சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல்: எகிப்து அரசு பறிமுதல்

 கெய்ரோ, ஏப். 15- சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் சரக்கு கப்பலை எகிப்து அரசு பறிமுதல் செய்துள்ளது.

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் கிரீன் என்ற சரக்கு கப்பல், கடந்த மாதம் 23ஆம் தேதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.

ஆசியாவையும் அய்ரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித் தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழிப் பாதையாக உள்ளது. இதனால், பன்னாட்டு வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்ப்ட்டது. அதன் பின் 6 நாட்கள் தீவிர முயற்சிக்கு பின் தரைதட்டி நின்ற கப்பல் மீண்டும் மிதக்கத்தொடங்கியது.

இதையடுத்து, சூயஸ் கால்வாயில் நீர்வழிப்போக்குவரத்து மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது. எவர் கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயின் பாதுகாப்பான பகுதியில் தற்போது நிலைநிறுத்தப் பட்டுள்ளது.

இதற்கிடையில், கப்பல் தரை தட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, நீர்வழிப்போக்குவரத்து தடைபட்டதால் ஏற்பட்ட இழப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு எவர் கிரீன் கப்பல் உரிமையாளர் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு தரவேண்டும் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு எகிப்து நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அதில் இழப்பீடு வழங்கும் வரை எவர் கிரீன் சரக்கு கப்பலை பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, எவர் கிரீன் கப்பல் சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையையே, இழப்பீடு தொகை தொடர்பாக எகிப்து அரசும், எவர் கிரீன் கப்பல் நிறுவன நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள்குவிப்பு: அமெரிக்கா கண்டனம்

வாசிங்டன், ஏப். 15- உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.

உக்ரைன் அரசுப்படையினர் - கிளர்ச்சியாளர்கள் மோதலை தொடர்ந்து எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு எல்லையில் 40 ஆயிரம் வீரர்களை யும், கிர்மியாவில் 40 ஆயிரம் வீரர்களையும் ரஷ்யா குவித்துள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூடுதல் படைக்குவிப்பு ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமிக்கவே ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவிப்பது இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பதை கண்டறிய ரஷ்ய அதிபர் புதின் செயல்படுத்தும் திட்டம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments