பிற இதழிலிருந்து....

 உண்மைகளை மறைப்பதால் கரோனாவைத் தடுக்க முடியுமா?

கரோனா அலையின் வீச்சு அதிகரிக்கும் சூழலில், இந்திய அரசு இயந்திரம் வழக்கம்போல, மக்கள் பார்வையை மறைக்கும் திரையைக் கீழே இறக்கும் சமிக்ஞைகள் வெளிப்படலாகின்றன.

பல முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட இந்தியா வில் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், இங்கு வெளியாகும் கரோனா தொற்று எண்ணிக்கைக்கும் உண்மையான பாதிப்புக்கும் இடையில் பெரிய இடைவெளி நிலவுகிறது. இந்தச் சூழலில் கரோனா மரணங்களை மறைக்கும் வேலை யிலும் அரசுகள் இறங்கியிருப்பது வெட்கக்கேடான நிலையாகும். இது ஏற்கெனவே உள்ள தீவிரமான நிலையை மேலும் மோசம் ஆக்கிவிடும்.

கரோனா மரணங்கள் எப்படி மறைக்கப்படுகின்றன என்பதற் கான உதாரணமாக குஜராத் அரசின் ஏப்ரல் 16 செய்திக்குறிப்பைச் சொல்லலாம். அரசுக் கணக் கின்படி அன்றைய கரோனா மரணங்களின் எண் ணிக்கை 78. ஆனால், அகமதாபாத், சூரத் உள்ளிட்ட ஏழு நகரங்களில் மட்டும் அன்றைக்கு 689 சடலங்கள் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதைக்க அல்லது எரியூட்டப்பட்டிருப்பதை ஊடகங்களின் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. உத்தரபிர தேசத்தின் லக்னோவில் மின் மயானங்களில் தொடர்ந்து சடலங்கள் எரியூட்டப்படுவதன் காணொ லிகள் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, மயானங்களை மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் பொருட்டு தடுப்புகள் அமைக்கப்பட்ட செய்திகள் வெளியான தையும் இங்கே நினைவுகூரலாம். வைரல் நிமோனியாவால் ஏற்பட்ட இறப்புகள் மட்டுமே கரோனா மரணங்களாகவும், ஏனைய மரணங்கள் வெவ்வேறு காரணங்களாலும் எழுதப்படுகின்றன என்கிறார்கள். கரோனாவால் உயிரிழந்தோரின் சடலம் அதற்குரிய வழி முறையோடு கொண்டு செல்லப்படாமல், பலருடைய பங்கேற்புடன் இயல்பான இறுதி நிகழ்வுகளோடு கொண்டு செல்லப் படும்போது தொற்று மேலும் பலருக்குப் பரவுவதற்கு அதுவும் ஒரு வாய்ப்பாக மாறிவிடுவதோடு, நிலை மையின் தீவிரத்தை மக்கள் மத்தியில் சுருக்கியும் விடுகிறது.

கரோனாவை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிறது. ஏற்கெனவே மோசமான சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்த மாநிலங்கள் தங்கள் கட்டமைப்பை வலுப்படுத்திக்கொள்ளவும், ஒரு பேரிடரை எதிர்கொள்ள முன்கூட்டித் தயாராக வும் போதுமான அளவுக்கு அவகாசம் இந்தியாவுக்கு இயல்பாகவே கிடைத்தது. ஏனென்றால், இத்தாலியைப் போன்றோ, அமெரிக்காவைப் போன்றோ கடுமை யான நெருக்கடியை கரோனாவின் தொடக்கச் சீற்றத்திலேயே இந்தியா எதிர்கொள்ளவில்லை. தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் இருந்த அன்றைய நிலையிலேயே நம் சுகாதாரக் கட்டமைப்பின் போதாமைகள் நிபுணர்களால் சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால், ஒன்றிய அரசும் சரி; பல மாநில அரசுகளும் சரி; ஓரளவுக்கு மேல் கரோனாவைத் தீவிரமாகக் கருதித் திட்டமிடவில்லை என்பதையே அதிகரிக்கும் மரணங்கள் வெளிப்படுத்துகின்றன. நிலைமை மேலும் மோசம் அடையும் முன் சுதாரிக்க வேண்டும் என்றால், மக்களை ஒருங்கிணைத்தே கிருமியை எதிர்கொள்ள வேண்டும். உண்மையை மக்களிடம் மறைப்பது கேடு விளைவிக்கும்.

நன்றி: ‘இந்து தமிழ்த் திசை', 22.4.2021

Comments