'தோப்புக்கரணம்' போடப் போகிறார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

'தோப்புக்கரணம்' போடப் போகிறார்கள்!

தேர்தல் நடைபெற சில நாட்களே எஞ்சியிருக்கும் ஒரு கால கட்டத்தில், திமுகவைச் சேர்ந்தவர்கள் வீடுகளைக் குறி வைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுவது குறித்து திராவிடர் கழகத் தலைவரும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் மட்டுமின்றி இராகுல் காந்தி உட்படக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வருமான வரி சோதனை நடத்துவதற்கு அதிகாரம் உண்டு என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நடத்துகின்ற காலம், சூழல் எத்தகையது என்பதுதான் முக்கியமானது.

பா...வைச் சேர்ந்தவர்கள் வீட்டில் ஏன் அத்தகு சோதனைகள் நடத்தப்படுவதில்லை? அப்படியென்றால் வருமானத் துறை என்பது சுய அதிகாரத்துடன் செயல்படக் கூடிய ஒன்றல்ல என்பது வெகு மக்களின் கருத்தாக அல்லவா ஆகி விட்டது.

இந்த நிலை நல்லது தானா? இந்த அவப் பெயரை ஏற்படுத்துபவர்கள் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் என்று எண்ணும் போது இந்திய ஆட்சியின் நிர்வாகத்தின்மீதான பொது மரியாதை என்பது கீழே விழுந்து விடவில்லையா?

அரசியல் காரணத்தால் தான்  - உள்நோக்கத்தோடுதான் இது நடக்கிறது என்பது கடைகோடி மனிதனும் பேசும் அளவுக்கு இதனை மலிவுப்படுத்தியது கண்டனத்துக்கும், வருத்தத்துக்கும் உரியது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது சட்டப்படியான குற்றம். தேர்தல் ஆணையத்தின் முதற்கடமை இதனைத் தடுத்து நிறுத்துவதே! அதற்காகப் பறக்கும் படையெல்லாம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனாலும் வாக்காளர்களுக்கு ஆளும் கட்சித் தரப்பில் பணப்பட்டுவாடா என்பது 'சாங்கோ பாங்கமாக' நடை பெறுவதைக் காணொலி மூலமாக பொது மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆளும் அஇஅதிமுக காரில் கொண்டு போன மூன்று கோடி ரூபாயில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இரண்டு கோடி ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்றனர் என்று செய்தி வருகிறது. ஒரு கோடி ரூபாய் புதரில் இருந்து எடுக்கப்பட்டது; வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் ஆளும் தரப்பினர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த தருணத்தில் எதிர்க்கட்சியினரால் கையும், களவுமாகப் பிடிக்கப்பட்டு, காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அப்படியானால் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய தோல்வியை அடைந்து விட்டது என்றுதானே கருத வேண்டும்.

சென்னை இராதாகிருஷ்ணன் (ஆர்.கே. நகர்) நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்பதற்காகத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு நடத்தப்படவில்லையா? அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பெரும் எண்ணிக்கையில்  தேர்தலை நிறுத்த வேண்டியிருக்குமே!

144 தடையுத்தரவு போட்டு, தமிழ் நாட்டுத் தேர்தல் களத்தில் ஆளும் தரப்பால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதைவிடக் கேவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?

வாக்காளர்களுக்குப் பணப்பாடுவாடா என்ற பெயரில் செய்தி - தேர்தல் ஆணையத்திற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதால், அதனை மறைக்கவும், மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும்தான் வருமான வரித் துறையின் திடீர் சோதனைகள் என்று கருதவும் நிரம்ப இடம் உண்டு.

ஆனால், இவை எல்லாம் வாக்காளர்ப் பெரு மக்களின் மத்தியில் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தப் போகிறது என்பதைக் கொட்டை எழுத்துகளில் இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையினரின் இத்தகு செயல்பாடுகளால், ஆளும் மத்திய பா...வின்மீதுபெரும் வெறுப்பு என்னும் நெருப்பு பாய்ந்து, அதற்கு முட்டுக்கொடுக்கும் அஇஅதிமுகவின் மீதும் பிடித்து கைப்பிசைந்து நிற்கும் நிலைதான் ஏற்படப் போகிறது.

தேர்தல் முடிவுக்குப்பின் பா...வும், ...தி.மு..வும் 'உன்னால் நான் கெட்டேன்!' என்று ஒருவருக்கொருவர் காதைப் பிடித்துக் கொண்டு 'தோப்புக் கரணம்' போடும் நிலைதான் ஏற்படப் போகிறது.

விதைத்தது தானே விளையும்!

No comments:

Post a Comment