திராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்!!

 கரோனா - கோடைக்கு நடுவே மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சார சூறாவளிப் பயணம்

தி.என்னாரெசு பிராட்லா

தமிழ்நாடு கோடைக்கால கொடுமையில் தகிப்பது ஒரு பக்கம் என்றால், தமிழ்நாட்டு மக்கள் அதைவிட கொடுமை யான ஆட்சியின் கோரத்தை தாங்க முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக வேதனையை அனுபவித்து வருகிறார்கள்!”

ஆம்! நடந்து முடிந்த தேர்தல் பரப்புரையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மக்கள் மத்தியில் எடுத்து வைத்த கருத்துதான் இது!

நாடெங்கும் மக்களும் இந்தக் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஏற்றுக் கொண்டதை நாம் பார்க்க முடிந்தது.  பரப்புரையை தொடங்கும் சில நாள்களுக்கு முன் தி.மு.கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள், ஆசிரியர் அவர்களை அடையாறு இல்லத்தில் வந்து சந்தித் தார்.  கழகத் தலைவர் அவர்களும், தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு பயனாடை அணிவித்து, கழகத்தின் புதிய வெளியீடுகளை வழங்கி 234 தொகுதிகளிலும் தி.மு.கழ கத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலுக் கான பரப்புரைப் பயணத்தை, கடந்த மார்ச் மாதம் 18 ஆம் நாள் கழகத்தின் பாசறைகளில் ஒன்றான நன்னிலம் தொகுதி யில் இருந்து தொடங்கினார். “கரோனா அச்சுறுத்தலுக் கிடையே நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரப்புரைக்காக  சூறாவளி சுற்றுப்பயணம் போக வேண்டுமா? அவர்களின் உடல் நலம் என்பது தமிழர் சமுதாய நலனுக் கானதுஎன்ற அடிப்படையில் ஆசிரியர் அவர்களின் மருத்துவர்கள், குடும்பத்தினர், கொள்கை உறவுகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் என அனைவரும் ஒருமித்த கருத்தை முன்வைத்தனர். ஆனால் நமது தலை வரோ, அதைப் பரிசீலித்தாலும், “எப்படி நாம் பரப்புரையைத் தவிர்க்க முடியும்! வடக்கே இருந்து வரும் காவி பயங்கரம், தென்னகமாம் திராவிட மண்ணைக் கபளீகரம் செய்யத் துடிக்குதே! இதைக் கண்டும் காணாமல் போவது உண்மை பெரியார் தொண்டர்களுக்கு பொறுப்பன்று!  நமது வழிகாட்டி அய்யா பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் மூத்திர வாளியை தூக்கிக் கொண்டு, உடல் முற்றிலும் நலிவுற்ற நிலையிலும் இந்த மக்களுக்காக தொண்டாற்றினாரே! நான் தொண்டருக்கும் தொண்டனல்லவா? அப்படி ஒதுங்கி விடலாகாது!” என்று கங்கணம் கட்டிக்கொண்டு பரப்பு ரையை தொடங்கி விட்டார். மிகத் தெளிவான முறையில் திட்டமிட்டு மார்ச் மாதம் 18 அன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு நண்பகல்  11 மணிக்கு தஞ்சை வந்தடைந்தார்.

வந்ததும் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து, பயணத் திற்கான வழிகாட்டு நெறிமுறை மற்றும் அறிவுரைகள் வழங்கி ஆயத்தப்படுத்தினார்.

மார்ச் 18 அன்று முதல் கூட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தனது பரப்புரையை தொடங்கி திருவாரூர், மன்னார்குடி, (தஞ்சை வந்து தங்கல்),மார்ச் 19 - பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு,(தஞ்சையில் தங்கல்)

மார்ச் 20 - திருக்காட்டுப்பள்ளி (திருவையாறு தொகுதி), குன்னம், அரியலூர், (திருச்சியில் தங்கல்)

மார்ச் 21 - காட்டூர் (திருவெறும்பூர் தொகுதி), மணப்பாறை, (திருச்சியில் தங்கல்)

