‘எதார்த்தம்' எனும் உளியால் தன்னைத் தானே செதுக்கி மாபெரும் இலக்கிய ஆளுமையாக உயர்ந்தவர்!

சென்னை - ரஷ்ய பண்பாட்டு மய்யம் நடத்திய எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் தலைமை உரை

 சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மய்யம் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை 24.4.2021 அன்று மாலை இணைய வழி நிகழ்ச்சியாக நடத்தினர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று தமது இளமைக் காலம் தொடங்கி இறுதி வரை நட்புறவு பாராட்டி வந்த தன் தோழன் ஜெயகாந்தன் பற்றி உணர்வுப் பூர்வமாக வும்நட்புறவுக்கு தாம் இருவரும் எவ்வளவு உயர்வு நிலை அளித்து வந்ததையும் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்ச்சியில் ரஷ்ய பண்பாட்டு மய்யத்தின் இயக்குநர் ஜென்னடி ரகாலீப் கலந்து கொண்டார். ஏவுகணை விஞ்ஞானி முனைவர் சிவதாணு பிள்ளை மற்றும் இலக்கிய ஆர்வலர்கள், ஜெயகாந்தனின் நேயர்கள் என பல தளங்களில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்நாட்டின் அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் பங்கேற்று ஜெயகாந்தனின் படைப்புகள் பற்றியும், அவரோடு பழகியவர்கள் தமது இனிய நினைவு களையும் எடுத்துக் கூறினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரஷ்ய பண்பாட்டு மய்யத்தின் ஓர் அங்கமான இந்திய - ரஷ்ய வர்த்தக தொழிலாளர்கள் அவையின் செயலர் செம்மல் பி.தங்கப்பன் கவனித்து ஒருங்கிணைத்து நடத்தினார்.

தமிழர் தலைவரின் தலைமை உரை

தமிழர் தலைவர் தமது சிறுவயதிலிருந்து பழகி வந்த ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதாவது:

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், மாபெரும் இலக்கிய ஆளுமை உடையவராக விளங்கிய மேதை ஜெயகாந்தனும், நானும் நட்பு என்பது என்னவென்று தெரியாத சிறு வயதிலிருந்து உறவாகப் பழகியவர்கள். அந்த நட்புறவு கொள்கை மாறுபாடுகள் நிலவி வந்தாலும் வளர்ந்து - இறுதி வரை இயல்பாகவே நீடித்து வந்தது.

ஜெயகாந்தனின் இயற்பெயர் முருகேசன், அவரது தந்தையார் தண்டபாணி. தாயார் ஜீவா ஆகிய பெருமக்கள். அவரது தந்தையார் பெரியார் இயக்கப் பற்றாளர். எனது இயற்பெயர் சாரங்கபாணி. முருகேசனும், சாரங்கபாணியும் ஒரே ஊர்க்காரர்கள் (கடலூர்), ஒரே வீதிக்காரர்கள், ஒரே திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள். ஜெயகாந்தனின் அத்தையார் (தந்தையின் தமக்கை) சொர்ணத்தம்மாள் அவர்கள்தான் எங்களுக்கு முதல் ஆசிரியை. பின்னர் இருவரும் இசுலாமியப் பள்ளியில் ஒன்றாய்ப் படித்தோம். தொடக்கம் முதல் இருவருமே எதிரெதிர் நிலைப்பாடு கொண்டவர்களாகவே பழகினோம். வளர்ந்தோம். எங்களிருவருக்கும் இடையே நிலவிய நட்புறவுக்கு எந்தக் காலத்திலும் பங்கம் வரவில்லை. இறுதி வரை நீடித்து வந்தது.

