'திராவிடக் குரல்' நாடு தழுவிய அளவில் உரத்து ஒலிக்க வேண்டும்

'திராவிட மாதிரி' ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில்

பொது நல அறிஞர் கோபால்கிருஷ்ண காந்தி பெருமித உரை

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (Madras Institute of Development Studies - MIDS) கல்வியாளர்கள் இருவர் ஆராய்ந்து எழுதியுள்ள 'திராவிட மாதிரி - தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விளக்கம்'  (The Dravidian Model - Interpreting the Political Economy of Tamil Nadu) எனும் ஆங்கிலப்  புத்த கத்தின் வெளியீடு மற்றும் புத்தகம் பற்றிய கலந்தாய்வு நிகழ்ச்சி சென் னையில் 16.4.2021 அன்று மாலை நடைபெற்றது.

சென்னை - மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு MIDS பேராசிரியர்  . இரா. வேங் கடாசலபதி தலைமை வகித்தார். புத்தகத்தினை மேனாள் இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவரும் இந் தியப் பிரதமருக்கான ஆலோசனைக் குழுவின் மேனாள் உறுப்பினருமான எஸ். நாராயணன் வெளியிட்டார். வெளியிடப்பட்ட புத்தகத்தினை  MIDS  பேராசிரியர் எஸ்.ஆனந்தி பெற்றுக் கொண்டார். புத்தகம் பற்றிய சுருக்கத் தினை துணை நூலாசிரியர் MIDS  பேராசிரியர் எம். விஜயபாஸ்கர் வழங்கினார். புத்தகம் பற்றிய கருத்தினை ஆய்வு நோக்கிலான உரையாக  MIDS நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் பத்மினி சுவாமிநாதன் வழங்கினார்.

புத்தகம் பற்றி காணொலி மூல கலந்தாய்வு

புத்தக வெளியிடப்பட்ட பின்னர், புத்தகம் பற்றிய ஆய்வினை - கருத்தினை அறிஞர் பெரு மக்கள்  காணொலியில் பங்கேற்று வழங்கினர். மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும்,  பொது நல அறிஞரும் கல்வியாளருமான கோபால்கிருஷ்ண காந்தி, 'தி இந்து' பதிப்பகக் குழுவின் இயக்குநர் என்.ராம், டில்லி பொருளாதாரப் பள்ளியின் மதிப்புறு பேராசிரியர்   ழான் டிரெஸ் மற்றும் MIDS  நிறுவனத்தின் இயக் குநர் பி.ஜி. பாலு ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக தமது விளக்க உரையினை நூலின்  ஆசிரியர் MIDS உதவிப் பேராசிரியர் . கலையரசன் ஆற்றினார். காணொலி தொடர்பு வழி கேட்கப்பட்ட வினாக்களுக்கு விளக்கமும் அளித்தார். விழாவில் பங்கேற்ற அறிஞர் பெரு மக்கள், ஆய்வாளர்கள், பார்வை யாளர்களாகக் கலந்து கொண்ட கல்வியாளர்கள், அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சி  முடிந்தது. வெளியிடப்பட்ட புத்தகம் ஓர் ஆய்வின் முடிவு மட்டுமல்ல. நீண்ட விவாதம், பின்பற்றுதல், போற்றுதல்  எனப் பல தளங் களிலும் உரையாடலின் மாபெரும் தொடக்கம் நிகழவிருக்கிறது என நிகழ்ச்சியில் பேசியவர்  பலரும் தெரிவித்தனர்.

