ஈரோட்டுக் கலங்கரை வெளிச்சம் எம் புரட்சிக்கவிஞர் வாழ்க! வாழ்கவே!!

இன்று (29.4.2021) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

தொடக்கத்தில் முருகனின் வேல்பற்றிப் பாடிய கனகசுப்புரத்தின கவிஞர், சுயமரியாதைக்காற்றை'ச் சுவாசிக்கத் தொடங்கிய பின், பெரியார்தம் பகுத்தறிவு, சுயமரியாதை வாள் தாங்கி, களம் கண்டார்!

நிலம் கொண்டார்!

திராவிட இயக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலகின் புரட்சி இலக்கியங்களில் முதல் இடங் கொண்டார்!!

சிங்கத்தின் கர்ச்சனை -

அவர்தம் பேச்சுக் கலை -

சிந்தனையின் வெளிச்சம் -

அவர்தம் - கவிதை முழக்கம்.

இருட்டறையில் உள்ள உலகத்தை பகுத்தறிவுப் பகலவனின் கதிர்பாய்ச்சி சமத்துவத்தோடு எழுச்சி கொள்ளச் செய்ய இறுதிநாள் வரை எழுதிய ஒப்பற்ற கவிஞர் என்ற புத்துலகச் சிற்பி புரட்சிக்கவிஞர்!

கரோனா தொற்றும், அதைவிடக் கொடுமையான மூடநம்பிக்கைக் கிருமிகளின் தொற்று நர்த்தனமும் இருட்டறையிலேயே நம் நாட்டை வைத்திருக்க தங்களிடம் சிக்கிக் கொண்ட ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு, மக்களை மாக்களைவிடக் கேவலமாக்கிடும் நிலையிலிருந்து விடுபட சுயமரியாதைக் கவிஞரின் சூட்டுக்கோல்தான் இன்றைய அவசரத் தேவையாகும்!

புரட்சிக்கவிஞர் - தந்தை பெரியார் கொள்கைகளின் இலக்கிய வார்ப்படம்,

சுயமரியாதை இயக்கக் கொள்கைப் பாசறையின் இலக்கியத் துறையின் ஈடற்ற மானுடப் பார்வையால் மகுடம் சூட்டப் பட்ட மகத்தான எம் கொள்கைக் கலங்கரை வெளிச்சம்!

இருட்டறையில் உள்ள இந்த உலகத்தை

ஈரோட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்

ஈட இணையற்ற கவிஞராக

என்றும் வாழ்கிறார்!

எங்கும் வாழ்கிறார்!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.4.2021

Comments