கரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை

சென்னை, ஏப்.8 பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்று கரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் கரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,11,110 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் காணொலி மூலமாக ஆஜராகி இருந்தார். அப்போது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணனிடம், தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை மிகத் தீவிர பிரச்சினையாக கருத வேண்டும். ஆனால், எந்த விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக் கவசம் அணிவதில்லை. தனி மனித இடைவெளி பின்பற்றுவதில்லை.

மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது, கரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் பொது மக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய்த் தடுப்புக்கு தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தி 24 மணி நேரமும் சிகிச்சைஉயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஏப்.8  மதுரை, கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

உடல்நலம் பாதித்த எனது தாயாரை மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த அக்டோபர் மாதம் சேர்த்தேன். கரோனா மற்றும் ரத்த பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

 இதைப்போல மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி உடனடியாக சிகிச்சை அளித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இதேபோல், குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் அனைத்து வசதிகளுடன் செயல்பட உத்தரவிட  வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (7.4.2021) விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், கரோனா காலத்தில் அரசு மருத்துவ மனைகள் சிறப்பாக செயல்பட்டது. எனவே, அரசு மருத்துவ மனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், குழந்தைகள் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தி 24 மணி நேரமும் செயல்படவும் அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பன்னாட்டு விமான நிலையமாக மதுரையை அறிவிக்கக்கோரி வழக்கு

சென்னை, ஏப்.8 மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய விமானப் போக்குவரத்து துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா முகவர்கள் சங்கத் தலைவர் சதீஷ்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

2011 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 3 ஆவது பெரிய நகரமாக மதுரை வளர்ச்சி பெற்றுள்ளது. இந்திய அளவில் 44 ஆவது இடத்தில் உள்ளது. மதுரை விமான நிலையம் மதுரை மக்களுக்கு மட்டுமின்றி, தென்மாவட்ட மக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் வந்து செல்கின்றன.

ஆனால், மதுரையை விட சிறிய அளவிலான .பி குஷிநகர் மற்றும் திருப்பதி விமான நிலையங்கள் பன்னாட்டு விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்தும் பலன் இல்லை.

எனவே, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கவும், மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டியதில்லை. மக்கள் பிரதிநிதிகள் மூலம் அரசிடம் வலி யுறுத்தலாமே என்றனர். பின்னர் மனுவிற்கு மத்திய விமான போக்கு வரத்து துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Comments