பாசிசத்தின் சோதனைக்கூடம் உ.பி.

  17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குல்தீப் சிங் செங்காரின் மனைவிக்கு பதேபூர் ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு பாஜக சாமியார் முதல்வர் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த 2 மாதம் கழித்து தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்று உதவி கேட்கச்சென்ற 17 வயது சிறுமியை அப்போது உத்தரப்பிரதேச உன்னாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 இதனை அடுத்து அவர் தொடர்ந்து தனக்கு நீதி கேட்டு போராடிவந்தார்.  ஆனால் காவல்துறை புகார் கொடுத்த அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் வழக்கு தொடுத்தது. இதனை அடுத்து அவர் உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த நிகழ்வு உள்ளூர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான பிறகே, சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனை அடுத்து  பெண்ணின் தந்தை காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று கொலை செய்யப்பட்டார். இதனால் மேலும் இந்த வழக்கு விவகாரம் பெரும் பரபரப்பிற்குள்ளானது, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நடந்து ஓராண்டு ஆகியும் மாநில அரசு குற்றவாளியான சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட சிறுமிமீது தான் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று மாநில அரசை கடுமையாக சாடிய பிறகு குல்தீப் சிங் செங்கார் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது உறவினர்கள், வழக்குரைஞருடன் அலகாபாத் செல்லும் போது லாரியை மோதி கொலை செய்ய முயன்றனர். இதில் சிறுமியும், அவருடன் சென்ற அவரது உறவினர் ஒருவரும் பலத்த காயத்துடன் உயிர் பிழைத்துக் கொண்டனர். ஆனால் அவரது சிற்றன்னை மற்றும் பெண் வழக்குரைஞர் அந்த திட்டமிட்ட விபத்தில் பலியாகினர்.

 இந்த நிலையில் தொடர்ந்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் இந்த வழக்கு நடந்து குல்தீப் சிங் செங்காருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அலகாபாத் சிறையில் இருக்கும் அவருக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது, அவருக்கு மஜாஜ் செய்ய 3 பணியாளர்கள், விதவிதமான உணவுவகைகள், சிறப்பு  சாப்பாடு என அவர் உல்லாச விடுதியில் இருப்பது போலவே சிறையில் இருந்து வருகிறார். இது தொடர்பான காணொலி ஒன்றை அவரே வெளியிட்டதுதான் விந்தையானது.

 தற்போது உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உன்னாவ் தொகுதியில் உள்ள பதேபூர் சவுராசி என்ற பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு குல்தீப் சிங் செங்காரின் மனைவி சங்கீதா செங்காருக்கு பா... வாய்ப்பு கொடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்துகளில் அதிக மக்கள் தொகைக் கொண்ட இந்தப் பஞ்சாயத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இப்பஞ்சாயத்துத் தலைவர் பதவி என்பது கிட்டத்தட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் போன்றதாகும். இந்தப் பஞ்சாயத்துத் தேர்தலில் இவரை வெற்றி பெறவைத்து 2022 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அவரை சட்டமன்ற உறுப்பினராக்க உத்தரப் பிரதேச பாஜக முடிவு செய்துள்ளதாம்.

ஏற்கெனவே மாயாவதியை மிகவும் அவதூறாகப் பேசிய உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் பல நாள்கள் தலைமறைவாக இருந்தார்.  அவர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்கியது. ஆனால் அவரது மனைவிக்கு பதாயு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்து அவரை சட்டமன்றத்திற்கும் அனுப்பியது.

 இதே போல் தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட பிரக்யாசிங் தாக்கூரை போபால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.  நாடாளுமன்றம் சென்ற அவரோ தனது முதல் பேச்சிலேயே "கோட்சே ஒரு தேசபக்தர். அவர் குறித்து தவறாகப் பேசுவதை நான் ஏற்கமாட்டேன்" என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் . இராசா பேசிக்கொண்டு இருந்த போது இடைமறித்துப் பேசினார். இது கடும் விவாதத்திற் குள்ளானது. இருப்பினும் கோட்சே குறித்த  தனது கருத்துக்கு பிரக்யாசிங் தாக்கூர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிசம் பற்றி ஏராளம் படிக்கிறோம். இப்பொழுது நம் கண் முன்னே பா... ஆட்சியில் அது அரங்கேறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான பரிசோதனைக் கூடமாகத் துல்லியமாகத் தெரிவது - பா... ஆளும், சாமியார் ஆதித்யநாத் முதல்வராக இருக்கிற உத்தரப்பிரதேசமேயாகும்.

Comments