மார்ச் 22 - இலால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர்,( திருச்சியில் தங்கல்),

மார்ச் 23 - நாச்சியார் கோவில் (திருவிடைமருதூர் தொகுதி), பாபநாசம் தொகுதி கபிஸ்தலம், (திருச்சியில் தங்கல்)

மார்ச் 24 காலை 9 மணிக்கு புறப்பட்டு கரூர், காங்கேயம் வழியாக கோவை மாநகர் சென்று மதிய உணவும், சிறிது நேரம் ஓய்வும் முடித்து  சுந்தராபுரம் (கிணத்துக்கடவு தொகுதி), அவினாசி கூட்டங்களை முடித்து, இரவோடு இரவாக நீலகிரி மலையில் பயணம் செய்து நள்ளிரவு 12.30 மணியளவில் குன்னூர் சென்றடைந்தார்கள். எப்போதும் போல மருத்துவர் கவுதமன் மற்றும் அவரது அருமை மகன் மருத்துவர் இனியன் ஆகியோர் ஆசிரியர் அவர்களை அழைத்துச்சென்று தங்க வைத்து உபசரித்தனர்.( சிரித்த முகத்தோடு அன்பு பாராட்டும் அம்மா பிறைநுதல் செல்வி இல்லாத குறை ஒன்றுதான்.)

மார்ச் 25 அன்று காலையில் குன்னூர் பேருந்து நிலை யத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தைத் தொடங்கி, மீண்டும் கீழே இறங்கி நம்பியூர் (கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி), ஈரோடு (கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகள்), எடப்பாடி, (திருச்சியில் தங்கல்),

களைப்பில்லாத தொடர் பயணம்

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வயதோ 88. பயணம் செய்த நாள்களோ 18. பயண தூரம் 5350 கி.மீ. பங்கேற்ற கூட்டங்கள் 37. 

மார்ச் 27 - விருத்தாசலம், (திருச்சியில் தங்கல்), மார்ச் 28 - காலை 9 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் 1 மணியளவில் - சேலம் மாநகருக்கு சென்றடைந்த கழகத் தலைவரை பெரியார் பெருந்தொண்டர் பழனி.புள்ளையண்ணன் தலை மையில் சேலம் மாவட்ட கழக தோழர்கள் வரவேற்றனர். மதியம் மாவட்ட செயலாளர் அண்ணன் .. இளவழகன் இல்லத்திலிருந்து வந்த உணவினை அருந்தி முடித்து ஓய்வின்றி பொதுக்கூட்டத்திற்குப் புறப்பட்டார். மாலை 3.30 மணியளவில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் - தி.மு.கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 

தமிழர் தலைவரோடு களத்தில்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றும் முன் அனைத்துக் கூட்டங்களிலும்  திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன்கழக சொற் பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் ஆகியோர் உரையாற்றினர். இவற்றுக்கெல்லாம் முத் தாய்ப்பாக சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆசிரியர் மேற்கொண்ட பரப்புரையின் நோக்கங்களை எடுத்துக்கூறி அதன் சிறப்பம்சங்களை உலகம் அறியும் வண்ணம்விடுதலை'யில் கட்டுரையையும் தீட்டி விட்டார். அந்தக் குறிப்புகளே நமது பேச்சாளர்களுக்குப் பிரச்சாரத்திற்கு வழிகாட்டியாக அமைந்தன என்றே சொல்லலாம்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 8 நிமிடங்கள் பேசினார். அவரது உரையைக் கவனித்தராகுல் காந்தி அவர்கள் தனது பேச்சில் ஆசிரியர் அவர்களைக் குறிப்பிட்டு, "அவ ரது கருத்தை நான் வழிமொழிகிறேன்" என்று பேசினார். ஆசிரியர் அவர்கள் பேசியதோ எட்டு நிமிடம். ஆனால் எட்டுத்திக்கும் பரவிடக் காரணமாக அமைந்தது ராகுல் காந்தி அவர்கள் அதைத் தொட்டுக்காட்டிய விதம். உல கெங்கும் வாழும் தமிழர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும், இணைய தளத்தின் மூலமாகவும் பார்த்துள்ளனர். அப்படி பார்த்ததில் ஒருவர் அமெரிக்கப் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் அவர்கள். அவர்  உடனே தலைவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பயணத்தில் இரவு உணவை திண்டி வனம் நகரின் புறவழிச்சாலை உணவகம் ஒன்றில் முடித் தார்கள். அங்கே நமது கழக வீரர் மண்டல தலைவர் .மு. தாஸ் அவர்கள் தமது இணையர், மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் என அனைவரும் வந்திருந்து ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர். உணவருந்தி முடித்து அன்று இரவு 12.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்  கழகத் தலைவர் அவர்கள்.

