‘‘சமூகநீதி சார்ந்த அரசமைப்புச் சட்டத் தத்துவம் முழு அளவில் செயல்பாட்டுக்கு உரியதே!''

பிற இதழிலிருந்து

  மேனாள் நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ்

கருநாடக மாநிலத்தைச் சார்ந்த எச்.என்.நாகமோகன்தாஸ் 1977 ஆம் ஆண்டு தமது வழக்குரைஞர் பணியினைத் தொடங்கினார். விசாரணை நீதிமன்றம் மற்றும் கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு கருநாடக மாநில உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமனம் பெற்றார்.

2013 இல் ஓய்வு பெற்ற எச்.என்.நாகமோகன்தாஸ் மாநில அரசுக்கு ஓர் அறிக்கையை அண்மையில் அளித்துள்ளார்.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்க ளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள ஒன்பது இதர மாநிலங்களில் உள்ளதைப் போல உச்ச வரம்பான

50 விழுக்காட்டிற்கும் மேலாக இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அரசை அந்த அறிக்கையில் அவர் கேட்டிருக்கிறார்.மாநிலமெங்கும் உள்ள மாணவர்களுக்கு

அரசமைப்பு சட்டத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சார இயக்கத்தை அரசமைப்பு சட்ட வல்லுநரான இவர் நடத்திவருகிறார்.

பல்வேறுபட்ட சமூகங்களிடமிருந்து இட ஒதுக் கீட்டுக் கோரிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்துள்ளது. மாநில அரசியலில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வரும் நில உடைமை சமூகத்தினர் இதற்கான போராட்டத்தில் முன்னிலை வகித்தனர். அதனால் தூண்டிவிடப்பட்ட ஜாதி காளவாய் கொதிப்பின் காரணமாக, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே பாதுகாப்பற்ற ஓர் உணர்வை அது உருவாக்கியது. மகாராட்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களும் அண்மைக் காலத்தில் இது போன்ற போராட்டங்களை சந்தித்துள்ளன.

கருநாடக மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற எச்.என்.நாகமோகன்தாஸ் மாநில அரசுக்கு ஓர் அறிக்கையை அண்மையில் அளித்துள்ளார்.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்க ளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள ஒன்பது இதர மாநிலங்களில் உள்ளதைப் போல உச்ச வரம்பான 50 விழுக்காட்டிற்கும் மேலாக இட ஒதுக்கீட்டை விரிவு படுத்த வேண்டும் என்றும் அரசை அந்த அறிக்கையில் அவர் கேட்டிருக்கிறார்.

மாநிலமெங்கும் உள்ள மாணவர்களுக்கு அரச மைப்பு சட்டத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சார இயக்கத்தை அரசமைப்பு சட்ட வல்லுநரான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரு கிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகிறது.

கேள்வி: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும், மற்ற சமூகத்தினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிக அளவில் சலுகைகள் பெற்ற சமூகங்கள் என்று கருதப்பட்ட 'ஒக்கலிகா' மற்றும் 'லிங்காயத்து'  உள்ளிட்ட பல சமூகங்கள் இட ஒதுக்கீட்டில் ஒரு பெரும் பகுதி தங்களுக்கு வேண்டும் என்று கோருகின்றனர். இவ்வாறு நடைபெறுவதற்கான காரணம் என்ன?

பதில் : கடந்த பத்தாண்டு காலத்தில் இது போன்ற போராட்டங்களை குஜராத் மாநில பட்டிதாரரும்,   அரியானா மாநில ஜாட்டுகளும், ராஜஸ்தான் மாநில  குஜ்ஜார்களும், மகாராட்டிர மாநில மராட்டியர்களும், ஆந்திர மாநில காப்புகளும், இப்போது கருநாடக மாநிலத்தில் லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும், குருபாக்களும் நடத்தி வந்துள்ளனர். இத்தகைய குழுக்கள் அனைத்துக்கும் பொதுவான ஒரு தன்மை ஏதேனும் இருக்குமானால்,  அவர்கள் அனைவரும் முக்கியமாக விவசாயத்தையே நம்பி இருப்பவர்கள் என்பதுதான்.

