மற்றவர்கள் எல்லாம் பல புத்தகங்கள், பல நாவல்களைப் படித்து அதன்மூலம் தங்களுடைய கருத்துகளை உருவாக்கிக் கொண்டவர்கள்

 ஜெயகாந்தன் அவர்கள் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு இலக்கிய உலகத்தில் உயரமாக உயர்ந்தவர்!

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஏப்.28 ஜெயகாந்தன் அவர்களுடைய ஒவ்வொரு கருத்தும், இலக்கியத் துறையில் மிக ஆழமானவை. காரணம் என்னவென்றால், மற்ற வர்கள் எல்லாம் பல புத்தகங்களைப் படித்து, பல நாவல்களைப் படித்து அதன்மூலம் தங்களுடைய கருத்துகளை உருவாக்கிக் கொண்டவர்கள். ஆனால், ஜெயகாந்தன் அவர்கள், தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர். அப்படி தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, இலக்கிய உலகத்தில் உயரமாக உயர்ந்தார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின்  87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

கடந்த 24.4.2021 மாலை 7 மணியளவில் சென்னை ரஷ்ய பண்பாட்டு மய்யம் சார்பில் (காணொலிமூலம்) நடைபெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய எனது இளமைக்காலம் தொடர்ந்து இறுதிவரையில் நட்புக் குறையாமல் வாழ்ந்த எனதருமைத் தோழர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர் களுடைய 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை - சென்னை ரஷ்ய பண்பாட்டு மய்யம் சார்பில் நடைபெறக்கூடிய இந்த அருமையான நிகழ்ச்சியை, காணொலி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருமைத் தோழர் திரு.தங்கப்பன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு எனக்கு முன்பாக உரையாற்றிய ரஷ்ய கலாச்சார மய்யத்தின் இயக்குநர் பெருமதிப்பிற்குரிய ஜென்னடி ரகாலீப் அவர்களே,

சிறப்பாக உரையாற்றிய சிறீலங்காவைச் சேர்ந்த எழுத்தாளர் டாக்டர் மதுரகன் செல்வராஜா அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு எனக்கு முன்பும், பின்பும் உரையாற்றவிருக்கக்கூடிய அருமைச் சிந்தனையாளர்கள், பெரியவர்கள், ஏவுகணை விஞ்ஞானியான பிரமோஸ் திட்ட இயக்குநர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அய்யா முனைவர் சிவதாணு பிள்ளை அவர்களே,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே,

பட்டர் பிளைஸ் குழுமங்களின் தலைவர் வி.என்.லட்சுமி நாராயணன் அவர்களே,

எஸ்.பி.அய். காப்பீடு முசிறியைச் சார்ந்த அருமைத் தோழர் பாலா சேகர் அவர்களே,

இந்து தமிழ்த் திசை பத்திரிகையாளர் அருமை எழுத்தாளர் சமஸ் அவர்களே,

 எனது அருமைச் செல்வன் ஜெயக்குமார் ஜெயகாந்தன் அவர்கள், கலை இயக்குநராக இன்றைக்கு உயர்ந்திருக்கிறார்.

அதுபோலவே ஒப்பற்ற நடிகராக இருக்கக்கூடிய கொள்கையாளர் நாசர் அவர்களே,

மிக்கேல் மேகலீசு என்று சொல்லக்கூடிய மியான்மா நாட்டு மேனாள் ரஷ்ய தூதர் முனைவர் அவர்களே,

ஆஸ்திரேலிய அருமை எழுத்தாளர் முருகபூபதி அவர்களே,

கனடா நாட்டு எழுத்தாளர் மூர்த்தி அவர்களே,

சிங்கப்பூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் தோழர் மகமது அலி அவர்களே,

அமெரிக்காவைச் சேர்ந்த நெறியாளர் தோழர் சிவகேசவன் அவர்களே,

நம்முடைய நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கக் கூடிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாடக நடிகரும், விரிவுரையாளருமான பாலசுகுமார் அவர்களே,

அருமை நண்பர்களே, பெரியோர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடலால் மறைந்தாலும், உணர்வாலும், புகழாலும் எங்கும் நிறைந்திருக்கின்றார்

