கோடை காலத்தில் தவிர்க்க வேண்டியவையும்... சேர்க்க வேண்டியவையும்...


கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதற்கு சில விஷயங்களை தவிர்க்கவும், சில விஷயங்களை சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

கோடை காலத்தில் தவிர்க்க வேண்டியவையும்... சேர்க்க வேண்டியவையும்...

கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். திடீரென்று உடலில் வெப்பம் அதிகரிப்பது வளர்சிதை மாற்றத்தில் சீரற்ற நிலையை ஏற்படுத்தும். அதனால் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தலைதூக்கும். முகப்பரு, நெஞ்செரிச்சல், சருமத்தில் வெடிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகும். கோடைகாலத்தில் எண்ணெயில் வறுத்த, காரமான உணவுகளை தவிர்ப்பது உடலின் வெப்பநிலை சீராக இருப்பதற்கு துணை புரியும். வேகவைத்த காய்கறிகள், வெள்ளரி, முலாம்பழம், மோர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

சப்ஜா விதைகளை சிறிது நேரம் நீரில் ஊறவைத்துவிட்டு அதனுடன் பால் மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து பருகுவதும் உடல் வெப்பம் தணிவதற்கு வழிவகுக்கும்.  

கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், ரோஸ்வாட்டர் போன்றவற்றை பயன்படுத்தி மூலிகை டீ தயாரித்தும் பருகலாம். அவை உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்க வழிவகை செய்யும்.

கோடை காலத்தில் சர்க்கரை பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக தேன், நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்தலாம். தயிர் இயற்கையாகவே உடலை குளிரூட்டும் தன்மை கொண்டது என்பதால் சாப்பிட்டு முடிந்ததும் அரை கப் தயிர் பருகலாம். நீச்சல் அடித்தாலும், தோட்ட வேலைகளில் ஈடுபட்டாலும் உடல் குளிர்ச்சியடையும். மனமும் அமைதி அடையும். வெளிர் நிற ஆடைகள், கைத்தறி, பருத்தி ஆடைகள் அணிவதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

உணவில் உப்பை அதிகமாக சேர்த்தால், உடலில் வெப்பம் அதிகரித்துவிடும். கோடைகாலத்தில் எண்ணெய் அதிகம் சேர்த்த மற்றும் கார வகை மசாலா சேர்த்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

Comments