விவசாய சமுதாயத்தினரிடம்

இட ஒதுக்கீடு' விழிப்புணர்வு

நமது நாட்டின் விவசாய சமூகங்கள் 50 ஆம் ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டைக் கோரவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. ஆனால் கடந்த எழுபது ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த அரசுகளின் ஆட்சிக் காலங்களில் தொடர்ச்சியாக, விவசாயப் பொருள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான கொள் கைகளே கடைப்பிடிக்கப்பட்டு வந்தன என்ற போதிலும் விவசாயிகள் அவற்றினால் மோசமான பொருளாதாரப் பாதிப்பிற்கு உள்ளாயினர். அவர்கள் இப்போது எதிர்கொண்டிருக்கும் ஓர் ஆழ்ந்த நெருக்கடி, குறிப்பாக பொருளாதார நெருக்கடி,  அவர்களது கலாச்சார, சமூகக் களங்களிலும் வெளிப் படுத்தப்படுகிறது. விவசாயிகளின் தற்கொலைகளில் இது நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டில் ஒரு மிகப் பெரிய பங்கு வேண் டும் என்ற இத்தகைய கோரிக்கைகள், சில நேரங்களில் சுயநலம் படைத்த அரசியல் ஆதாயத்திற்காக சிலரால் தூண்டிவிடப்படுகின்றன என்பதும் வேறொரு இடத்தில் மிகமிக ஆழ்ந்த நிலையில் உள்ள ஒரு நெருக்கடியின் பிரதிபலிப்பே ஆகும்.

இடஒதுக்கீட்டுக்கான அனைத்துக் கோரிக்கை களையும் நிறைவேற்றுவது என்பது, நாட்டில் உள்ள  ஒரு சில பிரிவு மக்களுக்கு மட்டுமே உதவி செய்யும் என்னும் அளவுக்கு கடந்த பத்தாண்டுகள் காலத்தில் இடஒதுக்கீட்டின் அளவு மிகவும் சுருங்கிப் போய் விட்டது என்பதால், அது இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக ஆகமுடியாது. இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது,  மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் இந்த சூழ்நிலையை மேலும் மேலும் தீவிரமானதாகத்தான் ஆக்கும்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டஇட ஒதுக்கீடு'

கேள்வி: மண்டல் ஆணைய காலத்துக்குப் பிறகு இட ஒதுக்கீட்டுக்கான பயன்களை இத்தகைய சமூகத் தினரில் பெரும்பாலானோர்  தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். அத்துடன், இடஒதுக்கீட்டில் சேர்க் கப்பட வேண்டும் என்ற ஆரவாரமான ஒரு கோரிக்கை இருக்கும் போது, இடஒதுக்கீட்டுப் பயன்கள் எவ்வாறு சுருங்கி வருகின்றன என்பது ஒரு முரண்பாடே ஆகும் அல்லவா?

பதில்: முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாம் மேற்கொண்ட புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இந்த விவசாயத் துறைக்கு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஏறக்குறைய அதே சமயத்தில் தான் மண்டல் ஆணைய பரிந்துரைகளும் நடை முறைப்படுத்தப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டது, ஒப்பந்தத் தொழிலாளர் நியமன நடைமுறையை அரசு துறைகள் விரும்பிக் கடைப்பிடித்தது, அரசுப் பணிகளை அரசு ஊழியர்கள் அல்லாத வெளி ஆட்களின் மூலம் செய்ய வைப்பது  ஆகிய காரணங்களினால் அப்போதிலிருந்து இட ஒதுக்கீட்டுக்கான வாய்ப்புகள் மிகப் பெரிய அளவில் குறையத் தொடங்கின. இத்துறைகளில் எல்லாம் இடஒதுக்கீட்டு நடைமுறை கிடையாது.  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பொதுத்துறை நிறுவனங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 60 லட்சத்துக்கும் மேலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று தெரிய வருகிறது.

இப்போது 98 சதவிகித வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் உள்ளன.  எஞ்சிய 2 சதவிகித வேலை வாய்ப்புகள் மட்டுமே  பொதுத் துறையில் உள்ளன. இதில் 50 சதவிகிதம் உச்ச வரம்பை  இட ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தும்போது, இந்த நாட்டின் 75 சதவிகித மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ்வரும் பணியிடங்கள் வெறும் ஒரு சதவிகித அளவிலானவை மட்டுமே கிடைக்கிறது. இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என்று எவரும் கோராமல், அதற்கு மாறாக சுருங்கி வரும் இட ஒதுக்கீட்டுப் பணியிடங்களில் தங்களுக்கு மிகப் பெரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்று ஆரவாரக் கூச்சல்  போடுபவர்களாகவே மக்கள் உள்ளனர்.

அரசு தரும் ஆதரவால் தனியார் நிறுவனங்களும் தார்மீக அரசு நிறுவனங்களே!

கேள்வி: ஆக்கபூர்வமான இட ஒதுக்கீடு தனியார் துறைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று  இருந்த திட்டங்கள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாகுமா?