ஏராளமான தோழர்கள் உலகமெங்கும் இருந்து ஜெயகாந்தன் அவர்கள் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், நம்மைவிட்டு மறையவில்லை. அவர் உடலால் மறைந்தாலும், உணர்வாலும், புகழாலும் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

உலகம் போற்றக்கூடியவராக இன்றைக்கும் அவருடைய 87 ஆம் ஆண்டு பிறந்த நாளை நாம் கொண்டாடுகின்றோம் என்றால், ஜெயகாந்தன் ஓர் இலக்கிய மேதை. ஓர் இலக்கிய ஆளுமையினுடைய தனித்திறன் உருவகம்.

அப்படிப்பட்ட பெருமை மிகுந்த ஜெயகாந்தன் அவர்கள் ஒரு பல்கலைக் கொள்கலன் என்று எனக்கு முன்பு உரையாற்றிய நம்முடைய இலங்கைத் தோழர் மதுரகன் செல்ராஜா அவர்கள் மிக அருமையாக எடுத்துரைத்தார்.

அவர் எப்படி திரைப்படத் துறையில் தனித்தன்மையோடு விளங்கினார். அவருடைய கருத்துகள், எழுத்துகள் எப்படி திரைப்படத் துறையிலும் மிகப்பெரிய அளவிற்கு பரிமளித்தது; உலக அளவில் அது புகழ்பெற்ற நிலைக்கு வந்து பரிசு பெற்றது என்பதையெல்லாம் சில நிகழ்வுகளின்மூலம் எடுத்துச் சொன்னார்கள்.

அதுபோலவே, பல்வேறு கோணங்களில், பல்வேறு அறிஞர்கள் இங்கே எடுத்துரைத்தார்கள்.

அதுபோலவே, ஜென்னடி ரகாலீப் அவர்கள், ரஷ்யாவில் அவர் எப்படி புகழ் பெற்றிருக்கிறார் என்பதைப்பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில், ஜெயகாந்தன் அவர்களைப்பற்றி, படித்ததிலிருந்து, பார்த்ததிலிருந்து, கேட்டதிலிருந்து, அறிந்ததிலிருந்து பல செய்திகளை சொல்லவிருக்கிறார்கள்.

இப்படி ஒரு அருமையான வாய்ப்பினை உருவாக்கிய அருமைத் தோழரும், ஒருங்கிணைப்பாளருமான தங்கப்பன் அவர்களை நாம் வெகுவாகப் பாராட்டவேண்டும்; நன்றி செலுத்தவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் நான் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், ஏராளமான அறிஞர் பெருமக்கள் இங்கே கருத்துரைகளை, வாழ்த்துரைகளை சொல்லவிருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் அவர்களும், நானும் இளமைக் காலத்திலிருந்து நெருக்கமான நண்பர்கள்.

வாழ்க்கை வரலாற்றை தனியாக எழுதவில்லை!

ஜெயகாந்தன் அவர்களுடைய அரசியல் அனுபவங்களைப்பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதுவரையில், அவர் பல கதைகள், கட்டுரைகள், தொடர்கள், புனைவுகளை எல்லாம் எழுதியிருந்தாலும்கூட, அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை தனியாக எழுதவில்லை; தன் வரலாறாகவும் எழுதவில்லை. என்றாலும், ‘‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவம்'' என்ற தலைப்பில், அவருடைய அனுபவத்தைதுக்ளக்' வார ஏட்டில், ‘சோ' அவர்களுடைய வற்புறுத்தலினால் தொடர்ந்து அவர் எழுதினார்.

அவர் அப்படி எழுத ஆரம்பித்த அந்தத் தொடர், இப்பொழுது நூலாக பல  பதிப்புகள் வந்துவிட்டது. அந்த நூலால்தான், அவரைப்பற்றி பல குறிப்புகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

அவருக்கும், எனக்கும் நேர் எதிரான கொள்கைகள்

தோழர் ஜெயகாந்தன் அவர்களும், நானும் ஒரே ஊர்க்காரர்கள் மட்டுமல்ல; ஒரே தெருவைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; ஒரே திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் மட்டுமல்ல; ஒரே அளவிற்கு நட்போடு இறுதிவரை இருந்தவர்கள். ஆனால், ஒரே கொள்கையைக் கொண்டவர்களா? என்றால், கிடையாது.