சிறு வயதில் கூட்டங்களில் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது "சாரங்கபாணி ஒழிக!" என தான் முழக்கமிட்டதைக் குறிப்பிட்டுத்தான் எங்களது நட்பினைஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்" எனும் தன் வரலாறு போன்ற பதிவில் தொடங்கினார். பின்னர் நாங்கள் இருவரும் பிரிந்து வளர்ந்தோம். நான் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு வளர்ந்தேன். அவர் பொதுவுடைமை சிந்தனையில் இயக்க ஈடுபாட்டுடன் வளர்ந்தார். சுயமாகப் பல நூல்கள் படித்து தனது பார்வையை விசாலமாக்கிக் கொண்டவர் ஜெயகாந்தன்.

தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு இலக்கிய உலகில் உயர்ந்தவர். தன்னை செதுக்கிக் கொள்ள அவர் பயன்படுத்திய உளிஎதார்த்தம்' எனும் கருவிகள். தனக்கு மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் கூறி, தனக்கு சரி என்று பட்டதை, முன்பின் முரண்பாடுகள் பற்றிய தயக்கம் எதுவும் இல்லாமல் வெளிப்படுத்திய பேராளுமையாளராக  ஜெயகாந்தன் இறுதி வரை விளங்கி வந்தார். (தமிழர் தலைவரின் பேச்சு முழுமையாக வெளிவரும்).

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

ஆற்றிய உரைச் சுருக்கம்

பி.தங்கப்பன், செயலர் செம்மல், இந்திய -ரஷ்ய வர்த்தக தொழில்கள் அவை:

எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகள், ரஷ்ய மொழியிலும், உக்ரைன் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நான் ஜெயகாந்தனின் மொழிப் பெயர்ப்புக் கட்டுரையானRight or Wrong-அய் ரஷ்யாவில் பாடமாக படித்திடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் ஜெயகாந்தனை நான் நன்கறிவேன் என தெரிவித்ததும், அந்தக் கல்வி நிறுவனத்திலேயே ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி (வேண்டுகோளுக்கு இணங்க) உரையாற்றிடும் வாய்ப்பும் கிடைத்தது.

சமூகத்தின் அவலத்தைச் சொல்கிறேன்' என தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்திய எழுத்தாளர் ஆவார். தனக்கு மனதில் பட்டதை எந்தவித நெருக்கடிக்கும் வளைந்து கொடுக்காமல் துணிச்சலாகக் கூறியவர், தான் சொல்வதால் அதைக் கேட்பவர் மனநிலை என்ன ஆகும் என்பது பற்றிய கவலையில்லாமல் எதார்த்தத்தை பிரதிபலித்தவர் ஜெயகாந்தன். எடுத்துக்காட்டாக, ஜெயகாந்தனின்ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்திரைப்படத்தை நண்பர் அழைப்பின் பேரில் உடன் சென்று பார்த்தேன். படத்தைப் பார்த்த பின்னர்எப்படி இருக்கிறது?‘ என்று என்னிடம் கேட்ட நண்பரிடம், ‘படம் முழுவதும் உட்கார்ந்து பேசுகிறார்கள், சாப்பிடுகிறார்கள்! வேறு என்ன இருக்கிறது' என எனக்குப் பட்டதைச் சொல்லிவிட்டேன். பின்னர் என்னையும் அழைத்துக் கொண்டு அந்த நண்பர் ஜெயகாந்தனைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றார். ‘படம்' பார்த்தது பற்றி நண்பர் குறிப்பிட்டதும், ஜெயகாந்தன் அவர்களும் அந்த கேள்வியைக் கேட்டார், ‘படம் எப்படி இருக்கிறது?' நண்பரிடம் சொன்ன அந்த பதிலை கருத்தாகச் சொன்னேன். சற்றும் தாமதிக்காமல், ‘படத்தில் கதா பாத்திரங்கள் செய்வதைத் தானே நீங்களும் ஒவ்வொரு நாளும் செய்கிறீர்கள். நானும் செய்கிறேன். அனைவரும் செய்து வருகிறோம். இதில் ஆதங்கப்பட என்ன இருக்கிறது?' என எதார்த்தமாகக் கூறினார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் அவர்கள் பொது வாழ்க்கையில் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால்இந்திய ரஷ்ய நட்புறவுக் கழகம்' நிறுவிட பாடுபட்டு தன் வாழ்வின் இறுதி வரையில் அதன் செயல்பாட்டில் அக்கறை காட்டி வந்தார். ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும் சமயத்தில், ரஷ்யாவில் செர்னோபில் விபத்து நடந்ததை நினைவுபடுத்தி எதிர்ப்பு கிளம்பிய நேரத்தில் துணிச்சலாக ஜெயகாந்தன் ஒரு கருத்தினைத் தெரிவித்தார். "விஞ்ஞானத்தால் ஒரு முறை ஏற்படும் விபத்து மறுபடியும் நிகழாது என்பதுதான் விஞ்ஞானத்தின் நியதி".

