வாக்காளர்களின் சிந்தனைக்கு - வாக்காளர்களின் சிந்தனைக்கு!

இருபத்தியோராம் நூற்றாண்டின் பேராயுதம் !

 அதிஷா ஊடகவியலாளர்

மனிதகுல வரலாற்றில் எந்த இனக்குழுவிடம் நவீன ஆயுதம் ஒன்று இருந்திருக்கிறதோ, அந்த இனக்குழுவே உலகில் எப்போதும் ஆட்சி செலுத்துகின்ற ஒன்றாக  இருந்திருக்கிறது. இப்படி முளைத்துக்கொண்டேயிருக்கிற நவீன ஆயுதங்களால் எளிய மக்களை வதைக்கிறவர்களை, அழிக்கிறவர்களை எதிர்கொண்டு போராடி வெற்றி பெறுவதுதான், வரலாறு நெடுகப் பல ஆயிரம் போர்களுக்கும் பல கோடி மரணங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறன.

கற்காலத்தில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஈட்டியிலிருந்து துப்பாக்கி, பீரங்கி, விஷவாயு அணுகுண்டுகள், அய்ட்ரஜன் குண்டுகள், விஷக்கிருமிகள் என இந்த ஆயுதங்கள் வளர்ந்த பட்டியல் மிகப்பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஆயுதங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று ஒன்றை விட மற்றொன்று அதிக வலிமையும் அழிவையும் தரக்கூடியவையாக முன்னேறி வந்திருக்கின்றன. இந்த வளர்ச்சியில் நாம் வந்து அடைந்திருக்கின்ற இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டு ஆயுதம் எது தெரியுமா... அது உலகெங்கும் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கின்ற ஆயுதம். அந்த ஆயுதம் துப்பாக்கியைவிட பீரங்கிகளைவிட மேற்சொன்ன அனைத்தையும் விட வலிமைமிக்க ஆயுதம்...

கடந்த பத்தாண்டு கால வரலாறு இந்த ஆயுதங்களால்தான் எழுதப்பட்டது.

அந்த ஆயுதம்... பொய். அதைப் பரப்ப உதவுகிற கருவி சமூகவலைத்தளங்கள்.

ஆம்! பொய்தான். 'வாட்ஸ்அ ப்பில்' பரவும் வதந்திதான். முகநூலில் திணிக்கப்படும் புரட்டுகள்தாம். நமக்கே தெரியாமல் நாம் சிக்கிக்கொண்டிருக்கிற 'ட்விட்டர்ட்ரெண்டிங்' வலைப்பின்னல்கள் தாம்! இன்று யாரால் நன்றாகப் பொய் சொல்ல முடிகிறதோ, யாரால் மக்களிடம் நன்றாக வதந்திகளைப் பரப்ப முடிகிறதோ, அவர்தான் வலிமை மிக்கவர். அவர்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறவராக இருக்கிறார். பொய் சொல்வது இன்று நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது. பொய் சொல்வதற்காக ஆட்கள் ஊதியம் கொடுத்து நியமிக்கப்பட்டு இயங்குகிறார்கள். பொய் சொல்ல ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. பொய் சொல்வதில் சிறந்த வல்லுநர்கள் உருவாகி வருகிறார்கள். பொய் எப்படிச் சொல்வது? எந்த நேரத்தில் சொல்வது? யாரிடம் சொன்னால் பலிக்கும் என்பது வரை கணக்கிடப்படுகிறது.

எத்தனை அதிகமான பேரிடம் உங்களால் சிறப்பாகப் பொய் சொல்ல முடிகிறதோ.... எத்தனை அதிகமான பேர் நம்பும்படி பொய் சொல்ல முடிகிறதோ... எத்தனை அதிகமான பேர் உங்கள் பொய்களை நம்புகிறார்களோ அவரே வலிமை மிக்கவர். (நம்ப முடியாத புரட்டுகளைச் சொல்கிறவர்கள் கோமாளிகளாக்கப்படுவதும் உண்டு என்பதற்கு உதாரணம் சீமான், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் முதலானோர்). சமூக வலைத்தள ஊடகங்கள் இந்தப் பொய்களைப் பரப்புவதற்கான பிரதான கருவிகளாக இருக்கின்றன. முகநூல், கட்செவி மற்றும் சுட்டுரையின் வரவுக்குப் பிறகு, இந்த வலைத்தளங்கள் நவீனப் போர்க்களங்களாக உருப்பெற்றுள்ளன.

