மேகதாது அணை கட்டினால் உபரிநீர்கூட மேட்டூர் வராது

நீர்வள ஆர்வலர்கள் அதிர்ச்சித் தகவல்

சேலம், ஏப்.17  காவிரியின் குறுக்கே கருநாடகம், மேகதாது அணை கட்டினால் மழைக்காலங்களில் உபரிநீர் கூட மேட்டூர் அணைக்கு வராத நிலை உருவாகும் என்று நீர்வள ஆர்வலர்கள், அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காவிரியாறு, கருநாடகாவில் 320 கிலோ மீட்டர், தமிழக- _ கருநாடக எல்லையில் 64 கிலோமீட்டர், தமிழகத்தில் 416 கிலோ மீட்டர் பாய்ந்து கடலில் கலக்கிறது. கருநாடகாவில் காவிரியின் துணையாறுகளின் குறுக்கே கபினி, கேஆர்எஸ், ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட பெரிய அணைகளும், அய்ந்துக்கும் மேற் பட்ட சிறிய அணைகளும் கட்டப் பட்டுள்ளது. இந்த அணைகளில் குறைந்த பட்சம் 120டிஎம்சி நீர், சேமிக்க முடியும். காவிரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி ஆண்டு தோறும் கருநாடகம், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் இதுவரை கருநாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக பெருமழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, அங்குள்ள அணைகளின் பாது காப்பு கருதியே நீரை திறந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் கருநாடக அரசு, காவிரி பாய்ந்து வரும் மேகதாது என்னுமிடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்டி நீரை தேக்க முடிவு செய் துள்ளது. இதற்காக மத்திய நீர் வளத்துறையிடம் அனுமதி கோரியது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கருநாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், மேகதாது அணைகட்டும் இடத்தை சமீபத்தில் ஆய்வு செய் தார். தற்போது அணைகட்டு வதற்கான ஆயத்தப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கருநாடக அரசு, மேகதாதுவில் புதிய அணை கட்டினால், வறட்சி காலங்களில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. தமிழகத்தில் டெல்டா பாசனம் அடியோடு அழியும் அபாயம் ஏற்படும். மேட்டூர் அணைக்கு உபரி நீர்வரத்து கூட பாதித்து, குடிநீருக்கே அண்டை மாநிலங்களிடம் கையேந் தும் அவலநிலை உருவாகும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள் ளனர் நீர்வள ஆர்வலர்கள்.

இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது: காவிரிநீரால் தமிழகத் தின் 12 டெல்டா மாவட்டங்களில் 16.40லட்சம் எக்டர் பரப்பளவு பாசனவசதி பெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை   பொறுத்து, தண்ணீர் தேவை குறையும். இதன்மூலம் 34.20 லட்சம் டன், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை, சம்பா மற்றும் தாளடி   பயிர்களுக்கு மட்டும் 330டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.  இதேபோல் 18 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் மேட்டூர் அணைக்கு வரும் நீர் தான். கரையோர மாவட்டங்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய,  மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தினமும் ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும். இவ்வாறு ஆண்டு முழுவதும் திறக்க, குறைந்த பட்சம் 30 டிஎம்சி தண்ணீர் தேவை.

ஆனால் கடந்தாண்டில் கரு நாடகம் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து மொத்தமாக 67 டிஎம்சி நீரை மட்டுமே வழங்கி யுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் கபினி, கே.ஆர்.எஸ். அணை களில் திறக்கப்படும் நீரை சேமித்து, தங்கள் மாநில பாசனப்பகுதிகளுக்கு திருப்ப, கருநாடகம் திட்டமிட் டுள்ளது. இதற்காக கனகபுரா தாலு காவில் உள்ள மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த 40 டி.எம்.சி. நீரை சேமிக்கும் கொள்ளளவு கொண்ட, இந்த அணை மூலம் 400 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிட்டு, அதற் கான நீர்மின் நிலையமும் அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத் திற்கான தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற வாதத்தை அங்குள்ள அமைச்சர்களும், அதி காரிகளும்  முன்வைக்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு என்று எதையும் மதிக்காத கருநாடகம், இப்படிக் கூறுவதை எந்த விதத் திலும் ஏற்க முடியாது.

மேகதாது அணைநீரை கருநா டகத்தின் பாசனத்திற்கு பயன்படுத் துவதற்காக சுற்றுப்புறங்களில் உள்ள மைசூர், சாம்ராஜ்நகர், தும்கூர் மாவட்டங்களில் ரூ.1,885 கோடியில் 490 ஏரி, குளங்களை சீரமைத்து கூடுதல் நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் பெருமழைக்காலங்களில் காவிரி உபரிநீர் கூட, மேட்டூர் அணைக்கு வரமுடியாத நிலையே உருவாகும். காவிரி மேலாண்மை வாரிய இறுதித் தீர்ப்பில், இனிமேல் காவிரியின் குறுக்கே எந்த மாநில அரசும் அணை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறி யுள்ளது. அப்படி இருந்தும் அங்கு பாஜக ஆட்சி இருப்பதால் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்திருப்பது வேதனைக்குரியது.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஓடும் நீரை, இங்கேயே தேக்கி வைக்கும் வகையில் ராசிமணலில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இப்படி நீரை சேமிப்பதற்கான பணிகளுக்கு மத்திய அரசு, துணை நின்றால் வர வேற்கலாம்.

இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Comments