இடைவிடாமல் 12 நாட்கள் பயணம் செய்தும் களைப் பில்லை; சோர்வில்லை அவருக்கு! அன்று காலையே வழமைபோல பெரியார் திடலில் அவரது அலுவலகப் பணியை மேற்கொண்டார்.

மார்ச் 30 அன்று தலைநகர் சென்னையின் மய்யப் பகுதியான ஈக்காட்டுதாங்கலில் (சைதாப்பேட்டை தொகுதி) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழர் தலைவர் அவர்கள் மறுநாள் மார்ச் 31 அன்று மதிய உணவை முடித்துக் கொண்டு நண்பகல் 2 மணியளவில் இல்லத்திலிருந்து புறப்பட்டு புதுச்சேரி, கடலூர், நெய்வேலி முடித்து, இரவு 1.30 மணிக்கு திருச்சி வந்து தங்கினார்.

மறுநாள் ஏப்ரல் 1 அன்று காலையிலேயே புறப்பட்டு, மதியமே போடிநாயக்கனூர் சென்றடைந்தார். மாவட்டத் தலைவர் .இரகுநாகநாதன் இல்லத்தில் உணவருந்தி அங் கேயே சற்று ஓய்வும் எடுத்து மாலை போடிநாயக்கனூர், கம்பம் தொகுதிகளில் பரப்புரையை முடித்து, நள்ளிரவு 12 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.

மார்ச் 2 - மதுரை தெற்கு, திருப்பத்தூர், காரைக்குடி முடித்து தஞ்சை வந்து தங்கினார். மார்ச் 3 - கீழ்வேளூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் பேசிவிட்டு இரவு 2 மணிக்கு திருச்சியில் தங்கினார்கள்.

மார்ச் 4 அன்று காலை 11 மணியளவில் திருச்சி மேற்கு தொகுதியில் கொளுத்தும் வெயிலில் திறந்தவெளி வாகனத்தில் நின்று கொண்டு உரை நிகழ்த்தினார். அன்று மாலை தனது இறுதிகட்டப் பரப்புரைக் கூட்டத்தை நமது பாடி வீடாம் தஞ்சை மாநகரில் பெரியார், அண்ணா சிலை களுக்கு முன்பு  திரண்டிருந்த மக்களிடையே திறந்த வெளி வாகனத்தில் நின்று பெரு முழக்கமிட்டார்.

ஒருவழியாய் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

காரணம் கரோனா காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கழகத் தலைவர் பயணித்து, எந்த ஓர் இடையூறும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தோம் என்பதே அது!!

சரி பரப்புரை முடிந்து விட்டதே என்றுதானே எண்ணு கிறீர்கள்! ஆனால் பயணம் செய்த ஒவ்வொரு நாளும் பகல் வேளையில் அனைவரும் ஓய்வெடுப்பர். ஆனால் கழகத் தலைவரோவிடுதலை'க்கு அறிக்கை எழுதுவது, உடல் நலிவுற்ற கழகத் தோழர்களை அலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பது, நேரில் சந்திக்க வருபவர்களை பார்த்து அளவளாவுவது, பல்கலைக்கழக அலுவலகப் பணிகளை இடையிடையே கவனிப்பது, அன்றாடம் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் தேர்தல் தொடர்பான செய்திகளை கவனித்து அதற்கு ஏற்றாற் போல தமது பரப்புரை கூட்டத் திற்குத் தகவல்களை சேகரிப்பது என்று கணிப்பொறியும் தோற்கும் அளவுக்கு உழைக்கும் ஒரு தலைவரை இனி தமிழகம் காண்பது அரிது தான்.

