மற்ற நாடுகள் உதவி செய்ய முன்வந்தும் மத்திய அரசு அவற்றைப் பயன்படுத்த முன்வராதது அதிர்ச்சிக்குரியது!

புதிய அரசுகள்  சிந்தித்து தீர்வு காணவேண்டும்!

மற்ற நாடுகள் உதவி செய்ய முன்வந்தும் மத்திய அரசு அவற்றைப் பயன்படுத்த முன்வராதது அதிர்ச்சிக்குரியது! புதிய அரசுகள் சிந்தித்து தீர்வு காணவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கரோனா கொடுந்தொற்று (கோவிட் 19) இரண்டாம் அலை வீச்சு அதிவேகத்துடன் நம் நாட்டில் மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிற சோக நிலை நாளும் பெருகி வருகிறது.

அனைவரது நெஞ்சங்களை

கண்ணீர்க் கடலாக்குகிறது

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வட மாநிலங்களில் பலவற்றில் - ஏன் தலைநகர் டில்லியில்கூட நோயாளிகள் - மரணமுற்றோர்  ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை, தடுப்பூசிகளுக்குப் பஞ்சம், மரணமடைந்த வர்களுக்கு இறுதி மரியாதைகூட செய்ய முடியாத இட நெருக்கடி - இப்படி நம் அனைவரது நெஞ்சங்களை கண்ணீர்க் கடலாக்குகிறது.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கவலையும், கண்டிப்பும் நிறைந்த வாசகங்களை ஆணைகளாக வெளியிடும் அசாதாரண நிலை உள்ளது!

மத்திய அரசு - போர்க்கால அடிப்படையில் புயல் வேகத்தில் பணியாற்றி, பணிகளை ஒருங்கிணைப்பது அவசர அவசியம்!

உலகின் 15 நாடுகள் தாங்களாகவே மனிதாபிமான அடிப்படையில் நம் நாட்டின் நிலைமையைச் சீரடையச் செய்ய முன்வந்து உதவிக் கரங்களை நீட்டுவது நமக்கு ஆறுதலையும், புது நம்பிக்கையையும் தருகிறது!


இந்து' நாளேட்டில்....

ஆனால், அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக இன்றையஇந்து' ஆங்கில நாளேட்டில் (9 ஆம் பக்கத்தில்) வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

‘‘Indian govt. did not request ready- to - use vaccines, says U.S.''

உடனடியாகப் பயன்படக் கூடிய தடுப்பூசிகளை இந்திய அரசு எம்மிடம் கேட்கவில்லை'

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் ஜென்சாக்கி சுமார் 10 மில்லியன் (1 கோடி) ஊசிகளை - மருந்துகளை எங்களால்   FDA திஞிகிஅனுமதியோடு அனுப் பிட இயலும். இந்த நடைமுறை இன்னும் சில வாரங்களுக்குள் முடிக்கப்பட்டு விடக் கூடும்.

இன்னொரு 5 கோடி (50 மில்லியன்) தடுப்பூசி (அஸ்ட்ரா ஜெனிகா) மே, ஜூன் மாதத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் செய்து அனுப்ப இயலும்.

அதுபோலவே, மற்ற மூன்று தடுப்பூசிகள் - அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளான ஃபைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் இவற்றை உடனடியாக அனுப்ப இயலும்.

இதுபற்றி இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டுஇந்து' செய்தியாளர், ‘‘ஏன் அமெரிக்காவிடம் கேட்கப் பட்ட மருத்துவ உதவிகள் பட்டியலில் ஊசிகள் - டோஸ்கள் பற்றிக் கேட்கவில்லை'' (ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்பான உபகரணங்கள் போன்றவற்றைத் தானே கேட்டிருக்கிறார்கள்) என்று கேட்டபொழுது, அதற்கு தக்க பதில் இல்லை என்று கூறுகிறார்!

இது மிகுந்த வருத்தமும், வேதனையும் தரக்கூடிய செய்தி அல்லவா!

மருத்துவ அறிஞர்கள், ஆளுமையாளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திடுக!

உதவி செய்ய முன்வரும் நாடுகள் எந்தெந்த நாடுகளுக்கு எது எது வாய்ப்புள்ள, நம் நோயாளிகளுக்குப் பயன்படக் கூடியவை என்பதை நல்ல மருத்துவ அறிஞர்கள், ஆளுமையாளர்களைக் கொண்ட ஒருங் கிணைப்புக் குழு ஒன்றினை மத்திய அரசும், மாநில அரசுகளும் உடனடியாக அமைத்து, இரண்டு நாளுக்கொரு முறை அவர்கள் ஆய்வு செய்து, உதவ முன்வரும் நாடுகளை நன்கு பயன்படுத்தி, நம் நாட்டில் ஏற்படும் வீச்சினைத் தடுத்து நிறுத்திடும் வகையில் செயலாற்ற முன்வரவேண்டாமா?

18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி வரும் மே ஒன்றாம் தேதியிலிருந்து போடப்படும் என்று மத்திய அரசும், பிரதமரும் அறிவித்துவிட்ட நிலையில், அதை முழு வீச்சில் செயல்படுத்த - இம்மாதிரி உதவி களைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியமல்லவா?

எந்த மெத்தனமும்

எங்கும் இருக்கக் கூடாது!

நடந்தவைகள்பற்றி, உச்ச, உயர்நீதிமன்றங்களே கடும் விமர்சனங்களை வைக்கும் இந்த நேரத்தில், எந்த மெத்தனமும் எங்கும் இருக்கக் கூடாது!

தொழில் வர்த்தக அமைப்புகளும் தொடர் சங்கிலி போன்றவற்றை உருவாக்கி, மத்திய - மாநில அரசுகளுக்குக் கூடுதல்சப்ளை' கிடைக்கச் செய்ய முன்வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது!

நாடு தழுவிய அளவில்

சிந்தித்து தீர்வு காணவேண்டும்!

மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி, மன அழுத்தத்தைப் போக்க முன்வரவேண்டும். ‘ஆக்சிஜன்' கிடைக்கவில்லையே என்ற கவலை கரோனா தொற்று பாதித்த பெரும்பாலோருக்கு; ஆனால், ‘குடிமக்களான மதுவாதிகளுக்கோ' கடை மூடுவதற்குமுன் அவற்றை வாங்கி கையிருப்பு வைக்க முன்வருவதும் எப்படிப்பட்ட அவலத்தின் உச்சம்! மகாவெட்கக்கேடு!!

புதிய அரசுகள் இதுபற்றி நாடு தழுவிய அளவில் சிந்தித்து தீர்வு காணவேண்டும்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை       

28.4.2021            

Comments