கரோனா இரண்டாம் அலை கைமீறிச் சென்று விட்டது : தலைமை வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல்

 சென்னை, ஏப். 15 கரோனா தொற்று இரண்டாவது அலை  எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அறுதியிட்டு கணிக்க முடியவில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சஞ்சீப்  அரசு தலைமை வழக்குரைஞரிடம், இரண்டாவது அலை தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரை ஏதும் உள்ளதா என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்குரைஞர் விஜயநாராயணன், கரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இரண்டாவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அறுதியிட்டு கணிக்க முடிய வில்லை என்றும் தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் உள்ளதாகவும்   குறிப்பிட்டார்.

மேலும் சுகாதார செயலாளர் ஜே.ராதா கிருட்டிணனை இன்று பிற்பகலில் சந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாக நீதிபதி குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்

 

சென்னையில்  கரோனா தொற்றால் 18 விமானங்கள் ரத்து

சென்னை, ஏப்.15 சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால்பாதிக்கப்பட்டு வரு கின்றனர். தொற்று பரவலைத் தடுக்க கட்டுப் பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு -_பாஸ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சமும் பொது மக்களிடம் நிலவி வருகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து நேற்று மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், அய்தராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூரு,மதுரை, பாட்னா செல்ல வேண்டிய தலா 1 விமானங்கள் என 9 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவேண்டிய 9 விமானங்கள் போதிய பயணிகள்இல்லாததால் ரத்து செய்யப்பட்டன.

Comments