தமிழர் தலைவருடன் செல்ஃபி

ஒவ்வொரு ஊரிலும் கழகத்தலைவரை அந்தந்த தொகுதி வேட்பாளர்களும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்களும் அன்பொழுக வரவேற்றுப் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர். கூட்டம் முடிந்து தமிழர் தலைவர் அவர்கள் வாகனத்தை அடையும் முன்பு கூடியிருந்த பொதுமக்கள் "அய்யா உடம்பை பாத்துக்குங் கய்யா!" என்று பாசத்துடனும், ஏக்கத்துடனும், கூறியதை பல ஊர்களிலும் பார்க்க முடிந்தது . கூடியிருந்த இளைஞர்களோ "அய்யா ஒரே ஒரு செல்ஃபி, ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்கி றோம்" என்று ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத் தக்கது.

ஒவ்வொரு நாளும் கழகத் தலைவர் அறிவுரைப்படி பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் பொதுக்கூட்ட மேடைகளில் பங்கேற்பவர்கள் யாராயினும், வேட்பாளர் கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனரா என பார்த்து முகக்கவசம் இல்லாமல் வருவோர்க்கு நமது பயணக் குழுவினரே முகக் கவசத்தை தந்ததும் மிக எச்சரிக்கையாக நடந்தேறியது.

பயணக் குழுவினை மிகச் சிறப்பான முறையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார். அவருக்கு தோளோடு தோளாக நின்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் இருவரும் அவ்வப்போது கூட்டம் நடைபெறும் ஊர்களின் பொறுப்பாளர்களையும், வேட்பாளர்களையும் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய பயணக் கூட்டங்களை ஒருமுகப்படுத்தினர். பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேரா..சுப்பிரமணியம் அவர்கள் மேற்பார்வையில் கூட்டங்கள் அனைத்தும் எந்தவித இடையூறுமின்றி சிறப்பாக நடந்து முடிந்தன.

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைத் தொகுத்து விடுதலை நாளிதழுக்கு செய்திகளையும் புகைப்படங்களை யும் அவ்வப்போது பெரியார் திடல் புகைப்பட கலைஞர் பா.சிவகுமார் மற்றும் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் அனுப்பினர்.

மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைப்பில் பெரியார் வலைக்காட்சி தோழர்கள் உடுமலை வடிவேல், அருள் ஆகியோர் அனைத்துக் கூட்டங்களையும் காணொலி மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பார்க்க வசதியாக நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த பயணத்தில்  அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கவனத்திற்குரிய வாகன ஓட்டுநர்கள் தமிழ்ச்செல்வன், ராஜு, பிரபாகரன், மகேஷ், அருள்மணி, சதீஷ், பாலமுருகன், புத்தக விற்பனையாளர்கள் அண்ணா.இராமச்சந்திரன், அர்ஜூன், கழகத் தோழர்கள் ஆத்தூர் சுரேசு, அறிவுச் சுடர், பிரபாகரன், சற்குணம், வேல்முருகன், ஆத்தூர் செல்வம் ஆகிய தோழர்கள் இந்தத் தேர்தல் பரப்புரை பயணத்தில் பங்கேற்றனர்.

ஒருபக்கம் கொளுத்தும் கோடை வெயில்! மற்றொரு பக்கம் கொடுமையான கரோனா காலம்!!

இதைச் சவாலாக ஏற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார் என்பதை விட சூறாவளிப் பயணம்  மேற்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழர் தலைவருக்காக மகிழ்வான பணி

இந்த தேர்தல் பரப்புரையில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதிக நாட்கள் தங்கியது திருச்சி மற்றும் தஞ்சையில் தான்.

திருச்சியில்  பெரியார் மாளிகை சி.தங்காத்தாள் அவர்கள் ஆசிரியர் அவர்களை மிகச் சிறப்பாக பாதுகாத்து உபசரித்தார்.