பதில்: தனியார் நிறுவனங்கள் என்பது உண் மையில் தனியார் துறையா? தங்கள் நிறுவனங்களின்  பங்குகளை விற்பதன் மூலம் இந்த தனியார் நிறுவ னங்கள் முதலீட்டுக்கான பணத்தைத் திரட்டுகின்றன. அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து இவை கடன் வாங்குகின்றன. இதுவும் பொதுமக்களின் பணமே ஆகும். மாநில அரசு அமைப்புகள் மூலம் அவை தேவையான நிலங்களைப் பெறுகின்றன; அரசின் வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றன;   பொதுக் கட்டுமானங்களை அவை பயன்படுத்துகின்றன. எனவே, சமூகநீதி என்னும் அரசமைப்பு சட்டத் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு மிகப் பெரிய பொறுப்பு தனியார் துறைக்கும்  உள்ளது.

தனியார் துறையில் ஆக்கபூர்வமான நடவ டிக்கையை (இடஒதுக்கீட்டு முறையை) நடை முறைப் படுத்துவதற்கான செயல்திட்டங்களை , முறையான ஆய்வுகள் மூலமும், ஜனநாயக நடைமுறையிலான விவாதம் மூலமும், நாம் மேற்கொள்ளவேண்டியது மிகமிக இன்றியமையாதது ஆகும். அப்போது, நியமனம் பெற விரும்புபவர்களிடையே நிலவும் போட்டி, அவர்களின் திறமை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை நாம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுயவேலைவாய்ப்பு பொருளாதாரம் போன்ற புதிய சவால்களும் இதில் உள்ளன. ஆக்க பூர்வமான இட ஒதுக்கீட்டு நடைமுறையை எவ்வாறு நம்மால் அங்கு நடைமுறைப்படுத்த இயலும்? இத்தகைய அனைத்து வழிகளிலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு - 50% அறிவியல்பூர்வமானதல்ல!

கேள்வி: கருநாடக மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு 15 விழுக்காட்டில் இருந்து 17 விழுக் காட்டிற்கும், பழங்குடியின மக்களுக்கு 3 விழுக் காட்டில் இருந்து 7 விழுக்காட்டிற்கும் இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு நீங்கள் பரிந்துரைத்துள்ளீர்கள். அது இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பான 50 விழுக் காட்டைத் தாண்டுவதாக இல்லையா? இதுதான் அவர்களது முன்னேற்றத்துக்கான வழி என்று நீங்கள் கருதுகிறீர்களா? இது நடைமுறைக்கு சாத்தியமானது தானா?

பதில்: இடஒதுக்கீட்டுக்கு 50 சதவிகித உச்ச வரம்பு நிர்ணயிக்கும்போது, உச்ச நீதிமன்றம் எந்த அறிவியல் பூர்வமான நியாயத்தையும் தெரிவிக்கவில்லை. மராட்டிய இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை தொடர்பான ஒரு மனுவை விசாரணை செய்யும்போது, இந்த உச்சவரம்பை நிர்ணயம் செய்த 1992 ஆம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கை மறுபடியும்  உச்சநீதிமன்றம் இப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. உச்ச வரம்பை நிர்ணயித்ததுடன், 1992 வழக்கில் பல மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப அப்போதைய உச்சநீதி மன்ற அமர்வு உத்தரவிட்டது. கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று பிரமாண வாக்கு மூலங்களை பதிவு செய்தன.

1992 ஆம் ஆண்டின் தீர்ப்பிற்குப் பிறகு, அரிதான சூழ்நிலைகளில் இந்த உச்ச வரம்பு தளர்த்தப் படலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள, பொருளாதார அளவில் பின் தங்கிய பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடும் கூட இந்த 50 சதவிகித உச்சவரம்பைக் கடந்து இருப்பதேயாகும்.

இடஒதுக்கீட்டில் செய்யப்பட்டுள்ள இந்த  50 சதவிகித உச்ச வரம்பை நீக்குவதற்கு நாம் ஒரு பலமான வழக்கை தொடுப்பது மிகமிக அவசியமான தாகும். எடுத்துக் காட்டாக, கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்து ஜாதிகள் மற்றும் சமூகங்களைப் பற்றிய ஒரு சமூக பொருளாதார ஆய்வினை 2015-2016 ஆம் ஆண்டில் மாநில அரசு மேற்கொண்டது. இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்துவதற்கு இந்த ஆய்வினை ஓர் அடிப்படையாகக் கொள்ளலாம்.

இடஒதுக்கீட்டைப் பற்றி பேசும்போது, தகுதி மற்றும் திறமை என்னும் கருத்துகள் பற்றி சில நேரங் களில் நியாயமற்ற முறையில் விளக்கம் அளிக்கப்படு கிறது. வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, தகுதியையும் திறமையையும் எவ்வாறு நாம் மதிப்பிடுவது?