அவருக்கும், எனக்கும் நேர் எதிரான கொள்கைகள். என்னுடைய கொள்கைகளை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவருடைய கொள்கை நிலைப்பாட்டை, கம்யூனிசத்தைத் தவிர, வேறு எதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எங்களுடைய நட்பு என்பது இருக்கிறதே, அது மிக ஆழமான நட்பாகும்.

அந்த வகையில்தான் சில செய்திகளை இந்த அரங்கத்திற்குச் சொல்லவிருக்கிறேன். இளமைக்காலத்தில் ஜெயகாந்தன் எப்படிப்பட்டவர்? நான் ஜெயகாந்தனை அறியவில்லை. பிறகுதான் ஜெயகாந்தன் யார் என்று எனக்குத் தெரிந்தது.

நாங்கள் அறிந்தது முருகேசனைத்தான். ஜெயகாந்தன் அவர்களுடைய இயற்பெயர் முருகேசன். அதுபோல, என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி.

சாரங்கபாணியும், முருகேசனும் நண்பர்கள். ஜெயகாந்தன் அவர்களுடைய அத்தைதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தை நடத்தினார். அவர் மிகவும் கண்டிப்பான ஆசிரியராக இருந்தவர். அந்த அம்மையார், தன்னுடைய வாழ்விணையரை நீண்ட காலத்திற்கு முன்பே இழந்தவர். அந்த அம்மையாரின் தம்பிதான், ஜெயகாந்தன் அவர்களுடைய தந்தையார் திரு.தண்டபாணி அவர்கள். அவருடைய துணைவியார்தான் ஜீவா அம்மையார்.

எங்களுக்கெல்லாம் தாய் போன்றவர். அவருடைய  தந்தையார் திராவிடர் கழகத்துக்காரர், பெரியாருடைய பற்றாளர். எங்கள் வீட்டிற்குப் பத்து, பதினைந்து வீடு தள்ளித்தான் அவர்களுடைய வீடு.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாங்கள் இருவரும் ஒன்றாகவே படித்தோம். ஒன்றாகவே, இஸ்லாமிய பள்ளிக்கூடத்திலும் படித்தோம். ஒன்றாகவே நடித்தோம். இளமைக்காலத் தொடர்பிலிருந்து, தொடர்ந்து நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.

இடையில், நான் திராவிட இயக்கத்தில் வந்து, தந்தை பெரியாரின் தொண்டனாக நான் இந்தப் பக்கத்தில் வந்தேன். அவர் வீட்டை விட்டு வெளியேறிய நேரத்தில், கம்யூனிச இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டு, நீண்ட காலம் அந்த இயக்கத்தில் இருந்து, மிகப்பெரிய அளவிற்கு ஓர் இலக்கியவாதியாக உயரக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்.

ஜெயகாந்தன் என்ற பெயரில், பல புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் யார் என்று எனக்கு தொடக்கத்தில் தெரியவில்லை. காரணம், அவருடைய இயற்பெயர்தான் எனக்குத் தெரியும். இடையில், அவருடன் தொடர்பில்லாமல் இருந்த காரணத்தினால்.

இளமைக்காலத்தில், நானும், அவரும் நெருக்கமாகவே, ஒன்றாகவே இருப்போம்.

அவர் எழுதிய தொடரில், ‘‘சாரங்கபாணி ஒழிக'' என்று நான் கூச்சல் போட்டேன். அவன் பேசிக் கொண்டிருந்தான்'' என்று தொடங்குவார்.

ஆகவே, அவருடைய இலக்கிய வாழ்வு எங்கே இருந்து தொடங்கியது என்றால், என்னுடைய உரையும், என்னுடைய கொள்கையை எதிர்க்கின்ற அந்த பாணியில் இருந்துதான் தொடங்கியது என்பது இருக்கிறதே, அதுவே வேடிக்கையானது.