ஆசிரியர் அவர்களும் "திருச்சியில் நான் இத்தனை நாள்கள் தங்கியது - எனது அடையாறு இல்லத்தில் தங்கியது போன்ற உணர்வினைப் பெற்றேன் என்று பாராட்டினார்.

அதேபோல தஞ்சையில் தங்கியபோது முனைவர் மல்லிகா, முனைவர் .பர்வீன் மற்றும் கோவிந்தராஜ், கென்னடி ஆகியோர் அன்போடு உபசரித்தனர்.

கபிஸ்தலத்தில் ஆடிட்டர் சண்முகம்-கலைமணி இணையர் மற்றும் குடும்பத்தினர் இரவு உணவு வழங்கி சிறப்பு செய்தனர்.

திருச்சியில் பயணக்குழுவினர் தங்கிய நாள்களில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், மண்டல செயலாளர் .ஆல்பர்ட் மற்றும் தோழர்கள் அனைவரையும் பாதுகாத்து  உற்சாகப்படுத்தி உபசரித்தனர்.

பெரியார் மாளிகை பணியாளர் செங்கோடன் அவர் களோ ஆசிரியர் வந்துவிட்டால் போதும் பரபரப்பாகி விடுவார். காலையும் மாலையும் விடுதலை உள்ளிட்ட தினசரி நாளிதழ்களை வாங்கிவந்து தமிழர் தலைவருக்கு கொடுப்பதை மகிழ்வாக எண்ணி மேற்கொள்ளும் அவரது பணி பாராட்டுக்குரியது.

தேர்தல் பரப்புரரையை நிறைவு செய்து சென்னைக்குப் பயணமான தமிழர் தலைவரிடம், “அய்யா இந்த ஏப்ரல் மாதத்தில் ஓய்வெடுங்கள்என்று கேட்டுக் கொண்டேன். உடனே அதை மறுத்த தலைவர் அவர்கள் "நமக்கேதய்யா ஓய்வு" என்றார். "இல்லை அய்யா, நீங்கள் நூறாண்டுக்கு மேல் வாழ்ந்து எங்களை வழி நடத்த வேண்டும்" என்றேன்.

"உனக்கென்னயா நீ சொல்லிட்டு போயிடுவ! இருக்கிறவனுக்குல கஷ்டம் தெரியும்!"  என்று அய்யா பெரியார் சொன்னதையே சுட்டிக்காட்டிச் சொன்னார்! ஆம்! பெரியாரை விட்டுவிட்டு அவர் எதையும் சிந்தித்ததில்லை. "தனது சொந்த புத்தியை விட, அய்யா தந்த புத்தியை கொண்டு நடக்கும்" அற்புதத் தலைவ ரன்றோ நம் தலைவர்! அன்று ஊர் திரும்பி இல்லம் வந்து சேர்ந்ததும் கலங்கிய கண்களுடன் உறங்கினேன்.

மறுநாள் காலை ஏப்ரல் 5 அன்று காலை 10 மணிக்கு அலைப்பேசியில் அழைத்தார் தமிழர் தலைவர்.

என்னய்யா எப்ப ஊருக்குப் போனீங்க? பத்திரமா போனீங்களா?” என்றார். எனக்கு இருந்த களைப்பும் காணாமல் போனது! நான் திரும்பக் கேட்டேன். “அய்யா வீட்ல ஓய்வில் இருக்கீங்களா?”என்று!

சிரித்துக்கொண்டே சொன்னார்நான் திடலுக்குப் போய்ட்டு இருக்கேன்பாஎன்று !!

இவரன்றோ நம் இனத்தின் தலைவர்! இவர்தானே தமிழர் தலைவர்!!

ஆம்! நம் தலைவர் சொல்வார். பெரியார் கொள்கை களுக்கு முடிவில்லை! பெரியார் தொண்டர்களின் பயணங்களோ முடிவதில்லை!! என்று...

இழிவை ஒழிக்கும் போரினிலே என்றும் பெரியார் வழி நடப்போம்! அழிவை அணைக்க நேர்ந்தாலும் அய்யா கொள்கை மலர வைப்போம்!!

வாழ்க தமிழர் தலைவர்!

Comments