அமெரிக்காவில் புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா

 (பிரசாத் பாண்டியன்)

அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் ஏற்பாட்டில் அமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  சிறப்பை எடுத்துக்கூற வருகிறது 'புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா 2021'. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்று உலகத்தமிழர்களால் அழைக்கப்படும் பாரதிதாசனாரின் நினைவு நாளாம் 21 ஏப்ரல் 2021 முதல் அவரது பிறந்தநாளாம் 29 ஏப்ரல் 2021 வரை தொடர் நிகழ்ச்சிகளாக இப்பெருவிழா ஆரவாரமாகவும், கோலா கலமாகவும், கொண்டாட்டமாகவும் ஒரு சேர அரங்கேறி பாரதிதாசனாரின் நேசர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவுள்ளது.

'பேரனின் பார்வையில் பாரதிதாசன்"

பாரதிதாசனாரை சுட்டெரிக்கும் கதிரவனாக கண்டுள் ளோம். ஆனால் தன் பிள்ளைகள் மற்றும் பேரன்களோடு விளையாடி மகிழ்ந்த அன்பான குடும்பத் தலைவராக வாழ்ந்த பாங்கை "பேரனின் பார்வையில் பாரதிதாசன்" என்ற தலைப்பில் முதற்நாள் சிறப்புச் சொற்பொழிவாக கலைமாமணி  கோ.பாரதி (பாரதிதாசனாரின் பெயரன்)  பேசவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கருத்தரங்கம், தமிழிசையரங்கம், சிறார்களுக்கான கட்டுரைப்போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவியரங்கம், பட்டிமன்றம், மு. பிறந்தநாள் சிறப்பு நிகழ்வு, "குடும்பவிளக்கு - முதியோர் காதல்" பற்றிய சொற்பொழிவு மற்றும் புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் சிறப்புச் சொற்பொழிவு  என அணியணியாக நிகழ்சிகள் தொடர்ந்து நடக்கவுள்ளன.

திருக்குறள் உரையின் சிறப்பு

"புரட்சிக்கவிஞர் ஓரு பார்வை" என்ற தலைப்பில் உலகத்தமிழர்கள் அவரது எழுத்தின் கருத்துச்சிறப்பை  பைந்தமிழ்ச்செல்வி  புதுகை  .பாரதி தலைமையில் பேசவுள்ளனர். பாரதிதாசன் எளிய மக்களை தன் கவியில் உள்ளடக்கிய பாங்கு , பாரதி வழியில் புதுக்கவி பாடிய பாங்கு. உலகத்தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவரது திருக்குறள் உரையின் சிறப்பு மற்றும் அவரது திரையிசைப்பாடல்கள் பற்றிப் பேச்சாளர்கள் பேசவுள்ளனர்.

பாரதிதாசனாரின் பாடல்களை தமிழிசையால் மகிழ்விக்க பல பாடகர்கள் அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும், பாடவிருக்கிறார்கள். கேட்போருக் குத் தமிழ் உணர்வு மற்றும் புரட்சிக்கருத்துகள் தெவிட்டா தேனிசையாக பொழியும் என்பதில் எள்ள வும் அய்யமில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறு கிறார்கள்.

"அழகின் சிறப்பு"

அமெரிக்கக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்துக்கு இணையாக தமிழில் இயற்கையைப் பாடியவர் நம் பாவேந்தர். அவரது இயற்கை பற்றிய படைப்பகளின் சிறப்பை எடுத்துரைக்க வாழும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் தலைமையில் "அழகின் சிறப்பு" என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடக்கவுள்ளது.  அதில் தமிழ், கடல், வானம், குன்றம், தென்றல் என்ற உள் தலைப்புகளில் பல அறிஞர் பெருமக்கள் தங்கள் கவித்திறனால் புரட்சிக்கவிஞர் படைப்பின் புகழ் பாடவுள்ளனர்.

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்று காதல் சொற்களை வடித்தவர் பாவேந்தர். மற்றொரு பக்கம் "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!" என்று தமிழருக்கு உணர்ச்சியூட்டி வீரத்தை விதைத்த புரட்சிக்கவிஞரும் அவரே. இதில் எக்கருத்து விஞ்சி நிற்கிறது. அதனை நயத்துடனும், நகைச்சுவையுடனும் எடுத்துரைக்கும் "பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?" என்ற சிறப்புப் பட்டிமன்றம் இலக்கியச்சிம்மம் கங்கை மணிவண்ணன் அவர்களது தலைமையில் நடக்கவுள்ளது.

"பாவேந்தரின் பார்வையில் இயற்கை"

8 அகவை முதல் 15 அகவை வரை சிறார்கள் பங்கு கொள்ளும் "பாவேந்தரின் பார்வையில் இயற்கை" என்ற பேச்சுப்போட்டி நடக்கவுள்ளது. மேலும் 16 அகவைக்கு மேல் உள்ள பெரியவர்கள் பங்கு கொள்ளும் "புரட்சிக்கவிஞரின் மொழி வளர்ச்சி சிந்தனைகளின் இன்றைய தேவை"  என்ற கட்டுரைப் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவோருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

புரட்சிக்கவிஞரின் இளையோர் காதல் பாடல்கள் மட்டுமா சிறப்பு, இல்லை..இல்லை அவரது முதியோர் காதல் கவிகள் இன்னும் சிறப்பு என்று எடுத்துரைக்க "குடும்பவிளக்கு - முதியோர் காதல்" என்ற தலைப்பில் பேசவுள்ளார் எழுச்சிப்பேச்சாளர் துரை. எழில்விழியன்.

பாரதிதாசன் கை வரையா கவிகள் உள்ளனவோ? அவை கூறா கருத்துகள் உள்ளனவோ? அனைத்தும் உண்டு! அனைத்துத் தேனிலும் ஒரு துளி எடுத்து கேட்போரின் செவி சுவைக்க வைக்க ஒரு கருத்தரங்கம் "பாரதிதாசன் படைப்புகள்" என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் தலைமையில் நடக்கவுள்ளது.

பாரதிதாசன் - மெய்யெழுத்து

புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் நிகழ்வாக "பாரதிதாசன் - மெய்யெழுத்து" என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி உரையாற்றவுள்ளார்.

புரட்சிக்கவிஞரைப் போற்றும் அதே நேரத்தில், தமிழுக்குப் பெரும் பங்காற்றிய மு. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் மு. வரதராசன் அவர்களையும் போற்றிட அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் . இரா. அரங்கசாமி அவர்கள்   சொற்பொழிவாற்றவுள்ளார்.

இப்பேரிடர் காலத்தில் அனைத்து நிகழ்வுகளும் இணையவழி (Zoom meeting)  மூலமாக நடக்கவுள்ளன.   அனுமதி இலவசம். இவ்விழா சிறப்பாக நடைபெற உலகத்தமிழர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Comments