இட ஒதுக்கீட்டின் முழுமை ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பில்....

கேள்வி: அர்த்தம் நிறைந்ததொரு முறையில்

50 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது  என்பதும் ஒரு நீண்ட காலக் கனவாக இருக்கும் நிலையில்,  அதை விட உயர்ந்த அளவு இட ஒதுக்கீட் டுக்கான உச்ச வரம்பு நிர்ணயிப்பது இயலக் கூடியது தானா?

பதில்: தற்போதுள்ள இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50 விழுக்காட்டில் இருந்து உயர்த்தப் படுவது, இன்னமும் மேலானதொரு முறையில் சம அளவிலும், மேலும் கூடுதலாகவும்  இட ஒதுக்கீட்டை அளிப்ப தற்குத் தான் வழி வகுக்கும். மேலாக, சமமான பகிர்வீடு அற்றதும் ஒரு தீவிரமான பிரச்சினையே. ஆனால், சமூக நீதியை எட்டவேண்டுமெனில், இட ஒதுக்கீட்டுக்கான நியமன இடங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்; கூடுதலாகப் பணியிடங்களை உருவாக்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, பொதுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது, பொது நிறுவனங்களின் பணிகளை  அந்த நிறுவனப் பணியாளர்களை செய்ய விடாமல், வெளி நிறுவன ஆட்களைக் கொண்டு செய்விப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். சிறப்பு தகுதி வாய்ந்த பணியிடங்கள், பேராசிரியர்கள், சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் தனியார் துறை போன்ற புதிய பகுதிகளிலான வாய்ப்புகள் அறிமுகப் படுத்தப்பட  வேண்டும்.

கேள்வி: நமது இட ஒதுக்கீட்டுக் கொள்கை இன்றைய தினத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் படி முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுவது தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில் : பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, 50 விழுக்காடு உச்ச வரம்பு, கிரீமி லேயர் என்னும் வருமான வரம்பு, பலவீன சமூகங்களைப் பாதுகாப்பதற்கான உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டுப் பட்டியல்களில் புதிய சமூகத்தினரை சேர்ப்பது, பட்டியலில் இருக்கும் சமூகத்தினரை நீக்குவதற்கும், சமூகங்களை வகைப்படுத்துவதற்கும் வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது போன்ற இடஒதுக்கீடு தொடர்பான பல பிரச்சினைகள் பற்றிய கொள்கை அளவில் பல குழப்பங்கள் இப்போது உள்ளன. பெரும்பாலான இத்தகைய பிரச்சினைகளில் இப்போது தற்காலிகமான முடிவுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதுவே ஒரு மிகப் பெரிய அளவிலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பற்றிய நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கூட நிலைத்த தன்மையான நிலைப்பாடு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

மேலும், இரண்டு புதிய அம்சங்கள் தோன்றியுள் ளன. பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்போ ருக்கான இட ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பவைதான் அவை. தனியார் துறை யில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் நடை முறைப்படுத்தப்படாத நிலையில்,  இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் காலாவதி ஆனதாகவே தோன்றுகிறது.

இத்தகைய பிரச்சினைகளுக்கு நாம் முடிவு காணவேண்டும் என்பதுடன், ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையே, நமது இன்றையத் தேவை களுக்கு ஏற்றபடி திருத்தி மாற்றி எழுதப்பட வேண்டும். கடந்த எழுபது ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெறுவதற்கான தகுதி இருந்தும் இது வரை பெறாமல் இருக்கும் சமூகங் களுக்கு எவ்வாறு இடஒதுக்கீட்டுப் பயன்களை அளிப்பது என்பது பற்றி நாம் முதலில் விவாதிக்க வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்புதான் தீர்வு!

கேள்வி: அத்தகையதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான தொடக்க நிலை எதுவாக இருக்க முடியும்?

பதில் : கருநாடக மாநில அரசால் மேற்கொள்ளப் பட்ட சமூக, பொருளாதார ஆய்வு அல்லது ஜாதி கணக்கெடுப்பின் வழியில், பல்வேறுபட்ட  சமூகங் களின் இன்றைய நிலையைப் பற்றி மதிப்பீடு செய் வதற்காக தேசிய அளவிலான ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப் படுவது மிகவும் இன்றியமையாதது ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களின் பட்டியல்களை நாம் முடிவு செய்ததற்குப் பிறகு அவற்றில் பெரிய பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளன. இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றி,  திருத்தி எழுதுவது என்ற நடைமுறையின் தொடக்க மாக அத்தகைய ஒரு தேசிய அளவிலான ஆய்வு ஒன்றுதான் இருக்க முடியும்.

நன்றி: 'தி இந்து' 11.04.2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

Comments