அப்படி தொடங்கியது, இறுதி வரையில் அவருடைய பயணம் அங்கேயே சென்றது. என்னுடைய பயணம் இறுதிவரை இப்படியே போய்க் கொண்டிருக்கின்றது.

எங்கள் இருவருக்கும் உள்ள நட்பு என்ற அந்த சங்கிலி என்றைக்கும் உடைந்தது கிடையாது!

ஆனால், எங்கள் இருவருக்கும் உள்ள நட்பு என்ற அந்த சங்கிலி என்றைக்கும் உடைந்தது கிடையாது. இதுதான், வியப்பிலும் வியப்பாகும்.

அதிலும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், அவருடைய இளமைக்காலத்திலிருந்து, எதையும் எதிர்த்துப் பேசுவது அவருக்கு வழக்கம்.

நாங்கள் ஒரு கருத்தைச் சொன்னால், உடனே அதை மறுத்துச் சொல்வார். நான் அதனை எதிர்த்துப் பேசுவேன்.

பிரபல எழுத்தாளராக அவர் ஆகிவிட்டார்நான் திராவிடர் கழகத்தில் இருக்கிறேன்!

இப்படி இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் மிகப்பெரிய அளவிற்கு எதிர்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தை மிகத் தெளிவாக உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழல். அப்படியே வளர்ந்து, அவர், அவருடைய வழியைப் பார்த்தார். பிரபல எழுத்தாளராக அவர் ஆகிவிட்டார். நான் திராவிடர் கழகத்தில் இருக்கிறேன்.

என்றாலும், குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், அவரை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஒருமுறைவிடுதலை' அலுவலகத்திற்கு வந்து, அவர் திரைப்படத்தைப்பற்றி பேசினார்.

இங்கே அதைப்பற்றி நண்பர் சொன்னார் அல்லவா - திரைப்படக் காட்சிகளை எடுப்பதற்காக கம்பாசிடராக வரக்கூடிய ஒரு பாத்திரம். பழைய விடுதலை அலுவலகத்தில், நான் ஆசிரியராக இருக்கும்பொழுது, என்னுடைய அனுமதி பெற்று, அந்த அலுவலகத்திலேயே அந்தக் காட்சியை எடுத்தார்கள். அப்பொழுது மூத்த நடிகரும், இயக்குநருமான நண்பர் தியாகராசன் அவர்களும், மற்றவர்களும் அங்கே வந்தார்கள்.

ஆகவே, அந்த நிகழ்வைப்பற்றி இங்கே சொல்லும்பொழுது  பெருமையாக இருந்தது.

ஜெயகாந்தன் அவர்கள், தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர்

ஜெயகாந்தன் அவர்களுடைய ஒவ்வொரு கருத்தும், இலக்கியத் துறையில் மிக ஆழமானவை. காரணம் என்னவென்றால், மற்றவர்கள் எல்லாம் பல புத்தகங்களைப் படித்து, பல நாவல்களைப் படித்து அதன்மூலம் தங்களுடைய கருத்துகளை உருவாக்கிக் கொண்டவர்கள். ஆனால், ஜெயகாந்தன் அவர்கள், தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர்.

அப்படி தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, இலக்கிய உலகத்தில் உயரமாக உயர்ந்தார் என்று சொல்லும்பொழுது, அதற்கு அவருக்குக் கிடைத்த கூலி இருக்கிறதே - மிகப் பிடிமானமான ஒரு கை - அது எதார்த்தமானது. எங்கு நுழையக் கூடாது - எங்கு நுழைய முடியாது என்பதெல்லாம் அவரிடம் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் நுழைவார். சமுதாயத்தினுடைய எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும், எங்கே சமுதாயத்தில் அழுக்குப் படிந்த இடமாக இருக்கிறதோ, அந்த அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய உண்மைத் தத்துவார்த்தத்தை மிக முக்கியமாக எடுத்துக்காட்டி, அதன்மூலம் ஒரு தனி நிலையைப் பெற்றார்.

(தொடரும்)

Comments