'திராவிட மாதிரி' நூல்

நூலாசிரியரான . கலையரசன் அவர்களின் பின் முனைவர் (Post - doctoral) பட்ட ஆய்வில் வெளிவருகின்ற நூல் 'திராவிட மாதிரி' ஆகும். சமூக அந்தஸ்தில் சமத்துவமின்மை நிலவிடும் நாட்டில், வளர்ச்சி என்பது எளிதில் ஏற்பட்டு விடாது. அப்படி வளர்ச்சி ஏற்பட்டாலும் வளர்ச்சியின் ஆக்கம், பலன்கள் அனைவருக்கும் சென்ற டைந்து விடாது. இப்படிப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியும் அதன் பலன்கள் பலருக்கும் சென்றடைந் துள்ளது என்பதை ஆய்வு மூலம் உறுதிப்படுத்திடும் வகையில்  'திராவிட மாதிரி' நூல் வெளி வருகிறது. இந்தி யாவில் மற்ற மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அந்த வளர்ச்சியின் பலன் மேல்தட்டு அளவிலேயே தங்கி விட்டது. பயன்கள் கீழிறங்கி வரவில்லை. ஆனால் திராவிட ஆட்சி நடைபெற்ற தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்கள் என்பதாக வளர்ச்சியின் பயன்கள் ஜனரஞ்சமாக அனைவருக்கும் கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழல் தென் மாநிலங்களில் நிலவி னாலும், ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் உள்ள வளர்ச்சி நிலைமை குறிப்பிடத்தகுந்ததாக,  கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் நீடிக்கிறது. அரசி யலைப் பொருத்த அளவில் தேர்தல் களத்தில் கட்சிகள் எதிர் நிலையில் இருந்தாலும் அந்தக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நிலையில் அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி   வளர்ச்சி முக ஓட்டமாக  - வளர்ச்சியின் பயன் மக்கள் நலத்  திட்டங்களின் வழியாக அனைவருக்கும், குறிப்பாக அடித்தள மக்களுக்கு சென்றடைந்து   வருகிறது. உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth) என்பதன் உண்மையான செயல்பாடு 'திராவிட மாதிரி'யில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முன்னேற்றப் பாதைக்கும், சமூக   அந்தஸ்தில் சமத்துவமின்மை உள்ள சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி கல்விப் புலன்கள் ஆராயத் தொடங்கியுள்ளன என்பதன் வெளிப்பாடுதான் 'திராவிட மாதிரி' நூலாகும்.

ஒட்டு மொத்த  வளர்ச்சி (Growth) என்பது ஒரு நிலை. முன்னேற்றம் (Development)  என்பது அடுத்த நிலை. முதல் நிலையினை எட்டாத - முதல் நிலையிலேயே தங்கிவிட்ட மாநிலங்கள் பல. வளர்ச்சிக்கு அடுத்த முன்னேற்ற நிலையினை எட்டிப் பிடித்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதை ஆய்வு மூலம்  'திராவிட மாதிரி' நூல் ஆதாரத்துடன் கூறுகிறது.

காணொலி மூலம் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள் ஆற்றிய உரைகளின் சுருக்கம்:

மேனாள் ஆளுநர் கோபால்கிருஷ்ணகாந்தி

இந்திய வெளியுறவுத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும், அசோகா பல்கலைக் கழக வருகைதரு பேராசிரியருமான கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் தாம்உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இன்று வெளியிடப்பட்டுள்ள 'திராவிட மாதிரி' நூல் ஒரு நீண்ட, தொடரும் கலந்துரையாடலை ஊக்குவிக்கின்ற வகையில் தொடங்கியுள்ளது. 'திராவிட' எனும் சொல்லிற்கு இலக்கியம் சார்ந்த போற்றுதலைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் நாட்டுப்பண் ணான 'ஜனகனமண' பாடலில் 'திராவிட' எனும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. 'திராவிட' என்பது இன்றைய நிலையில் உள்ள மாநிலம் (Province)  சார்ந்த  சொல்லாக வெளிப்படாமல், பகுதி  (Region) சார்ந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தென் பகுதி முழுமையையும் குறிக்கும் சொல்லாக 'திராவிட' என்பது எடுத்தாளப்பட்டுள்ளது. 1967-ல் தொடங்கி திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. 1962ஆம் ஆண்டில் 'திராவிடக் குரல்' (Dravidian Voice) இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டது. அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அங்கம் வகித்த பொழுது அவர் எழுப்பிய 'திராவிடக் குரலை' நாடே உற்று நோக்கியது. அண்ணாவோடு, இரத்தினசாமி, இரா. செழியன் ஆகியோரின்  குரல்கள் வெளிப்பட்டன. அண்ணா அவர்களின் பேச்சை பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் உற்று நோக்கினார். இந்திய நாடாளுமன்றத்தில் அண்ணா ஒரு கண்டுபிடிப்பு (Discovery in Parliament)  ஆனார்.தமிழகத் தலைவர் காமராசர் அவர்கள் நேரு மறைந்த பொழுது அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் நிலையில் இருந்தார். திராவிடக் குரல் அன்றும் டில்லியில் ஒலித்தது.  அந்த நிலை மீண்டும் திரும்ப வேண்டும். இன்று நாட்டின் கூட்டாட்சி முறை வலிமை இழந்து நிற்கிறது. திராவிடக் குரல் மூலம் வலிமையாகக் கட்டப்பட வேண்டும் அன்று நாடு தழுவிய அளவில் சமூக சீர்திருத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுத்தார்கள். தேவதாசி முறை ஒழிப்புக்குப் பாடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்ட   தாட்சாயிணி வேலாயுதம் ஆகியோரின் குரல்கள் பலமாக ஒலித்தன. அந்த உணர்வுகளை மீட்டெடுக்கும் கடமை இப்பொழுது தமிழ்நாட்டுக்கு எழுந்துள்ளது. திராவிடக் குரல் மீண்டும் கேட்க வேண்டும்.