12 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக் காவின் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்களுக்குள் ஒளிப்படங்களைக் கேலி கிண்டல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் முகநூல், காலப்போக்கில் ஒருநாள் உலகெங்கும் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கின்ற ஆற்றல்மிகு சக்தியாக வளரும் என்றெல்லாம் அதன் உரிமையாளர் 'மார்க் சக்கர்பெர்க்' கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஊடகங்களுக்கே தண்ணி காட்டுகின்ற மாற்று ஊடகவெளியாக அது மாறி நிற்கும் என வாசிங்டன் போஸ்ட்டுகள் கூட நினைத்திருக்கமாட்டார்கள் ஆனால் சமூகவலைத்தளங்கள் வெறும் மாற்று ஊடகமாக மட்டுமே வளரவில்லை. அது அப்படித்தான் வளர்ந்திருக்க வேண்டும். லிபியா மாதிரியான புரட்சிகள் உலகெங்கும் நடந்திருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் சாத்தியப்படவில்லை. அரசியல்வாதிகளின் புரட்டுத் தொழிற்சாலைகள் இயங்குகின்ற இடமாக முகநூல் மாறிவிட்டது. அதன் நீட்சியாக மற்ற சமூகவலைத்தளங்களும் கடந்த பத்தாண்டுகளில் மாறிவிட்டன.

எதிரிகளின் குற்றச்சாட்டுகளைப் போதிய தரவுகளோடும் ஆதாரங்களோடும் ஆவணங்களோடும் மட்டுமே எதிர்கொண்டு பழகிய இடதுசாரி மற்றும் திராவிட இயக்க அறிவுஜீவிகளுக்கு, இந்தப் பொய்களை எதிர்கொள்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கும் இதுதான் நிலைமை. ஒரு குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு எதிராக, மதத்தினருக்கு எதிராக, கட்சிகளுக்கு எதிராக, மார்க்சியம் திராவிடம் போன்ற சித்தாந்தங்களுக்கு எதிராக ஆதாரமற்ற பொய்கள் ஒருபக்கம் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. இன்னொரு பக்கம் இந்தப் போலிச் செய்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பொய்களுக்கான மறுப்புகளைத் தொடர்ந்து வெளியிடவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்குத் தமிழ்நாட்டில் பல லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மேடைக்கு மேடை முழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. அதையே சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் பரப்புகிறார்கள்.

தொலைக்காட்சிகளில் அரை மணி நேரத்தில் நான்கு முறை ஒளிபரப்புகிறார்கள். இது ஒரு பொய். மிகச் சில நூறு கோடிகளுக்கு மேல் தமிழ்நாட்டிற்குக் கடந்த பத்தாண்டுகளில் முதலீடுகள் எதுவும் வந்து சேரவில்லை. அப்படியிருக்க எடப்பாடியின் பொய்களை மறுத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் முதலானவர்கள் உரிய ஆதாரங்களைத் தேடி எடுத்து நிரூபிக்கிறார்கள். ஆனால், பொய்கள் ராக்கெட்டில் ஏறி விண்வெளியைத் தொட்டுவிடுகின்றன. ஆனால், மறுப்புகள் எத்தனை வேகமாகச் செலுத்தினாலும் வீட்டுக் கூரையைக்கூட தாண்டுவது சிரமமாக இருக்கிறது. ஏன்? பொய் சுவாரசியமானது. உண்மை அறிவுப்பூர்வமானது. பொய் முதலில் பரவிவிடுகிறது. உண்மை அதே வீரியத்தோடு எல்லாத் திசைகளிலும் பரவுவதில்லை .

இந்தப் பொய்களின் அடித்தளங்களில் தான் அமெரிக்காவுக்கு ட்ரம்பும், இந்தியாவுக்கு மோடியும் ஆட்சிக்கு வந்தனர். மக்கள் நலனுக்காகச் செலவழிக்கின்ற தொகையை விட போலியாகப் புனையப்பட்ட சாதனைகளைப் பறைசாற்றுகின்ற விளம்பரங்களுக்குச் செலவழிக்கவும் தொடங்கியது அப்படித்தான். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை மோடி அரசு இந்தப் பொய்ப் பிரச்சாரச் சாதனை விளம்பரங்களுக்கு என்று செலவழிக்கிறார்கள். ஏன் இவ்வளவு செலவழிக்கவேண்டும் என்றால், பொய்கள் நிச்சயம் பலன்களை தருகின்றன என்பதுதான் காரணம்.

