எது பாவம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

எது பாவம்?

‘‘நான் ஒருமுறை நண்பர்கள் ஆறு பேருடன் தனுஷ்கோடி போயிருந்தேன். ராமேஸ்வரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தோம். மதியம் வெளியே போன இடத்துல பாட்டி ஒருத்தங்க தனியா உட்கார்ந்து பனங்கிழங்கு வித்துகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு எப்படியும் 75 வயசுக்கு மேல இருக்கும். அவங்க உடல் ரொம்ப தளர்ந்துபோயிருந்துச்சு. அந்த வயசிலும் சொந்த உழைப்பில் சம்பாதிக்கணும்ங்கிற வைராக்கியத்திலோ, நிர்பந்தத்திலோ, வீட்டில் சும்மா இருக்க விரும்பாமலோதான் அந்தப் பாட்டி அந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கணும்.

அந்தப் பாட்டிகிட்ட போய் பனங்கிழங்கு வாங்கினேன். நாலஞ்சு பனங்கிழங்கை எடுத்துக்கொடுத்து 12 ரூபாய்னு சொன்னாங்க. 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை வாங்கி தன் சுருக்குப் பைக்குள்ள போட்டுகிட்டு மீதம் கொடுக்க வேண்டிய சில்லறையைத் துழாவிகிட்டிருந்தாங்க.

‘பரவாயில்லை பாட்டி... இருக்கட்டும்'னு சொல்லிட்டுத் திரும்பினேன். பாட்டி பதறியபடி ‘நில்லு... நில்லு... இந்தா இதை வாங்கிட்டுப் போயிரு’னு சில்லறையைத் தேடி எடுத்து என் கையில் கொடுத்தாங்க. ‘இந்தப் பாவத்தை நான் எங்கே கொண்டுபோய் கழுவுறது’ன்னு கேட்டபடியே கொடுத்ததுதான் எனக்கு மிகப்பெரிய வியப்பு. அந்தப் பாட்டியையும், அவர் சொன்ன வார்த்தையையும் என்னால் மறக்கவே முடியலை. காரணம், அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்துலதான் இந்தியாவின் பல மாநிலங்களிலேயிருந்து வந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பாவங்களைப் போக்கிட்டுப் போற இடம் இருக்கு. அந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு, ஒருத்தர்கிட்ட 8 ரூபாயை சும்மா வாங்கறதைப் போக்கவே முடியாத பாவமாக நினைச்ச அந்தப் பாட்டியை நினைச்சு நான் எப்போதும் வியப்பேன்.''

- ஓவியர் மருது, 

“அவள் விகடன்”,

16.3.2021, பக்கம் 20

எது பாவம்? எந்தக் குற்றங்களையும் துணிவாகவே செய்யலாம்! ஆனாலும், இவற்றிற்கெல்லாம் பரிகாரம் -பிராயசித்தம் உண்டு.

இராமேசுவரம் ஆனாலும், கும்பமேளாவானாலும், மகாமகம் ஆனாலும் கோவில் குளத்தில் மூழ்கினால் அனைத்துப் பாவங்களும் அக்கணமே தலை தெறிக்க ஓடும் -பாவ மன்னிப்பு எளிதில் கிடைத்துவிடும்.

ஆனால், பனங்கிழங்கு விற்கும் ஒரு பாட்டி 'பாவம்' என்று கருதுவது எதை?

பகுத்தறிவாளரான ஓவியர் மருது புத்தியில் படும்படி வெகு இலாவகமாக இடித்துக் கூறிவிட்டாரே!

 - மயிலாடன்


No comments:

Post a Comment