பெரியார் எனும் மாபெரும் ஆளுமை மிக்க தலைவர் திராவிடக் குரலின் அழுத்தமான ஒலிப்பிற்கு பரந்துபட்டு பாடுபட்டார். முன்னேற்றக் கருத்தினைச் சொல்லும்  காலத்தால் முற்பட்ட தலைவராக, காலத்தைத் தாண்டிய தலைவராகப் போற்றப்படுவர் பெரியார். பல வகையிலான சமத்துவம் - பாலின சமத்துவம், தலித் மக்களுக்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, சமூகநீதிக்கான உரிமை என பல தளங்களில் சமுதாயத்திற்காகப் பாடுபட்டார். கருத்துகளை சொல்லி மட்டும் சென்றவர் இல்லை பெரியார். காரியம் ஆற்றினார். காலத்தின் தேவை கருதி அவசரமாக களப்பணியில் இறங்கினார் பெரியார். 'திராவிடக் குரல்' என்பது தமிழ்நாட்டின் இயற்கை வளம் போன்றது. நாடு முழுவதும் திராவிடக்குரல் ஒலிக்க வேண்டும் நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும்.

திராவிட ஆட்சியில் 'ஊழல்' அதிகமாகி விட்டது என்று கூறப்படுகிறது. ஊழல் ஒழிக்கப்பட வேண்டியதே. ஊழலை மட்டும் குறிப்பிட்டு திராவிடச் சாதனைகளை மட்டுப்படுத்திவிட முடியாது. நாட்டு நிலைமைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும். அரசு கூறாவிட்டாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் கேட்டுப் பெறுகின்ற உரிமை உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.  இந்த தளத்தில் தமிழ்நாட்டின் நிலைமை மோசம் என்று சொல்ல முடியாது. நன்றாக இருக்கிறது. என்றும் சொல்லிவிட முடியாது. தகவல் அறியும் உரிமைத் தளத்தில் தமிழ்நாட்டு மக்களின் பங்கேற்பு, பங்களிப்பு,  கொண்டாடும் வகையில் அமைந்திட வேண்டும்.

திராவிட இயக்கத்தில், திராவிடத் தலைவர்கள் அருகி வருகிறார்கள். திராவிடக் குரலை ஒலிக்கின்ற வகையில் தலைவர்கள் அதிகப்பட வேண்டும். திராவிட இயக்கத்தின் செயல்பாடு வேகப்படுத்தப்பட வேண்டும். திராவிட இயக்கம் வலுவிழப்பது நம்முடைய வலுவை இழப்பது போன்றதே. வெளிப்படையான, ஒருமைப்பாட்டுடன் கூடிய திராவிடக் குரல் நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். பெரியார், காமராசர், அண்ணா ஆகிய தலைவர்களின்  கனவு நனவாகும் வகையில் திராவிடக் குரல் வலிமை பெற வேண்டும்.

இவ்வாறு கோபாலகிருஷ்ணகாந்தி பேசினார்.