2014-இல் நடந்த தேர்தலில் மோடி எப்படி இந்தியாவின் பிரதமராக ஆக்கப்பட்டார் என்று யோசித்துப் பாருங்கள். 'குஜராத் மாடல்' என்கிற அந்தப் பொய்தான் அந்தப் பரப்புரைக்கே அச்சாணியாக இருந்தது. மோடி பிரதமரானால் இந்தியாவையே குஜராத் போல மாற்றிவிடுவார் என்கின்ற பொய் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டது. அவர் வந்தால், ஊழல் ஒழிந்துவிடும்; பெட்ரோல் விலை குறைந்துவிடும்; விலைவாசி குறைந்துவிடும்; தீவிரவாதம் அழிந்துவிடும்; எல்லோருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் போடுவார் என இன்னும் எத்தனை எத்தனை பொய்கள்.

ஏழாண்டுகளுக்குப் பிறகு, திரும்பிப் பார்த்தால் இந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. சொல்லப்போனால், ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்த பொருளாதாரம் சீர்குலைந்து

போயிருக்கிறது. பெட்ரோல் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. குஜராத் மாடல் ஒரு புரட்டு என்பதும் தெரியவந்திருக்கிறது. ஆனால், இதையெல்லாம் எப்படி பாஜகவால் சாதிக்க முடிந்தது.

இன்று கட்சிகள் அய்.டி. விங்குகள் (தகவல் தொழில்நுட்ப அணி) அமைத்து சமூக ஊடகங்களில் பரப்புரை மேற்கொள்ளத் தொடங்குவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே, தனக்கென ஒரு அய்.டி .விங்கை முதன் முதலாக உருவாக்கிப் பொய்களை பரப்ப ஆரம்பித்தது பாஜக. பொய் எனும் ஆயுதத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு சமூகவலைத்தளங்களில் பரப்பியது. இந்தியாவிலேயே முதன் முதலாக, கட்டமைக்கப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கிப் பொய் சொன்னது பாஜகதான். 'வாட்ஸ்அப்' குழுக்களில் இந்தப் பொய்களைப் பரப்புவர்களுக்கு என்று தனியாகப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் என்ன மாதிரியான பொய்களைப் பரப்பவேண்டும் என்பதற்கான கருத்துருக்களையும் அவர்களே வழங்கவும் தொடங்கினார்கள்.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்களை எதிர்கொள்வது எதிர்க்கட்சிகளுக்கு அத்தனை சுலபமில்லை . அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று மிக அதிகமான நபர்களை மிக வேகமாகச் சென்றடையும் பொய்களுக்கு, உடனுக்குடன் அதே அளவிலான மக்களிடம் சென்று சேரும்படி மறுப்புச் செய்திகளைத் தந்துகொண்டே இருக்க முடியாது. இரண்டு இந்தப் பொய்களின் வேர் அல்லது ஊற்று எங்கிருக்கிறது என்பதைக் கண்டறியவே முடியாது. இதை ரஷ்ய ஆய்வாளர்கள் 'Firehose of falsehood'   முறை என்கிறார்கள்.

அதாவது மிகப்பெரிய அளவில் மக்களை ஏமாற்றுகின்ற பொய்களை, சமூகவலைத்தளங்களின் வழியே தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருப்பதன் மூலம், எதிர்க்கட்சிகள் அதை எதிர்கொள்ளவே முடியாதபடி திணறடிப்பது. கூடவே சுவாரசியமான பொய்களை உருவாக்குவதில், அதைப் பரப்புவதில் மக்களைப் பங்களிக்கவைப்பது. அந்தப் பொய்களை ஒரு விளையாட்டு போல மக்களையே பரப்பும்படி செய்யவைப்பது என மூன்று விதங்களில் இது செயல்படுகிறது.

யோசித்துப்பார்த்தால், அது உண்மை போலத்தான் தெரியும். உதாரணமாக பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்... மக்களெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். அதை மறைக்கும் விதமாக உடனே ஒரு பொய் பரப்பப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு 'ஜிபி' டேட்டா 2.50 ரூபாய்... இன்று ஒரு 'ஜிபி' ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது... பெட்ரோல் விலை பத்தாண்டுகளுக்கு முன்பு 75 ரூபாய் இன்று 90 ரூபாய் ... பழையபடி ஒரு 'ஜிபி' 250 ரூபாய்க்குக் கொடுக்கலாமா... பெட்ரோல் விலையேற்றம் நியாயமானதே" என்பதுபோல 'மீம்களும்' 'வாட்ஸ்அப்' பகிர்தல்களும் தொடர்ச்சியாகப் பரப்பப்படுகின்றன. இது படிக்க உண்மை போலத் தெரிந்தாலும் உண்மை இல்லை. காரணம் பத்தாண்டுகளுக்கு முன் பெட்ரோல் விலை 75 ரூபாய் இல்லை... ஒரு ஜிபி டேட்டாவின் விலை 250 இல்லை. ஆனால், இந்த மீம் சுவாரசியமாக இருக்கிறது. அதில் வடிவேலு காமெடி வருகிறது. அதனால் சிரிப்பு வருகிறது. இதைப் பரப்புகிறவர்கள் சாதாரண பொதுமக்கள். இதைப் பரப்புவதன் மூலம் தங்களை ஒரு புள்ளியியல் நிபுணராகவும் (Statistician) ஓர் ஆளுமையாகவும் உணர்கிறார்கள்!