தனது மனதில் பட்டதை, தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளிப்படுத்திய சமூகத்தைப் பற்றி அகக்றையுடன், சமூக மனிதர் பற்றிய அவலங்களை தனது படைப்புகளின் மூலம் பதிவு செய்த மாமனிதர் ஜெயகாந்தன். அவரது படைப்புகள் கால வெள்ளத்தைக் கடந்து நிலைத்து நிற்கும்.

முருகபூபதி, ஆஸ்திரேலியா:

தமிழ் திரைப்படத்துறையில் தடம் பதித்த ஜெயகாந்தன் ஒரு கட்டத்தில் தனது தனித்தன்மையைக் கரைக்க விரும்பாமல் ஒதுங்கி விட்டார். இது பற்றி ஜெயகாந்தனிடம் கேட்டபொழுது, ‘தமிழ் சினிமாவுக்கு நான் ஒத்துவரவில்லை; எனக்கு தமிழ் சினிமா ஒத்து வரவில்லைஎன பளிச்சென பதிலளித்தார். ‘பாதை தெரியுது பார்என அவரது கதை திரைப்படமாக்கப்பட்ட பொழுது, சில காட்சிகளில் நடிக்கவும் செய்தார். ஆரம்ப நாள்களில் திரைப்பட உரையாடலாசிரியர் பி.எல்.நாராயணனிடம் உதவியாளராக இருந்த அனுபவமும் ஜெயகாந்தனுக்கு உண்டு. தான் மிகவும் விரும்பி தயாரித்து இயக்கியஉன்னைப் போல் ஒருவன்" படம் வியாபார ரீதியாக வெற்றியடை வில்லை. ஆனால் 1964 ஆண்டு நடைபெற்ற திரைப்பட விழாவில் 3ஆம் விருதினைப் பெற்றது. முதல் விருது பெற்ற சத்யஜித்ரேயின் படத்தை மிகவும் ரசித்து, பாராட்டிய கலைஞன் ஜெயகாந்தன்.

ஜென்னடி ரகாலீப், இயக்குநர்,

ரஷ்ய பண்பாட்டு மய்யம், சென்னை

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் வெறும் படைப்பாளர் மட்டுமல்ல. செயல்பாட்டாளரும் கூட.. பொது நலம் பயக்கும் பணிகள் பலவற்றிற்குத் தன்னால் முடிந்த பங்களிப்பை நல்கியவர். ரஷ்யாவில் ஜெயகாந்தன் அவர்களுக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். ஜெயகாந்தனின் ஆற்றல், தனித்தன்மையைப் பெருமைப்படுத்திடும் விதமாக ரஷ்ய நாடு வெளிநாட்டவர்களுக்கு வழங்கிடும் Order of Friendship (இந்தியாவின்பாரத ரத்னா" விருதுக்கு ஒப்பானதாக ரஷ்யாவில் கருதப்படுவது) அரும் உயரிய விருதினை வழங்கியது. ஜெயகாந்தனின் நினைவுகளை அவரது படைப்புகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்று பெருமை சேர்ப்போம்.

