‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!

புதியதோர் சமூகம் காண அவரது பிறந்த நாளில் உறுதியேற்போம்!

இந்து மதம்' என்று அந்நியர்களால் பெயர் கொடுக்கப்பட்ட, ஆரிய, சனாதன மதத்தின் ஆணிவேரான வருண தர் மத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே உண்மையில் புரட்சி யாளர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை - புகழ் மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதும் ஆகும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (14.4.2021) சமூகப் புரட்சியாளரும், உலகின் மாபெரும் சட்டமேதையுமான பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த நாள்.

இது ஒடுக்கப்பட்டோரின் தனி மகிழ்ச்சிக் குரிய திருவிழா - பெருவிழா ஆகும்!

கரோனா தொற்றின் பரவலால் இதை பகிரங்கமாக மக்கள் விழாவாகக் கொண்டாடி, கொள்கை பரப்பும் நிகழ்வாக ஆங்காங்கே நடத்த இயலவில்லையெனினும், அவரது சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து அனைத்து முற்போக்காளர்களும் உல கெங்கும் கொண்டாடுகிறார்கள்.

பரப்புவதைவிட பாதுகாப்பது மிகமிக முக்கியம்!

அதேநேரத்தில் - இன்றைய காலகட்டத்தில் - டாக்டர் அம்பேத்கரை - அவரது கொள்கை களைப் பரப்புவதைவிட முக்கியம் அவரது கொள்கை, லட்சியங்கள், தத்துவங்களைப் பாதுகாப்பதும் மிகமிக முக்கியம்.

காரணம் வெளிப்படையானது. மதவெறியர் களும், பார்ப்பன வைதீகமும் அம்பேத்கரை எதிர்த்து அழிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, வழமைபோல், புத்தநெறியை, புத்தரை 9 ஆவது விஷ்ணு அவதாரமாக்கி அணைத்தே, பிறந்த மண்ணை விட்டு வெளியேற்றுவதில் வெற்றி கண்ட கதையை - டெக்னிக்கை - வழிமுறையை - டாக்டர் அம் பேத்கருக்கும் இப்போது கையாளத் தொடங்கி விட்டனர்! மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது!

அணைத்து அழித்து விடுவது ஆரியத்தின் கைதேர்ந்த கலை

ஆர்.எஸ்.எஸ்., பா...வினர் அம்பேத் கரை ‘‘கடவுளாக்கி'' - புதிய அவதாரமாக்கி, அவரது முக்கிய லட்சியங்களான ஜாதி அழிப்பையும், தீண்டாமை ஒழிப்பையும், பெண்ணடிமை நீக்கிய சமத்துவ தத்துவங் களையும் சூறையாடிவிட்டு, அவர் சிலைக்கு மாலை போட்டு - சீலத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்த்து அழிக்க முடியாத எதையும் அணைத்து - புகழ்ந்து - பக்திப் பூச்சுப் பூசி - வணங்குவதுபோல் பாசாங்கு செய்து அழித்து விடுவது ஆரியத்தின் கைதேர்ந்த கலை.

அதை இந்தக் காலகட்டத்தில் தீவிரமாக இன்றைய காவிகள் செய்து, அப்பாவி ஒடுக் கப்பட்ட இளைஞர்களைத் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட முயல் கிறார்கள்.

அவர்கள் ஏமாறவேண்டும்!

புதியதோர் சமூகம் காண உறுதியேற்போம்!

மிகவும் எச்சரிக்கையுடன் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களை - ‘இந்து மதம்' என்று அந்நியர்களால் பெயர் கொடுக்கப்பட்ட, ஆரிய, சனாதன மதத்தின் ஆணிவேரான வர்ண தர்மத்தை வேரோடும், வேரடி மண் ணோடும் பெயர்த்து எறிவதே உண்மையில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை - புகழ் மாலை சூட்டி- பெருமை சேர்ப்பதும் ஆகும்!

தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும், சமூகப் புரட்சியாளர்கள், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதே அடிப்படை உண்மையாகும் என்ற சூளுரையை ஏற்று, புதியதோர் சமூகம் காண உறுதியேற்போம்!

வாழ்க அம்பேத்கர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.4.2021

Comments