இந்த  Firehose of falsehood  (பொய்ப் பரப்புதல்) மூன்று வழிகளில் செயல்படுகிறது.    

High volume Multi channel - அதாவது கோடிக்கணக்கான பேரை வெவ்வேறுவிதமான கருவிகளின் மூலம் சென்றடைவது முதல் வழி. முன்பெல்லாம் தாக்கீதுகளும், சுவரொட்டிகளும்தான் மக்களைச் சென்ற டைய ஒரே வழி. இன்று Big Data  மாதிரி தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அலைபேசியின் வருகை இந்த ஆட்டத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. யார் என்ன நினைக்கிறார்கள், யாருக்கு எதைக் கொடுத்தால் நம்புவார்கள் என்பது வரை தெரிந்து கொள்வதற்கான தனிமனித மூளையின் வாசல்களைத் திறந்துவிடுகிறது இந்தத் தொழில்நுட்பங்கள். 'வாட்ஸ்அ ப், யூடியூப், ஆப்கள்', சமூகவலைத்தளங்கள் வழியாக ஒரு சாதாரண மனிதனின் மூளையைச் சென்றடைய ஆயிரம் கதவுகள் இருக்கின்றன. இவை அத்தனையையும் பயன்படுத்தி மிக அதிக மூளைகளை இன்று சென்று சேர முடிகிறது.

Rapid, continuous and repetitive: இரண்டாவது வழி...வேகமாக, தொடர்ச்சியாகப் பொய்களைப் பரப்பிக்கொண்டேயிருப்பது. அதையும் திரும்பத் திரும்பச் செய்வது. உதாரணத்திற்குக் கலைஞர்  திருட்டு ரயில் ஏறித்தான் சென்னைக்கு வந்தார் என்கின்ற பொய் மீண்டும் மீண்டும் பரவிக்கொண்டேயிருக்கிறது. அது பொய் எனத் திராவிட இயக்கத்தினர் எத்தனை முறை நிரூபித்தாலும் அது தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கும். விளக்கங்களைக் கவனிக்காமல் பொய்களைப் பரப்புவதிலும் அதை எவ்வளவு அதிகமாகப் பரப்புகிறோம் என்பதிலும் கவனம் செலுத்திச் செயல்படுவது.

உண்மையை ஆராய எடுத்துக் கொள்ளும் அக்கறையின்மையைப் பயன்படுத்திக்கொள்வது மூன்றாவது வழி. இன்று மக்கள் யாருமே தங்களுக்கு வருகின்ற செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்வதில் கவனம் செலுத்துவதில்லை. தங்களுக்கு ஒரு செய்தி வந்து சேரும்போது அதன் சுவாரசியத்தில் மூழ்கி அதை உடனடியாகப் பரப்பவும் தொடங்கிவிடுகிறார்கள். பப்பாளிப் பழக் கொட்டையை அரைத்துக் குடித்தால் கேன்சர் குணமாகும் என்ற செய்தி கிடைத்தால், அதை உடனே ஆயிரம் பேருக்கு அனுப்புவது அப்படித்தான். இது பொய்ப்பரப்பிகளுக்கு வசதியான ஒன்று. அதனாலேயே விருப்பம் போல நம் அலைபேசிகளுக்குள் குப்பைகளை நிரப்பிவிடுகிறார்கள்.

இந்த 'ஃபயர்ஹோஸ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தான் மோடி அரசும் அதிமுக அரசும் பத்தாண்டுகளாக மக்களை முட்டாள்களாக்கி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கின்றனர். உண்மையைச் சொல்லி இந்தப் பொய்களை உடைக்க முடியாதா என்றால், முடியாது என்பதே பதில். ஆமாம்... இந்த 'பயர்ஹோஸிங் ஆஃப் ஃபால்ஸ்ஹூட்டை' உடைப்பது அத்தனை எளிதல்ல.