பத்திரிகையாளர் என்.ராம்

தி இந்து பதிப்பகக் குழுவின் இயக்கு நரும், முற்போக்குக் கொள்கை சார்ந்த பத்திரிகையாளருமான என்.ராம் தாம் பேசும் பொழுது குறிப்பிட்டதாவது:

1960களில் தொடங்கி திராவிடக் கருத் தியல் மீது பெரும்பாலோருக்கு ஒரு வித காதல் பிறந்தது (romantisation) என்றால் மிகையில்லை. இது சமூக அந்தஸ்து ரீதியான சமத்துவமின்மை நிலவிய சமூகத் தில் திராவிடக் கருத்து மீது பலருக்கு பற்று தலை ஏற்படுத்தியது. 1967 முதல் தமிழகத் தில் நடைபெற்று வரும் திராவிடக் கட்சிக ளின் ஆட்சி உருவாக்கிய சாதனைகள், ஏற்படுத்திய தாக்கங்கள்திராவிட மாதிரி' எனும் தலைப்பில் ஆய்வு நூலாக வெளி வந்துள்ளது. தமிழக வளர்ச்சிக்கு ஒப்பான மாநிலம் கேரளா என்றாலும், கேரளத்தில் வளர்ச்சியின் அடிப்படையில் நிலவிடும் மனித முன்னேற்றக் குறியீடு (Human Development Index) மிக முக்கியமான தாகும்.

தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சி பல அதிகாரங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்தது. ஊரகப் பகுதிகளைப் பொறுத்த வரையில் நிலமில்லாத தொழிலா ளர் மிகுந்த நிலைமை இருந்தது. இதைக் களைந்திட நிலமற்ற தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கிடும் சட்டங்கள் இயற்றப் பட்டன. சட்டத்தின் தாக்கத்தைவிட நிலவு டைமையாளர்களே தங்களிடம் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு நிலத்தை வழங்கிய நிலைமைகள் உருவாகின.

தொழில் முனைவோர்களைப் பொறுத்த அளவில் பிற மாநிலங்களில் உயர்ஜாதியினர் மிகுதியாக இருந்த நிலை மையில் தமிழ்நாட்டில் அது பன்முகத் தன்மை கொண்டதாக உள்ளது. பிற்படுத்தப் பட்ட வகுப்பினரில் பலர் தொழில் முன வோர்களாக மாறும் நிலைமைகள் உருவா கின. திராவிட ஆட்சியில் சமூக நீதித்தளத் தில் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் உருவான முன்னேற்ற நிலைமை மேலும் முன்னேற்றம் கண்டது. பெரியார் எனும் மாபெரும் இயக்கக்கருவி (engine) யின் புரட்சிகர கொள்கைகள் காரணமாகவே இது சாத்தியப்பட்டது. ஒவ்வொரு ஆட்சி யிலும் சமூகநீதித்தளத்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான வழிவகைகள் ஏற் படுத்தப்பட்டன. குறிப்பாக வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கிடைக் கின்ற வகையில் இட ஒதுக்கீடு முறை விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக கலைஞர் முதல்வராக இருந்த பொழுது கொண்டு வரப்பட்ட முதல் தலைமுறையாக பட்டப் படிப்பு படிக்க வருபவர்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையான பலனை அளித்தது.

வகுப்புவாதத்தைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், மிகக் குறைந்த அளவில்தான் கலவரங்கள் நடந் தன. ஆனால் தலித் மக்கள் மீதான தாக்கு தல் எல்லை மீறிச் சென்ற சம்பவங்களும் தொடர்கின்றன.

கல்வி நிலையங்கள் பெருகி - குறிப்பாக உயர்கல்வி நிலையங்கள் அதிகரித்து பலரும் உயர்கல்வி கற்கும் நிலை ஏற் பட்டாலும், கற்ற கல்வியின் தரம், பட்டம் பெற்றவரிடம் உள்ள திறன் போதுமானதாக இல்லை.

திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சி யில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் களையப்பட வேண்டியவை - குறிப்பாக ஊழல் தலை விரித்தாடும் நிலைமை நீக்கப்பட வேண்டும். அடுத்து தமிழ் நாட்டில் அமையவிருக்கின்ற புதிய அரசு அத்தகைய பணிகளை நிறைவேற்றிடும் என நினைக்கிறேன்.

இவ்வாறு என்.ராம் தமதுரையில் குறிப் பிட்டார்.