முனைவர் .சிவதாணு பிள்ளை, ஏவுகணை விஞ்ஞானி, திட்ட இயக்குநர், “பிரமோஸ்"

நான் எழுதியபிரமோஸ்' வெற்றிக் கதை புத்தகத்தின் வெளியீட்டு விழாவினை சென்னையில் ஏற்பாடு செய்திருந் தனர். அந்த விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களுள் ஜெயகாந்தனும் ஒருவர். உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் வருவாரா, மாட்டாரா என்ற அய்யப்பாடு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்தது. விழாவும் தொடங்கிவிட்டது. ஜெயகாந்தன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘நான் கிளம்பி வருகிறேன். ஒரு வீல் சேருக்கு ஏற்பாடு செய்திடுங்கள்' என்றார். சொன்னபடியே நிகழ்ச்சிக்கு வந்திருந்து பாராட்டிப் பேசிவிட்டுத்தான் சென்றார். எனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியே ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி என்பதில் எனக்கு வருத்தம் கலந்த பெருமையும் உண்டு.

முகம்மது அலி, சிங்கப்பூர்:

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் என்னைக் கவர்ந்த பெரிய மனிதர்கள் யார் யார்? எனக் கேட்டார்கள். நான் சிலரைக் குறிப்பிட்டுவிட்டு பாடலாசிரியர் ஜெயகாந்தன் என்றும் சொன்னேன். உடனே கேள்வி கேட்டவர்எழுத்தாளர் ஜெயகாந்தன்' என திருத்த முற்பட்டார். இல்லை இல்லை பாடலாசிரியர் ஜெயகாந்தன் என வலியுறுத்திச் சொன்னேன். சில பாடல்களை எழுதியிருந்தாலும், வாழ்வில் தான் பார்த்தவற்றை அப்பட்டமாக பாடல் மூலமும் வெளிப்படுத்தியவர் அவர். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்திரைப்படத்தில் இடம் பெற்றகண்டதைச் சொல்லுகிறேன்; உங்கள் கதையைச் சொல்லுகிறேன்என்ற பாடல் வாழ்வின் எதார்த்தங்களை அறிவுரையாக மக்களுக்குப் புரிய வைத்தது.

சிவகேசவன், அமெரிக்கா:

ஜெயகாந்தனின்புதிய வார்ப்புகள்' சிறுகதையை நாடகமாக்கி எனது கலைப்பணியைத் துவக்கினேன், நல்ல பாராட்டுதலும் கிடைத்தது.

டாக்டர் மதுரகன் செல்வராஜா, சிறீலங்கா:

ஜெயகாந்தன் கதைகளின் சிறப்பு - அவைகளில் வரும் பாத்திரப் படைப்புகளின் விளக்கம், அவை பற்றி ரசனை சிறப்பாக இருக்கும். விளிம்பு நிலை மனிதர்களின் நிலை பற்றி ஜெயகாந்தன் அளவிற்கு எதார்த்தமாகக் கூறிய எழுத்தாளர்கள் யாரும் கிடையாது.

ஜெயக்குமார் (ஜேகே), கலை இயக்குநர்:

ஜெயகாந்தன் அவர்களைப் பார்த்த, பழகிய வாய்ப்புகள் குறைவு. இருப்பினும் ஜெயகாந்தன் அவர்களின் கலை, இலக்கிய உணர்வு இயல்பானது. எதார்த்தத்தை பிரதிபலிக்கக் கூடியது.

பால சுகுமார், இங்கிலாந்து:

தனது படைப்புகளின் மூலம் எதார்த்த வாழ்க்கையை கோடிட்டுக் காட்டியவர். எதார்த்த மனிதர்களை அவர்களது மொழியிலேயே, இயல்பாகப் பேச வைத்த மாபெரும் படைப்பாளி ஜெயகாந்தன் அவர்கள்.