* எதிரிகளை முந்துதல், ஓர் அறிவிப்பு வருகிறதென்றால், அது சார்ந்த பொய்கள் பரவும் முன்பே அதைப் பற்றிய உண்மையான தகவல்களை அதிகமான மக்களிடம் கொண்டுசேர்ப்பது.

* பொய்யைவிட பொய் பரப்புபவர்களைத் தோலுரித்துக் காட்டுவது.

* ஒரு பொய்ப் பிரச்சாரத்தின் நோக்கத்தை அறிந்து, அதை முறியடிப்பது.

*  பொய் எவ்வாறெல்லாம் பரப்பப்படுகிறதோ, அதே பாணியில் உண்மைகளைப் பரப்புவது. இப்படி நிறைய உத்திகளைக் கையாண்டு இந்த 'பயர்ஹோஸ்' தொழில்நுட்பத்தை முறியடிக்க முயற்சி செய்யலாம்.

சமூகவலைத்தளங்களின் வருகை பொய் பரப்புதலை மட்டுமல்ல மேலும் இரண்டு விடயங்களை எளிமையாகச் செய்கிறது. ஒன்று 'Troll' (பூதாகரம்)களை உருவாக்கி, தனக்கு எதிராக கருத்துகளைப் பதிபவர்களைத் தொடர்ச்சியான Abusive (கெட்ட) வசைகளால் அடித்துத் துவைத்து இணையத்தைவிட்டே ஓடவைப்பது.

அதுபோல அவர்கள் பணியாற்றுகின்ற நிறுவனம் அல்லது அரசின் மூலமாக அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பறிப்பது. இதை இணைய ரவுடியிசம் எனலாம். இரண்டாவது, ட்ரெண்டிங்குகளை உருவாக்கி முக்கியத் தலைவர்கள் பற்றிய போலியான பிம்பங்களைக் கட்டமைத்தல் அல்லது அழித்தல். உதாரணத்திற்கு ராகுல்காந்தியைப் பப்பு என்று அழைத்து அவரைக் கேலிப்பொருளாக மாற்ற முயற்சி செய்தது.

இந்த இரண்டையும் செய்யக்கூடிய 'Organized' (ஒருங்கிணைப்பு) நிறுவனங்கள் இன்று பெருகிவிட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயங்குகின்ற இந்நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் எது 'ட்ரெண்ட்' ஆகவேண்டும்... மக்கள் எதைப்பற்றிப் பேச வேண்டும்... தொலைக்காட்சி அலைவரிசைகள் எதை விவாதிக்க வேண்டும் என்பது வரை திட்டமிடுகின்றன.

ஒருவேளை பொய்யான விஷயங்களை இந்த இணையதள அடியாட்கள் மூலம் ட்ரெண்ட் ஆக்கவும், அதைப் பற்றிய விவாதங்களை உருவாக்கவும் முடிந்தால் என்ன ஆகும்... அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

சுஷாந்த் சிங் என்ற நடிகரின் கொலை இப்படித்தான் தொடர்ச்சியான  'Manipulated trending'  (சூழ்ச்சியாகக் கையாளுதல்) உதவியால் விவாதப்பொருளாக்கப்பட்டது. பின் அது பீகார் தேர்தலை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவும் மாற்றப்பட்டு பாஜகவுக்கு வாக்குகளை வாங்கித் தந்தது. இதுதான் பேராபத்து. பொய்கள் நிறுவனமயமாகும் போது, அது நம்முடைய அன்றாட வாழ்க்கையை, நம் அரசியலை, கல்வி உரிமைகளைக்கூடப் பறிக்கவும் தொடங்கிவிடுகிறது.

தமிழ்நாட்டிலும்கூட பழனிசாமி-பன்னீர்செல்வம் கூட்டணிகள் இதே பாணியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. ஒரு முன்னாள் முதல்வரின் மரணத்தையே அவர்களால் இந்தப் பொய்களுக்குள் மறைக்க முடிந்திருக்கிறது. குதிரைப்பேரங்களை மறைத்திருக்கிறார்கள்.

திராவிட மற்றும் இடதுசாரிச் சிந்தனை கொண்ட இயக்கங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. பொய்களை எதிர்கொள்வதில் விவேகம் மட்டும் போதாது வேகமும் தேவைப்படுகின்ற காலகட்டமும்கூட.

பொய்களை எதிர்கொள்ளும் நிறு வனங்களைக் கட்டமைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதை உடனே செய்ய வேண்டியது மிக மிக அவசியம்!

ஜீவா படைப்பகம் வெளியிட்ட

"அறம் வெல்லும்" புத்தகத்திலிருந்து...

Comments