துறை சார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம்

 டி.என்.பி.எஸ்.சி. தகவல்

சென்னை, ஏப்.11 ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துறை சார்ந்த தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை, அதாவது மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஜூன் 2021இல் நடைபெற இருக்கும் துறைத் தேர்வுகளில் கணினி வழித் தேர்வினை அறிமுகம் செய்கிறது.

அதற்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வு முறை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித் தேர்வாக நடைபெறும். விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகளை பொறுத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத் தேர்வு வகையிலேயே தொடரும்.

கணினி வழித் தேர்வுகள் வருகிற ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும். விரிந்துரைக்கும் வகையிலான எழுத்துத் தேர்வு 27ஆம் தேதியில் இருந்து நடைபெறும். கொள்குறி வகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்து தேர்வுகளை ஒருங்கிணைத்து எழுதவிருக்கும் தேர்வர்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருவேறு நாள்களில் எழுத வேண்டும். இந்த தேர்வை எழுத இருக்கும் தேர்வர்கள் தேர் வாணையத்தின் இணையதளத்தினை தொடர்ந்து கண் காணிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா 2ஆவது அலைக்கு தவறான கொள்கைகளே காரணம்

மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.11 நாட்டில் கரோனாவின் 2-வது அலைக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் எனவும், சிறந்த பரிந்துரைகளை ஏற்காமல் ஆணவத்துடன் செயல் படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கரோனாவின் 2ஆவது அலை வேகமெடுத்து வருகிறது. முதல் அலையின் வேகத்தைவிட இந்த முறை மிகுந்த வீரியமுடன் பரவுவதால் லட்சத்துக்கு மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் விழிபிதுங்கி உள்ளனர். சுழன்றடிக்கும் இந்த சுனாமியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான வழி தெரியாமல் மத்திய-மாநில அரசுகளும் கையை பிசைந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த 2ஆவது அலைக்கு மத்திய அரசின் தோல்வியுற்ற தவறான கொள்கைகளே காரணம் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைத் தளத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகள், கரோனா வின் ஒரு பயங்கரமான 2ஆவது அலை ஏற்பட வழிவகுத்துள்ளன. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை புலம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தடுப்பூசி போடுவதை அதிகரிப்பதுடன், மக்களின் கைகளில் பணமும் கொடுக்க வேண்டும். சாதாரண மனிதர்களின் வாழ்வுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் இந்த இரண்டும் முக்கியமானது. ஆனால் ஆணவம் மிகுந்த இந்த அரசிடம், சிறந்த பரிந்துரைகளை ஏற்பதில்அலர்ஜிகாணப்படுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பெங்களூரு உள்பட 8 நகரங்களில்

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

பெங்களூரு, ஏப்.11 கரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நேற்று (10.4.2021) முதல் அமலுக்கு வந்தது. சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பெங்களூரு உள்பட கருநாடகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கருநாடகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8ஆம் தேதி முதல் அமைச்சர் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினார்.

 அதைத்தொடர்ந்து, கருநாடகத்தில் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் 10ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உடுப்பி, மணிப்பால், பீதர், கலபுரகி, துமகூரு ஆகிய 8 நகரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதால், அங்கு இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை 8 நகரங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கும்.

Comments