பி.பாலாசேகர், முசிறி:

ஜெயகாந்தன் அவர்களின் வயதிற்கும், எனக்கும் பழகிடும் நெருக்கம் இல்லையென்றாலும், அரிமா சங்க நிகழ்ச்சி ஒன்றிற்கு அவரை விரும்பி அழைத்தோம். நீண்ட காலமாகக் காத்திருப்பிற்குப் பின்னர், வர சம்மதித்து வருகை தந்தார். ஒரு நிகழ்ச்சிப் பங்கேற்பில் என்னை பெயர் கொண்டு அழைத்திடும் அளவிற்கு உறவாகக் கருதினார். சென்னை வரும் பொழுதெல்லாம் அதற்குப் பின்னர் அவரைச் சந்திக்காமல் ஊர் திரும்பியதில்லை. மிக இள வயதிலேயே தனது படைப்பிற்காக சாகித்திய அகாடமி விருதினை பெற்றவர் ஜெயகாந்தன்.

நாசர், முற்போக்கு சிந்தனை நடிகர்:

ஜெயகாந்தனின்முத்தாயிஎனும் சிறுகதையை ஏற்ற இறக்கத்தோடு, உணர்ச்சி பொங்க வாசித்து எழுத்தில் இருந்த படைப்பை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரது  மனத்திரையில்  ஓடவிட்டார் நடிகர் நாசர். ஜெயகாந்தனின் படைப்புகளை இந்த அணுகுமுறையில் பதிவு செய்திட்டு பரப்பிடலாமே என பலர் கருத்துத் தெரிவித்த நிலையில், தான் அத்தகைய முயற்சிக்கு, பங்களிப்பிற்கு அணியமாக, இருப்பதாகக் நிகழ்ச்சியின் பொழுது நாசர் அறிவித்தார்.

சமஸ், இந்து தமிழ்த்திசை:

ஜெயகாந்தனின் படைப்புகள் வெளிப்படுத்திடும் கருத்துகளிலே பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால் ஜெயகாந்தனின் படைப்புத் திறனைப் போற்றாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

பார்த்திப ராஜா:

வாழ்க்கையின் தரிசனத்தை அனைவருக்கும் காட்டியவர் ஜெயகாந்தன். சந்தர்ப்ப சூழலில் ஒரு பெண்மணி லாட்டரி சீட்டு வாங்கிட, அந்த லாட்டரிச் சீட்டுக்கு ஒரு லட்சம் பரிசு கிடைத்த நிலையில் அந்த பெண்மணிக்கு ஏற்படும் மனநிலையின் வெளிப்பாட்டைநான் என்ன செய்யட்டும்?‘ என்ற சிறுகதை மூலம் துல்லியமாகக் காட்டிய எழுத்தாளர் - படைப்பாளி ஜெயகாந்தன் ஆவார்.

முருகையா நாராயணமூர்த்தி, கனடா:

எழுத்து, அரசியல், திரைப்படம் எனும் மூன்று தளங்களிலும் தடம் பதித்தவர் ஜெயகாந்தன் அவர்கள். பதித்த தடங்கள் அவரைப் பொறுத்த அளவில் அழுத்த மானது; சமமானது. எழுத்துலகில் பெற்ற சிறப்பினை, அரசியலில் பெற்ற சில சிறப்பினை, திரைப்படத் துறையில் பெற்றிடவே இல்லை அவர். தமிழ் திரைத் துறையில் அவர் பதித்த தடங்கள் ஆய்வுக்கு உரியவை. ஆய்வின் ஆழத் தில் நிச்சயம் அவைகள் போற்றுதலுக்கு உரியவையாக்கி விடும். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு ஜெயகாந்தனின் புகழுக்கு பெருமை சேர்த்திடுவோம்.

நன்றி...

தொகுப்பு: வீ.குமரேசன்

Comments