தமிழகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் மூலம் - நதிகள் மாசடைவதை தடுக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும்

 தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஏப்.22தமிழகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுக்கும் வகையில் தகுந்த ஆலோசனைகளை அரசுக்கு வழங்க நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

காவிரி ஆற்றின் துணை நதிகளில் ஒன் றான அமராவதி ஆறுபாயும் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆறு மாசடைந்து வருவதாகக் கூறி தனசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில்தொழிற்சாலை கழிவுகளால் அமராவதி ஆற்றின் நீரை குடிநீருக்கோ, விவசாய தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமீபகால மாக நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும்என கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆறுகள் மாசடைவதை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. கடைமடை பொதுமக்களும் ஆற்று நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அதன் தரத்தை பாதுகாக்க வேண்டும்.

துர்நாற்றம் வீசுவது வேதனை

அதற்காக தொழிற்சாலைகளின் கழிவு களை ஆற்றில் கொட்டுவது, கழிவுநீர் ஆற்றில் கலப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நதி நீர் மாசடைந்தால் நிலத்தடி நீரும் பயன்படுத்த தகுதியற்ற ஒன்றாகிவிடும். நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்தவொரு சமரசமும் செய்யக் கூடாது. கூவம் நதி மீது கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது மூடிய குளிரூட்டி கொண்ட காரில் செல்லும்போதுகூட துர்நாற்றம் வீசுவது வேதனை அளிக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை அங்கிருந்து இடமாற்றம் செய்து கழிவுகளில் இருந்து ஆற்றை காப்பது குறித்தும், கழிவுநீரை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்தும் தகுந்த ஆலோசனைகளை வழங்க ஏதுவாக நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Comments