பொருளியல் பேராசிரியர் ழான் டிரெஸ்

நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் அவர்களுடன் இணைந்துஉறுதிப்பாடற்ற பெருமை (Uncertain Glory) எனும் ஆங்கில நூலை எழுதியவரும், டில்லி பொருளாதாரப் பள்ளியின் மதிப்புறு பேராசிரியருமான ழான் டிரெஸ் (Jean Dreze) தமது உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் நிலவரங்களை கடந்த 30 ஆண்டுகளாக நேரில் பார்த்து அறிந்திடும் வாய்ப்பினை பெற்றவன் நான். கல்வி என்பது தமிழ்நாட்டைப் பொறுத்த வரை யில் சமூக நீதி சார்ந்ததாக இருக்கிறது. இதே அளவிற்கு மற்ற மாநிலங்களில் கல்வி அளிப்பதன் நிலை இல்லை. கல்வி மக்க ளுக்கானதாக - அனைத்து மக்களுக்கா னதாக ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொருளாதார வாய்ப்புகளும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளன.

பொது சுகாதாரத்தைப் பொறுத்த அளவில் எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாத அளவில் உயர்ந்து நிற்கிறது. சுகா தாரத் திட்டங்கள் வெகு நம்பிக்கையுடனும், உறுதிப்பாட்டுடனும் செயல்படுத்தப்படு கின்றன. ‘திராவிட மாதிரி' என்று சொல்லப் படும் முன்னேற்ற நிலைமைகளுக்கு ஒப் பீடாக உலகளவில் ஒரு சில உதாரணங் களையே காட்ட முடியும்.

குழந்தை நலத்திட்டங்களைப் பொறுத்த அளவில் அதன் நிலைமைகள் இந்தப் புத்தகத்தில் அதிகமாகக் குறிப் பிடப்படவில்லை. குழந்தை நலத்திட்டங் களை செயல்படுத்திடும் உயர்நிலை அதி காரிகளிலிருந்து களப்பணியாளர் வரை பெண்களே பணியாற்றிடும் நிலைமை, குழந்தை நலத்திட்டங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். மகளிரை அதிகார மயப்படுத்துவதும் இதில் அரங்கேறியிருக்கிறது. தேர்தல் சார்ந்த அரசியல் பற்றி யும் புத்தகத்தில் பேசப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு ழான் டிரெஸ் குறிப்பிட்டு உரையாற்றினார்.

பேராசிரியர் .இரா.வேங்கடாசலபதி

MIDS பேராசிரியரும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியினை தலைமை ஏற்று ஒருங்கிணைத்து நடத்தியவருமான பேராசிரியர் .இரா.வேங்கடாசலபதி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

கடந்த அய்ம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டில் எற்பட்ட முன்னேற்றங்களைக் குறித்து வருகின்ற முதல் ஆங்கிலப் புத்த கம் 'திராவிட மாதிரி'. மக்கள் நலத்திட்டங்கள் மாட்சிமை பெற்றது திராவிட ஆட்சியில் தான். மக்களுக்கு இலவசம், மக்கள் நல திட் டங்கள் திராவிட ஆட்சியில் அறிமுகப்படுத் தப்பட்டபொழுது அவைகள்  கிண்டலுக் கும், கேளிக்கும் ஆளாகின. 1980களில் கொண்டுவரப்பட்டசத்துணவுத் திட்டம்' என்பதுகெட்ட வார்த்தை' என்ற பொரு ளில்தான் மட்டுப்படுத்திப் பேசப்பட்டது. அந்த மக்கள் நலத்திட்டத்தால் ஒரு தலைமுறையே பயன் அடைந்து, அந்த திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற் றும் நிலைமைகள் இன்று உருவாகியுள்ளன.

(அண்மையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கூறிய, இலவசத் திட்டங்களால் மக்கள் முன்னேற்றம் எந்த வகையிலும் தடைப் படாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தடைப்படாது எனும் கூற்று நினைவு கூரத்தக்கது)

இன்று வெளியிடப்பட்டுள்ளதிராவிட மாதிரி' நூல் ஒரு தொடக்கமே. இதுபோன்ற நூல்கள் பல எழுதப்படும் சூழலைதிரா விட மாதிரி' நிச்சயம் ஏற்படுத்திடும்.

இவ்வாறு பேராசிரியர் .இரா.வேங் கடாசலபதி பேசினார்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை பெருகிவரும் வேளையில், புத்தக வெளி யீட்டு நிகழ்வு மிகவும் குறைந்த பார்வை யாளர் எண்ணிக்கையுடனும், மிகுந்த கட் டுப்பாட்டுடனும் நடத்தி முடிக்கப்பட்டது.

தொகுப்பு: வீ.குமரேசன்

Comments