உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு

 வழக்குகளை காணொலியில் விசாரிக்க நீதிபதிகள் முடிவு

புதுடில்லி,ஏப்.12- உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் முன்புபோல் வீட்டி லிருந்தே காணொலி மூலம் வழக்கு விசா ரணைகளைத் தொடர நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே போல், கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தலை நகர் டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலகளவில் கரோனா பரவலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

இவ்வாறாக அன்றாட கரோனா தொற்று பரவல் திகைக்கவைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழி யர்கள் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப் படுகிறது. இதனால், உச்சநீதிமன்ற வளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நீதிபதிகளும் இனி முன்புபோல் காணொலியில் விசாரணையை வீட்டிலிருந்தே நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை"

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்

புதுடில்லி,ஏப். 12 கரோனா தொடர்பான ஊரடங்கில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், அதேசமயம், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதால், அதன் தேவை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

தலைநகர் டில்லியில், கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அங்கே இரவுநேர ஊரடங்கு உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது: “கரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பு விதிமுறைகளை நீக்குவது குறித்து, நான் பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, வீடு வீடாக பிரச்சாரம் செய்ய டில்லி அரசு தயாராக உள்ளது.

டில்லியில், 65% நோயாளிகள் 35 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு, அங்கு படுக்கைகள் உள்ளனவா என  செயலியில் பார்த்து செல்லுங்கள். அவசரநிலையாக இருந் தால் மட்டுமே படுக்கைகளில் நோயாளிகளை சேர்க்கவும்.

ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், படுக்கைகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தோல்வி ஆகியவைகளால் ஊரடங்கு தேவைப்படலாம்என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த யூனியன் பிரதேச சட்ட திருத்த விதியின் படி ஆளுநருக்கே அதிக அதிகாரம் இருப்பதால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் கெஜ்ரிவால் திட்டங்களை கையில் வைத்திருந்த போதும் அதை நிறைவேற்ற இயலாமல் திணறிவருகிறார்.

Comments