கேரளத் தேர்தலில் வாக்குச்சாவடியிலிருந்து பாதியிலேயே கிளம்பிய பா.ஜ.க. முகவர்கள்

திருவனந்தபுரம், ஏப்.9 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், ‘மெட்ரோமேன்சிறீதரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பாஜக, வாக்குப் பதிவு நாளன்று பல இடங்களில் காணாமல் போனது.

கேரளத்தில், வலுவான மும்முனைப் போட்டி நடந்த ஒரு சிலதொகுதிகளைத் தவிர, பெரும்பாலானஇடங்களில் பாஜக முகவர்கள் பாதியிலேயே வாக்குச் சாவடிகளைக் காலிசெய்துவிட்டுக் கிளம்பினர்.

மேலும் பல இடங்களில், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎப்) ஆதரவாக செயல் பட்டனர்.கலமாசேரியில், யுடிஎப் உடன் பாஜக மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஏற்ப, வாக்குப்பதிவு நாளில் பாஜக முற்றிலும் போட்டியிலிருந்து விலகியது. கொல்லம் மாவட்டத்தில், கருநாகப்பள்ளி, இரவிபுரம், கோட்டாரக்கரா, கொல்லம் மற்றும் குண்டறா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியபோதே பாஜக முகவர்கள் வெளியேறினர். கருநாகப்பள்ளியில், ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக வாக்குகள் அப்படியே யுடிஎப்-க்கு திருப்பி விடப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா போட்டியிடும், ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிபாடு தொகுதியில் அதிக எண் ணிக்கையிலான வாக்குப்பதிவு முகவர்களை பாஜகதிரும்பப் பெற்றது. காயம்குளத்தில் பாஜக-வின் கோட்டை என்று கூறப்படும் பத்தியூர், கண்டலூர் மற்றும் தேவிகுளங்கராவிலும் முகவர்கள் யாரும் இல்லை. கடுமையான போட்டிநிலவிய மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியிலும் பல பஞ்சாயத்துகளில் பாஜகவுக்கு பூத் முகவர்கள்இல்லை.

கண்ணூர் மாவட்டத்தில், பாஜக வேட்பாளர் இல்லாத தலசேரி, அழிக்கோடு, கண்ணூர், கூத்துப் பரம்பு, பேராவூர் தொகுதிகளிலும், கோட்டயத்திலும் யுடிஎப் உடன் பாஜககூட்டு சேர்ந்தது. இதேபோல திருச்சூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், பாஜகவுக்கு சாவடி களில் முகவர்கள் இல்லை. பாஜக வேட்பு மனுவை நிராகரித்த குருவாயூர் தொகுதியில் இது இன்னும் தெளிவாகத் தெரிந்தது. நடிகரும், பாஜக வேட்பாளருமான சுரேஷ்கோபி ஒரு சில சாவடிகளை பார்வையிட்ட கையோடு காலையிலேயே திருவனந்தபுரத்திற்கு திரும்பினார்.

குமரகத்தில், பாஜக பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் யுடிஎப் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால், கேரளத் தேர்தல் வழக்கம்போல இருமுனைப் போட்டியாகவே அமைந்தது.

 

Comments