கோலார் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அதிகம்

கூடுதல் மாவட்ட ஆட்சியர் கவலை

கோலார், ஏப்.8  கோலார் மாவட்டத்தில் தற்போது குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதை கண்டறிந்து மீட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் சினேகா உத்தரவிட்டார்.

கோலார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் புனரமைப்பு திட்ட கமிட்டி நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தாலுகா அளவில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதற்கான விவரம் பெற்றார். பின் அவர் பேசும்போது, மாவட்டத்தில் சமீப ஆண்டுகளாக கிராம பகுதிகளை காட்டிலும் நகர பகுதியில் அதிகம் செங்கல் சூளைகள், கேரேஜ், உணவ கங்கள், கடைகளில் 14 வயதுக்கு குறைவாக சிறுவர்களை பணியில் அமர்த்தி வருவது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.  அதிகாரிகள் அடிக்கடி செங்கல் சூளைகள், கேரேஜ், ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும். இங்கு சிறுவர்கள் பணியில் இருப்பது தெரியவந்தால், அவர்களை மீட்டு சிறுவர் காப்பகத்தில் சேர்ப்பதுடன் சம்பந்தப்பட்ட உரிமை யாளர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள் பணியாற்றுவது தெரியவந்தால், பொதுமக்களும் தைரியமாக நேரில் வந்து புகார் கொடுக்கலாம் அல்லது உதவி மய்ய எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல் கொடுக்கலாம்.

கரோனா தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்திய போது, பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடும்ப நிர்வாகத்திற்கு சிறுவர்கள் வேலைக்கு செல்ல வேண்டியது அவசியம் என்றாலும் அவர்களின் எதிர்காலம் வீணாகாமல் தடுப்பதுடன் அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டியது அவசியம் என்பதால், குழந்தை தொழிலாளர்களை மீட்டு உண்டு, உறைவிட பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Comments