வழக்கமான ரயில் சேவை தொடங்குவது எப்போது?

ரயில்வே அதிகாரி விளக்கம்

   புதுடில்லி, ஏப்.4 கரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்தியாவில் கரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் கடைசியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் ரயில் சேவையும் முடங்கியது. பின்னர் மே மாதம் முதல் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. சிறப்பு ரயில்களாக பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அப்படி சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டாலும் தற்போதைய நிலையில் வெறும் 66 சதவீத ரயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 77 சதவீத மெயில் மற்றும் விரைவு ரயில்கள், 91 சதவீத புறநகர் ரயில்கள், 20 சதவீத பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் இந்த சேவை அடுத்த 2 மாதங்களில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த 2 மாதங்களில், சிறப்பு ரயில்களுடன் கரோனாவுக்கு முந்தைய சேவைகள் தொடங்கும். எனினும் இது மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் கரோனா பரவல் நிலையை பொறுத்தது என்று

தெரிவித்தார்.            

இந்தியாவின் 2021 பொருளாதார

உற்பத்தி குறைவாகவே இருக்கும்

ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி, ஏப்.4 இந்தியாவின் 2021 பொருளாதார உற்பத்தி 2019 ஆம் ஆண்டை விட குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என அய்.நா. சபை தெரிவித்துள்ளது.

ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான அய்க்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆண்டு ஆய்வறிக் கையை அய்.நாவில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில்  கரோனா பெருந்தொற்று காரணத்தால் 2021-2022 ஆம் ஆண்டுக் கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சி 2019ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டு குறைவாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா கரோனாவில் இருந்து விரைவில் மீண்டது  மற்றும் 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதம். தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி நிலைகளை அது தாண்டிவிட்டது.  2021 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார மீட்சி மேலும் மேம்படும் என்று அது எதிர்பார்க்கிறது.

தொற்றுநோய் காரணமாக, பிராந்தியத்தில் கூடுதலாக 8.9 கோடிமக்கள் மீண்டும் தீவிர வறுமைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு நாளைக்கு 1.90 டாலர் (ரூ. 145க்கும் குறைவாக)  வாழ்க் கையை நடத்துவதாக  என்று அறிக்கை கூறுகிறது.

1947ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த ஆணையம் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.இந்தியா, வங்காள தேசம், பூட்டான், ஈரான், ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற 50 க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த ஆய்வு உள்ளடக்கியது.

தமிழ்ச் சுவடியியல்- பதிப்பியல் பட்டயப் படிப்புக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை

சென்னை, ஏப்.4 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் ஓராண்டு தமிழ்ச் சுவடியியல்பதிப்பியல் பட்டயப்படிப்புக்கான வகுப்புகள் ஏப். 22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஏப். 19-இல் நடை பெறுகிறது.

இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்

கோ.விசயராகவன் வெளியிட்ட அறிவிப்பு:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி மூலமாக கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச் சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டயப் படிப்பை ஆர் வத்தோடு பயிலும் மாணவர் களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3 ஆயிரம் வீதம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2021-22) மாணவர் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்.19-ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தை நிறுவன வலைத்தளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

வயது வரம்பு இல்லை : இந்தப் படிப்புக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம், ரூ.2 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையுடன் (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிழ் சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் இணைத்து அனுப்பப்பெறுதல் வேண்டும்.

விண்ணப்பம் (கட்செவி அஞ்சல் எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஏப்.16 ஆகும். வகுப்புகள் ஏப்.22-ஆம் தேதி முதல் நடை பெறும்.

கரோனா தொற்று காரணமாக அரசின் மறு உத்தரவு வரும்வரை வகுப்புகள் இணையவழியில் நடை பெறும்.  மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மய்யத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -600113 (தொலை பேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Comments