     

>> வெயில் உச்சக் காலமாச்சே- நடந்து செல்ல முடியுமா கடவுளால்?  

ஆச்சரியம் ஆனால் உண்மை!

* அரசியல் பணிகளை விட்டு விட்டு மக்களுக்குப் பணி செய்யுங்கள்

- ராகுல் காந்தி      

>> ஆச்சரியமாக இருக்கிறதே இப்படியும் ஓர் அரசியல்வாதியா? 

அவலட்சணம்

* உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறையில்லை; ஆனால் கள்ளச் சந்தையில் விற்பனையாகிறது.

- யோகி ஆதித்யநாத் (உ.பி. முதல்வர்)

>> ஆட்சியின் இலட்சணம் தான் இது!  

சால் ஜாப்பு!

* கரோனா காரணமாகத்தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.    

>> அப்படியா! 2020 மார்ச்சில் கரோனா தொற்றுக்கு முன்பே பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 2 சதவீதத்திலிருந்து 3 புள்ளி ஒரு சதவீதமாக சரிந்து விட்டதே! 

கரோனா யாருக்கு?

* கரோனா காரணமாக வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் விழுக்காடு அதிகரித்து விட்டது.  

>> ஆனால் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் இந்தக் கரோனா காலத்தில் 35 விழுக்காடு அளவுக்கு இலாபம் சம்பாதித்தது எப்படி?  

கடவுளைக் கூண்டில் ஏற்றுக!

* நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு யார் காரணம்?       

>> கடவுள்தான் காரணம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தண்டனைகள் பலவிதம்

* ஆஸ்திரேலியாவில் கண்டிப்பாக வாக்களித்தே தீர வேண்டும், வாக்களிக்காவிடின் அபராதம்!    

>> வாக்களிப்பதே நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் தண்டனை என்று இந்தியாவில் கருதுகிறார்களோ! 

ஆம் இது பெரியார் மண்

* புதிய கல்விக் கொள்கை தமிழைத் தவிர்த்து மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பு     

>> தமிழ்நாட்டில் தானே எதிர்ப்புச் சுனாமி சுழன்ற டிக்கிறது.

கொசு(று) செய்தியல்ல!

* உலக மலேரியா தினம் (25.4.2021)

>> உலகம் முழுவதும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை மலேரியாவில் ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்படுகிறது. சுத்தம் சோறு போடும்! 

தண்ணீர் காட்டி விடும் - எச்சரிக்கை!

* கோடை வெயிலை சமாளிக்க நாள்தோறும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்திடுக!

>> சாப்பிடும்போது மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமா?


Comments