புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க பாஜக அல்லாத கட்சிகளுக்கு அழைப்பு

 தலைவர்களுக்கு வைகோ மின்னஞ்சல் மூலம் கடிதம்

சென்னை, ஏப்.28 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம்நேற்று (27.4.2021) அனுப்பிய கடிதம்:

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக நீடிக்கும் என நாட்டின் முதல் பிரதமர் நேரு அறிவித்தார்.

1967இல்தமிழக முதல்வரான அண்ணா, இந்திக்கு இடமில்லை. தமிழ், ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழிகள் என்றார். அதன்படி இன்றுவரை இந்திக்கு இடமில்லை.

தற்போது புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் முயற்சியை பாஜக அரசு தொடங்கியுள்ளது. வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தை கற்க மாட்டோம் என்று இந்தி பேசும் மக்கள் சொன்னால், மாநில மொழிகள் பேசும் மக்களுக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான்.

தமிழகம் கல்வியில் வெகுவாக முன்னேறியுள்ளது. சமூகப் பாகுபாடுகளைக் களைந்து, சமத்துவத்தை நிலைநாட்டி வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை, கல்வியை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தையும் அதிகாரப் பரவலையும் மறுக்கிறது. மும்மொழிக் கொள்கை உலகில் எங்கும் இல்லை.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அம்மாநிலங்களில் மாநில மொழிகளை கற்பிக்க நிதி ஒதுக்கவில்லை.

எனவே, இது முழுக்க முழுக்க மோசடியான திட்டம். தற்போதுள்ள 10, 2 என்ற அமைப்பைச் சிதைத்து, 5, 3, 3, 4 என்ற புதிய முறையை கொண்டு வருகிறார்கள். இதனால் மாணவர்கள் இடைநிற்றல் கூடுமே தவிர, கல்வியின் தரம் உயராது. கல்வி முழுக்க முழுக்க தனியார்மயமாகும்.

எனவே இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து, மாநில மொழிகளை ஒழித்துக் கட்டவும் ஜாதி மத பாகுபாடுகளை நிலைநிறுத்தி, சமூக நீதியை புதைக்கவும் புதிய கல்விக் கொள்கை வழி வகுக்கிறது. எனவே, அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு வைகோ கடிதத்தில் கூறியுள்ளார்.

Comments